கலாபன் கதை(2) 5


கொழும்புத் துறைமுகத்தில்
சரிந்து நிமிர்ந்த கனவு
-தேவகாந்தன்-

சிங்கப்பூரை அடைந்த கப்பல் இரண்டு நாட்கள் தங்கிற்று துறைமுகத்தில். நாட்டை, குறைந்தபட்சம் நகரை, சுற்றிப்பார்க்க புதிய கடலோடிகளுக்கு குறைந்தபட்ச நேரம்கூடக் கிடைக்கவில்லை. அடையாளமாக ஒரு முன்தொகையாக இருபது வெள்ளிகள் ஆளுக்கு கிடைத்தன. அதைக்கொண்டு செய்துவிட சிங்கப்பூர்போன்ற நாட்டில் பெரிதாக எதுவுமில்லை. கலாபனின் கணக்குப்படி அது அவனது ஆறாவது சிங்கப்பூர் வருகை. தவனங்கள் பெரும்பாலும் அடங்கியிருக்கச் சம்மதித்தன.

மூன்றாம் நாள் அதிகாலையில் என்ஜின் புறப்பட தயார்நிலையில் வைக்கப்பட்டது. எட்டு மணியளவில் அது எடுத்துவந்து கல்லணை வாயில் கடந்து கடலில் விடப்பட்டது. அவ்வளவு மர்மமான ஒரு பயணத்தை கலாபன் அத்தனை வரு~ கால அனுபவத்தில் எதிர்கொண்டதில்லை. கப்பல் எங்கே போகிறது? அதனுடைய அடுத்த துறைமுகம் எது? ஆசியாவா, ஐரோப்பாவா, ஆபிரிக்காவா, அமெரிக்காவா?

பூடகத்துள் பயணம் தொடர்ந்துகொண்டிருந்த வேளையில் ஒருநாள் எதிர்ப்பட்ட றேடியோ அலுவலரை கலாபன் அடுத்த துறைமுகம் எது என விசாரித்தான். அம்மாதிரி வி~யங்கள் வெளியே தெரியவேண்டாமென சிலவேளைகளில் றேடியோ அலுவலர்களிடம் சொல்லிவைக்கப்படுவது உண்டு. அந்த வி~யத்திலும் அவ்வாறான ஒரு தடை றேடியோ அலுவலருக்கு இடப்பட்டிருந்தது. ஆனாலும் தம் தனிமையை உறுதிப்படுத்திக்கொண்டு, ‘நம்பமாட்டாய், கப்பல் கொழும்புக்குப் போகிறது. யாரிடமும் சொல்லிவிடாதே’ என மெதுவாக றேடியோ அலுவலர் கூறிச் சென்றார்.

கலாபனுக்கு பெரிய அந்தரமாகப் போய்விட்டது. கடவுளே, இந்த விஷயம் முன்னரே தெரியாமல் போய்விட்டதே. மனைவி பிள்ளைகளைப் பார்த்து ஆறு மாதங்களாகின்றன. தெரிந்திருந்தால் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு கொழும்பிலுள்ள அவளுடைய சித்தப்பா வீட்டுக்கு வரச்சொல்லி தகவல் அனுப்பியிருக்கலாமே. ஒருமுறை பார்த்தால் எவ்வளவு சந்தோ~மாயிருக்கும்! இரண்டு நாட்கள் பிள்ளைகளோடும் மனைவியோடும் கூடவிருக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பம் வீணாகப்போய்விட்டதே எனப் பிரலாபப்பட்டான் கலாபன்.

ஏழாவது ஆண்டாக கப்பலில் வேலைசெய்கிறான் அவன். ஒருபோதும் அவன் வேலைசெய்த எந்தக் கப்பலுமே கொழும்பு வந்ததில்லை. காலித் துறைமுகத்தைக் கடந்துபோன சமயங்களுண்டு. இரவிலானால் அதன் வெளிச்சவீட்டு விளக்கைத்தான் அவன் கண்டிருக்கிறான். தன் குடும்பத்தாரை அழைத்து கப்பலைக் காட்ட முடியாத கவலை கலாபனிடத்தில் கனகாலமாய் இருந்தது. அவர்களுக்கு கப்பல் தெரிந்திருந்தது. ஆனால் கப்பலின் இயங்குமுறை, அதில் வாழும் அனுபவம் தெரியாது. இப்பொழுது அவன் வேலைசெய்யும் கப்பலே கொழும்புக்கு வருகிறது. அழைத்துவந்து காட்டி எவ்வளவு சந்தோ~மாக அவர்களை அனுப்பியிருக்க முடியும். கலாபனின் நினைவுகள் பொங்கிக்கொண்டே இருந்தன.

