உண்மையைத் தேடுதல்….

உண்மையைத் தேடுதல்….
-தேவகாந்தன்

உண்மையைத் தேடுதலென்பது அகம் சார்ந்த வி~யமாக காலகாலமாகப் பார்க்கப்பட்டு வந்ததென்பiதைத்தான், இதுவரையான மனித குல சிந்தனை வரலாறு தெரிவிக்கின்றது. அந்த உண்மையைக் கண்டடைவதற்கான ஞானம் தனிதனிதனின் இருப்பும், வாழ்வும், மறைவும், மறைவின் பின்னான வாழ்வுமென்ற தளங்களில் தேடப்பட்டதை மதம் சார்ந்த ஞானிகளில் வெளிப்பட்ட கருத்துக்கள் தெளிவாகக் சொல்லிநிற்கின்றன.

சத்தியத்தைக் காண காந்தியடிகள் நடத்திய ஒரு பெரும்வாழ்வு சத்திய சோதனையாக அறியப்பட்டது. ஷஅஹம் பிரஹ்மாம் அஸ்மி’ என்ற வாக்கியத்தின் அடிச்சிந்தனையாய்த் தொடர்ந்த தேடல் அது.

தனிமனித உண்மையன்றியும் ஒரு உண்மை இருப்பதனை கார்ல் மார்க்ஸின் ‘மூலதனம்’ சமூக உண்மையாக முன்வைத்தது.

சாதாரணன் இப்போது குழம்புகிறான், உண்மை என்பது எதுவென.
உண்மை எப்போதும் ஒவ்வொருகாலத்தின் தேவைக்குமேற்ப கட்டமைக்கப்பட்டு வந்ததென்பதே சமூக விஞ்ஞானத்தின் அறிகை. நேற்றைய சமூகத்தின் உண்மையல்ல, இன்றைய சமூகத்தில் இருப்பது. வரலாறானது எவ்வாறு அதிகாரத்தினால் எழுதப்பட்டதோ, அதுபோல் அதிகாரத்தை விரும்பிய குழுக்கான உண்மைகளையே அவை கட்டமைத்தன.

மதம் முடியைவிட அதிகாரத்தைக் கொண்டிருந்த காலத்திய உண்மையைவிட, முடி மதத்தைவிட அதிகாரம் கொண்டிருந்த பிற்காலத்தில் கட்டப்பட்ட உண்மை வேறாகவே இருந்தது. இதன்படி மகாபாரத காலத்து உண்மையைவிடவும் இராமாயண காலத்து உண்மை வேறாகவே இருந்திருக்க முடியும். தன்னகம் சார்ந்தே இன்றைய நவீன இலக்கியமும், சிந்தனையும் பார்க்கப்படுவது, மாறிய யுகத்தின் மாறாச் சிந்தனையது எச்சமாக காணப்பட முடியும்.

இன்றைய சமூகத்தின் உண்மைகூட எல்லா காலநிலைகளின் உண்மையைவிடவும் வேறானதே.

எது சரியென்ற கேள்வியைவிட, உண்மை காலகாலத்துக்கும் மாறியே வந்திருக்கிறது என்ற புரிதலே இங்கே முக்கியம்.

இந்த உண்மையென்பது எங்கே இருக்கிறதென்ற கேள்வி இனி முக்கியத்துவமானது.

சொல்லப்பட்ட எதுவும் உண்மையில்லை என்கிறார்கள். நிஜமான உண்மை இனிமேல்தான் கண்டடையப்பட வேண்டியதிருக்கிறது. அரசியலிலும், சமூகத்திலும், இலக்கியத்திலும், கலாச்சாரத்திலும் கவனத்திலெடுக்கப்படா பல உண்மைகள்.

எது நிஜமென்று நாம் மலைக்கிறோம்.

இருபத்தோராம் நூற்றாண்டில் வெறும் மூன்றாண்டுகளே கால்பதித்து மறைந்த ஒரு இருபதாம் நூற்றாண்டு மிகச் சிறந்த சிந்தனாவாதி ஒருவர் இருந்தார். புலப்பெயர்வுகளையும், அகதி நிலைமையையும், அவர்களின் கலாச்சார சிக்கல்களையும்பற்றி மிகநுட்பமாக அவர் சிந்தித்திருக்கிறார். அவர்தான் எட்வேர்ட் செயித் (1935-2003).

அவர் எழுதிய முக்கியமான கட்டுரையொன்றுண்டு. ‘பொதுப்புலத்தில் எழுத்தாளர் மற்றும் அறிவுஜீவிகள் என்பவர்களின் பாத்திரம்’ என்பது அது. பொதுவாக ஒரு சமூகம் அறிவுஜீவிகளைவிட எழுத்தாளர்களையே கொண்டாடுகிறது. அவர்களது படைப்பாற்றலின் காரணம் அது. அறிவுஜீவிகள் அந்தளவு தூரம் அச்சமூகத்தால் போற்றப்படுவதில்லை. காரணம் அவர்கள் விமர்சகர்கள் மட்டுமே. ஆனால் இருபத்தோராம் நூற்றாண்டில் எழுத்தாளர்-விமர்சகர் என்ற எல்லை அழிந்திருக்கிறது என்கிறார் எட்வேர்ட் செயித் அந்தக் கட்டுரையில். தமது கூற்றுக்கு ஆதாரமாக வோலே சோயிங்கா மற்றும் ஒக்ரோவியா பாஸ் ஆகியோரை அவர் குறிப்பிடுவார்.

இதை யோசிக்கும்போது துக்கப்பட நம் மத்தியில் நிறையவே வி~யங்கள் இருக்கின்றன.

திரும்பத் திரும்ப, எதிர்வினைகளைக் கண்டுகொள்ளாமல் சொன்னதைச் சொல்வதும், செய்வதைச் செய்வதும் சாதாரணமாக நடக்கிறது நம் சமூகத்தில். இது உண்மையை மறைத்து எடுக்கும் முயற்சியாக இருக்கிறபோதில், இதையேதான் உண்மையைத் தேடுபவர்களாலும் செய்யவேண்டி இருக்கிறது.

அகம் சார்ந்த பல வி~யங்கள் பேசியாகிவிட்டன. இனி புறம் சார்ந்து பேச நிறையத் தேவையிருக்கிறது.

நாம் இதுபற்றி யோசித்தாகவேண்டும்.

‘உண்மையைத் தேடுதல்’ என்ற இந்தப் பகுதி இ-குருவி வாசகர்களுடன் நான் கொள்ளும் இலக்கிய, சமூக, அரசியல் மற்றும் கலைகளின் கருத்துக்ளுக்கான சாளரம். என் வாசிப்பு, என் பயணம், என் சந்திப்பு, என் பங்கேற்பு என எதுவாயும் இச் சாளரத்தினூடாக வருவது இருக்கக்கூடும். ஆனால் உங்கள் சிந்னையை புரட்டிப் போடாவிட்டாலும் அதில் ஒரு துளியையேனும் சேர்க்கக் கூடியதாய் இப் பகுதி அமையுமென நிச்சயமாக நம்புகிறேன்.

தொடர்ந்து சாளரம்-1 இல் சந்திப்போம்.

000

இ - குருவி, ஜூன் 2015
.


Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்