கப்பலின் பயணம் வரும்வழியில்போலவே சீராக இருக்கவில்லை. கடலின் கொந்தளிப்பில் பாதி சரக்கேற்றிய கப்பல் மந்த கதியில் அலைகளோடாடியபடியே சென்று கொண்டிருந்தது. இது கப்பலின் வெளி நிலைமையென்றால், உள்ளக நிலைமை அதைவிட மோசமாக இருந்தது. புதிய கப்பலோடிகள் வரும்போது இருந்ததுபோலவே தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டும், வாந்தியெடுத்துக்கொண்டும், தலைச்சுற்றில் ஆங்காங்கே படுத்துக்கொண்டும் செல்லும் நிலையே தொடர்ந்தது.
கப்பல் பயணவழிக் கண்காணிப்பை கப்ரனிலிருந்து, முதல் கப்பல் அலுவலர், இரண்டாம் கப்;பல் அலுவலரென உயர் எல்லா அலுவலர்கள்வரை பகலும் இரவுமாய்ச் செய்யநேர்ந்தது. ஆனாலும் வரும்போதிருந்த உணர்ச்சிக் கொந்தளிப்புப்போல் போகும்போது இருக்கவில்லையென்பதை காணமுடிந்த கலாபனுக்கு அது ஆச்சரியமாக இருந்தது.

மூன்றாம் நாள் ஒரு மாலை நேரத்தில் கப்பல் கொழும்புத் துறைமுகத்தினெதிரே நின்று நங்கூரமிட்டது.

கலாபன் மனது துள்ளி மகிழ்ந்தது. எப்படியும் ஏஜென்ற் ஒன்பது, பத்து மணிக்கிடையில் கப்பலுக்கு வருகின்ற சந்தர்ப்பம் நிச்சயமாகவே ஏற்படும். அப்போது ஏஜென்ரிடம் நிலைமையைச் சொல்லி ஒரு தந்தியை எழுதிக்கொடுத்து அதை உடனடியாகவே அனுப்பக் கேட்கலாம். துறைமுகத்தில் இடம் கிடைக்காமல் மேலும் ஒருநாள் கப்பல் அந்தமாதிரியே தங்க நேரிட்டால், கப்பல் துறைமுகம் செல்கிற நாளில் மனைவி பிள்ளைகளைப் பார்க்கிற சந்தர்ப்பம் நிச்சயமாக அவனுக்கு ஏற்படும்.
கபினுக்குச் செல்வதும், விஸ்கி அருந்துவதும், பின் வெளியே வந்து சிகரெட் புகைத்தபடி கப்பலைநோக்கி ஏதாவது வள்ளம் வருகிறதா என நோக்குவதுமாக கலாபன் நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தான்.    அவனது கை வீசும் காற்றில் சட்டைப் பையில் வைத்துள்ள தந்தி வாசகமும் விலாசமும் எழுதிய துண்டு பறந்துவிடாமல் இருக்கிறதா என அடிக்கடி தொட்டுப் பார்த்துக்கொண்டது.

பத்து மணியானது… பத்தரையானது… இன்னும் ஏஜென்றின் வள்ளம் வரவேயில்லை. கண்ணுக்கெட்டிய தூரத்தில்கூட கடலில் எந்த வெளிச்சத்தின் கப்பலைநோக்கிய நகர்வும் இல்லை. அன்றைக்கு ஏஜென்ற் வராதநிலையில் நாளை மாலையில் கப்பல் துறைமுகத்துக்குப் போனாலும் ஒரு தந்தி எதுவித பிரயோசனத்தையும் செய்துவிடாது. அதற்குமேல் தந்தி ஊர் போய், மனைவி ரயிலோ பஸ்ஸோ எடுத்து கொழும்பு வருவதும், கலாபன் அவர்களைக் காண்பதும் நடக்கமுடியாத காரியங்கள். ஏஜென்ற் அப்போது வந்தால் மட்டும்தான் எதுவுமே சாத்தியமாகும்.

அக் கையறு நிலையில் ‘மருதடிப் பிள்ளையாரே, நீர்தான் ஏதாவது வழிசெய்யவேணும்’ என்று உள்ளத்துள் பிரார்த்தித்தான் கலாபன்.
யோசிக்க அவனுக்கே பின்னர் அது ஆச்சரியத்தை விளைத்தது. எப்போது அவ்வாறான நம்பிக்கையில் அவன் கடவுளைப் பிரார்த்தித்திருக்;கிறான்? தானே நோயில் விழுந்தபோதுகூட ‘ஒண்டுக்கும் பயப்பிடவேண்டாம், பெரியாஸ்பத்திரிக்கு கொண்டுபோய் வாட்டில விடுங்கோ’ என்று சொன்னவன்தானே அவன்? அவனுக்கு எப்போது, எப்படி, ஏன் இந்த மனநிலை வந்தது? குடும்பமென்பது அவ்வளவு பாந்தமானதா? அது உடலுண்ர்வு என்பதையும் மீறி அன்பும், அரவணைப்பும், தேடுகையும், அக்கறையும் கொண்டுள்ளதா?

வேறொரு சமயத்திலானால் ஒரு துறைமுகத்தின் முன்னால் அவன் எவ்வளவு கூத்தாடியிருப்பான்? எந்த இடத்தில் இன்பம் நிறையக் கொட்டிக்கிடக்கிறது என எத்தனை தேடலோட்டங்களுக்கு மனம் திட்டமிட்டிருக்கும்? ஆனால் அப்போது தங்கிநிற்கப்போகிற இரண்டு நாட்களில் தன் குடும்பத்தை ஒருமுறை பார்த்துவிட அவன் துடியாய்த் துடித்துக்கொண்டிருந்தான்.

அதோ… தூரத்தில் ஒரு வெளிச்சப் புள்ளியின் நகர்வு. நிச்சயமாக வள்ளம்தான். அலைகளில் குதித்துக் குதித்து வந்துகொண்டிருந்தது. ஆனாலும் சுற்றிவர மூன்று கப்பல்கள் நங்கூரமிட்டு நிற்கிற சமயத்தில் எந்தக் கப்பலை நோக்கி அது வந்துகொண்டிருக்கிறது என்ற தவிப்பாகிப் போனது அவனுக்கு. ஆம், அது அவர்களது கப்பலைநோக்கித்தான் வருகிறதென்பது இப்போது அவனுக்கு நிச்சயமானது. இன்னொரு தடைக்கல் உண்டு அவனது முழுச் சந்தோ~த்துக்குமிடையில். அது… ஏஜென்றின் வள்ளமாக இருக்கவேண்டும்.
வள்ளம் கப்பலை நெருங்கிய அளவில் தொங்கு படிக்கட்டு இறக்கப்பட்டது. ஒரு இளைஞன் கீழே நின்றிருக்கையிலேயே அவனைக் கண்டு கையசைத்தான். கலாபனுக்கு இப்போது நிச்சயமாகிவிட்டது, அது ஏஜென்ற்தானென்பது. தன்போலொரு காத்திருப்பை சில ஏஜென்றுகளால் உணரமுடிகிறதுதான். அக் கையசைப்பு சும்மா, ஹாய்! சொல்லுகிறதுக்கானதல்ல. கடிதத்திற்கோ, வேறெதற்கோ காத்திருக்கும் ஒரு உயிரின் துடிப்பை ஆறுதல்படுத்துவது அது. வருபவன் நல்லவனாகவும் இருப்பானென நினைத்தான் கலாபன்.

மேலே வந்த ஏஜென்ற் ‘லங்காவத?’ என்றதற்கு, கலாபன், ‘ஒவ்’ என்றான். ஏஜென்ற் மேலே சென்றான்.

இன்னொரு விஸ்கியை குடித்துவிட்டு அறையை மேலோட்டமாய் ஒதுங்கவைத்துக்கொண்டு அவன் அவசரமாக வெளியே வந்தான்.

ஏஜென்ற் அதிகநேரம் மேலே தாமதிக்கவில்லை. கீழே வந்தவனிடம் கலாபன் தன் அவசரத்தைச் சொல்லி, அந்த துண்டிலுள்ள செய்தியை அவசரத் தந்தியில் அன்றிரவே அனுப்பிவிட முடியுமா எனக் கேட்டான். ஏஜென்ற் கண்டிப்பாக அனுப்புவதாகக் கூறி அதை வாங்கினான். கலாபன் அவனை கபினுக்கு வரக்கேட்டான், சிறிதுநேரம் இருந்துவிட்டுப் போகலாமேயென.
விளங்கிக்கொண்ட ஏஜென்ற், ‘வெலாவ ந. மே பி அற் போர்ட் ருமாறோ நைற்’ என்று கூறிவிட்டு இறங்கினான். தன் கையிலிருந்த ஐந்து அமெரிக்கன் டொலர் தாளை அவனிடம் நீட்டி தன்னிடம் இலங்கை ரூபா இல்லையென்றான் கலாபன். பரவாயில்லையெனக் கூறிவிட்டு இறங்கிவிட்டான் அவன்.

கலாபன் கத்திக் கேட்டான்: ‘நம மொகத?’

‘லால்…லால் பெரெரா.’

வள்ளம் கப்பலைவிட்டு விலகும்வரை அந்த இடத்திலேயே நின்றிருந்தான் கலாபன். மறுபடியும் கையை அசைத்துவிட்டு ஏஜென்ற் நிற்க வள்ளம் சீறிக்கொண்டு பறந்தது.

அந்தளவு அவசரமாகப் போகிறவன் கொழும்பு தந்தி தொலைத் தொடர்பு அலுவலகம் சென்று தனது தந்தியை அனுப்புவானா என்று மனத்துள் குடைந்த கேள்வியுடனேயே கலாபன் படுக்கச் சென்றான்.

தூக்கம் பிடிக்காத இரவைக் கழித்துவிட்டு காலையில் வெளியே வந்தான் கலாபன். இயல்பிலில்லாத ஒரு தடுமாற்றத்திலும், பதட்டத்திலும் உள்ளக நிலை இருப்பதுபோல் ஒரு தோற்றம். மேல்மட்டத்திலேதான். காலையில் எதிர்ப்பட்ட முதன்மைப் பொறியியலாளர் மிக்க சந்தோஷமான மனநிலையில் அவனைக் கடந்து சென்றபோது சிரித்தபடி காலை வந்தனம் சொன்னார். அந்தளவு சந்தோஷத்தோடு பதில் வந்தனம் சொல்லத்தான் கலாபன் நினைத்தான். வந்தனம் வந்தது. ஆனால் சந்தோ~ம் வரவில்லை.
அலுவலரின் மெஸ்ஷு க்கு சென்றான். முதன்மை அலுவலர் ஆம்லெட் போட்டுக்கொண்டிருந்தார். அவரும் அளவுக்கு மீறிய மகிழ்ச்சியோடு இருப்பதாகவே தோன்றியது கலாபனுக்கு.

ஒன்றும் புரியாதவனாக, மெஸ் ஊழியன் தலைச்சுற்றில் வேலைசெய்ய இயலாதிருந்ததால் தாம்தாமுமே காலையுணவைச் செய்யவேண்டிய சூழ்நிலை அவர்களிடத்தில் எவ்வாறு அந்தளவு மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருக்;க முடியுமென்று, மனத்தைக் குடைந்தவாறே கோப்பி போட்டு எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.

அப்போதுதான் எதிரே வந்த றேடியோ அலுவலர் கலாபனிடம் சொன்னான்: ‘ லண்டனிலிருந்து கப்பல் கம்பெனி; உரிமையாளர்களில் ஒருவரே கொழும்பு வந்திருக்கிறார். பம்பாயில் எடுக்கப்பட்ட முழு கடலோடிகளும் இங்கே இறக்கப்பட்டு புதிய கடலோடிகள் எடுக்கப்படவிருக்கிறார்கள். எல்லாருமே மாலைதீவுக் கடலோடிகளாம்.’

‘உண்மையாகவா?’ கலாபன் அதிர்ந்தபடி கேட்டான்.

‘நூறு வீதம். நாளை காலை எட்டு மணிக்கு கப்பல் உள்ளே செல்ல தயார்நிலையில் இருக்கும். அனேகமாக பத்து மணிக்கு துறைமுகத்தினுள்ளே இருப்போம். பதினொரு மணிக்குள் கப்பலின் புதிய ஊழியர்கள் வந்துவிடுவார்கள்’ என்றான் றேடியோ அலுவலர்.

கலாபனால் தொடர்ந்தும் அந்த இடத்தில் நிற்க முடியவில்லை.
கோப்பியையும் குடிக்க முடியவில்லை.

அவனுக்கு அப்போது விஸ்கி வேண்டியிருந்தது.

கோப்பியை அப்படியே கொண்டுபோய் ஊற்றி கப்பை அலம்பிவைத்துவிட்டு அறைக்கு வந்து விஸ்கி போத்தலை எடுத்தான்.

பம்பாயில் எடுக்கப்பட்ட கடலோடிகள் அனைவரும், ஏறக்குறைய இருபத்தி மூன்று பேர் அவர்களில், கொழும்புத் துறைமுகத்தில் இறக்கப்படுகிறார்களென்றால், அவனும் பெட்டியைத் தூக்கவேண்டித்தான் வரும்.
அவன் கேட்டபடி லால் பெரெரா அந்த தந்தியை உடனடியாகவே அனுப்பியிருந்தால், அன்று மாலை ரயிலோ பஸ்ஸோ எடுத்து பிள்ளைகளுடன் புறப்பட்டுவிடுவாள் அவனது மனைவி. அவர்கள் வந்தால் அவ்வாறான புதிய சூழ்நிலையில் இயல்பாய் ஏற்படக்கூடிய துக்கத்தைவிடவுமே அது பயங்கரமாகவிருக்கும்.

அவர்கள் வருவது அவனை அழைத்துக்கொண்டு போவதற்கேமாதிரி ஆகிவிடும் அது. அவனால் அதைத் தாங்கமுடியாது.

வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் அப்படியான ஒரு நிலைமையை அவன் தாங்குவான். ‘கப்பல் கொழும்புக்கு வந்திருக்கிறது. இரண்டு நாட்கள் நிற்கும். உடனடியாக பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு கொழும்புக்கு வந்து உன் சித்தப்பா வீட்டில் தங்கியிரு. எங்களது கப்பல் ஏஜென்ஸி லேடி மக்லறன்ஸ். அது கொல்பிட்டியில் இருக்கிறது. கேட்டால் யாரும் சொல்வார்கள். வந்தவுடன் கொழும்பு ஏஜென்றின் அலுவலகத்தை அறிந்து வந்த விபரத்தை சொல்லிவிடு’ என்றல்லவா அவசர தந்தி அனுப்ப ஏஜென்றை கேட்டிருந்தான்.
‘மருதடிப் பிள்ளையாரே, அந்தத் தந்தியை அவன் அனுப்பாதிருக்;கவேண்டுமே!’

கலாபன் பெரும்பாலும் அன்று முழுவதும் போதையிலேயே இருந்தான்.
இரவானது. கடல் கொந்தளிப்பு அடங்கியிருந்தது சிறிது. தூரத்தே தெரியும் ஒளிப்புள்ளிகளைக் கண்டபடி நின்றுகொண்டிருந்தான் அவன்.
ஒரு சில மணி நேரங்கள் அவனது சந்தோஷத்தைச் சிதறவைத்துவிட்டதோடு, துக்கத்தையும், அவமானத்தையும்கூட சேர்த்துச் சுமத்திவிட்டதேயென நினைக்க கலாபனுக்கு கண் கலங்கியது. அந்தக் கப்பல் வேலை முடிவதன் முன் தன் வீட்டு வேலைகள் முடிந்துவிடுமென நம்பியிருந்தான். அத்திவாரத்துடன் நின்றிருந்த வேலைகள் விறுவிறுவெனத் தொடங்கி தன் கனவு வீடு தான் திரும்பிவரும்போது தன்னை வரவேற்க நிமிர்ந்து நிற்குமென அவன் கனவு கண்டுகொண்டிருந்தான்.

அந்த கனவு மாளிகைதான் அப்போது சரியத் தொடங்கியிருந்தது.
இரவை எப்படியோ கழித்தான் கலாபன்.

காலையில் சிவந்த கண்களுடன் வெளியே வந்தான்.

துறைமுகத்துள் செல்ல தயாராய் நின்றிருந்தது கப்பல்.

அது அவனது வேலைநேரம் இல்லாதபடியால் அவன் எந்திர அறை செல்லவேண்டியிருக்;கவில்லை.

இரவுப் போதையை சமாளிக்க மேலும் குடிக்கத்தான் வேண்டும்.
அதை அவன் செய்தான்.

அப்;போது ஏஜென்ற் வள்ளம் வந்தது.

ஏஜென்ற் வர கலாபன் கேட்டான், ‘இரவு அந்த தந்தியை அனுப்பினாயா?’ என்று.

‘அதற்குப் பதிலுமே கிடைத்துவிட்டது. இப்போது உன்னுடைய குடும்பம் கொழும்பில். அவர்கள் தங்கள் உறவினர் வீட்டில் இருப்பதாக உன்னிடம் சொல்லக் கேட்டார்கள்’ என்றான் ஏஜென்ற்.

கலாபன் நன்றி கூறினான்.

அது அவன் அப்போது விரும்பியிராத ஒரு உதவிக்கானது.

ஏஜென்ற் சென்ற சிறிதுநேரத்தில் கப்பல் துறைமுகத்தைநோக்கி நகர ஆரம்பித்தது.

மத்தியானமளவில் கப்பலை துறைமுக மேடையில் கட்டினார்கள்.

அதற்கு மேலே நடந்த, நடக்கும் காரியங்களை அறிய கலாபன் விரும்பவில்லை. ஒரு மணியளவில் புதிய கடலோடிகளை அழைத்துக்கொண்டு ஏஜென்ற் வந்தான். முதல் அலுவலர் அவரவருக்குமான வேலையை சொன்னார்.

கம்பெனி உரிமையாளர் வந்தார். கப்ரினும் அவரும் மெஸ்ஸிலிருந்து பேசிக்கொண்டிருந்தனர். கலாபன் உள்ளே எதுவோ எடுத்துக்கொண்டு வெளியே வருகிறபோது, கப்பரின் மூன்றாவது பொறியியலாளன் என்று ஏதோ சொன்னது கேட்டது. பின் தொடர்ந்த உரையாடல் அவனுக்குக் கேட்கவில்லை.
சுற்றுவெளி நடைபாதையில் நின்று சிகரெட் புகைத்துக்கொண்டு இருக்கையில் அப்போது இரண்டாவது பொறியியலாளர் வந்தார். ‘இப்படி நிற்காதே, கலாபா. கப்பல் கம்பெனி உரிமையாளனே வந்திருக்கிறான். நீ வேலை உடையைக்கூட இன்னும் போடவில்லை. உடுப்பை மாற்றிக்கொண்டு வேலை செய்வதுபோல் பாசாங்காவது செய்’ என்றான் அவன்.
‘இல்லை, நிக்கோ. எனக்கு பெட்டியை அடுக்கி தயார்செய்ய வேண்டியிருக்கிறது’ என்றான் கலாபன்.

‘ஏன்’ என்றான் நிக்கோ.

கலாபனுக்கு ஆத்திரம் வந்தது. ‘இரண்டு மணிக்கு இறங்கவிருக்கிறேன். அதுவரைக்கும்கூட நான் வேலை செய்யவேண்டுமா? என்னால் முடியாது. வேண்டுமானால் கம்பெனி என் ஒருநாள் சம்பளத்தைப் பிடித்துக்கொள்ளட்டும்.’

‘நீ என்ன சொல்கிறாயென்றே எனக்குப் புரியவில்லை. பெட்டியை அடுக்கவேண்டும் என்றாய். ஏனென்று கேட்டால், ஒரு நாள் சம்பளத்தைக் கழி என்கிறாய். உண்மையில் உன்னுடைய பிரச்னைதான் என்ன?’ என்றான் நிக்கோ.

அது எங்கேயோ இடிக்கிறதை கலாபன் உணர்ந்தான்.

மனத்தில் தெம்பு வந்தது. சொன்னான்: ‘பம்பாயில் ஏறிய அத்தனை பேருமே இங்கே இறக்கப்படுகிறார்களாமே!’

‘அது உண்மைதான். அதற்கென்ன? புதிதாக எடுக்கப்பட்ட அத்தனைபேரும் இறக்கப்படுகிறார்கள், ஆனால் உன்;னைத் தவிர.’

அந்த ஆடி மாத வெக்கையில் தெறித்தது அலையடித்த கடல்நீரா, வான் சுரந்த மழைநீரா?

கலாபனின் மனத்தில் மகிழ்ச்சி கொடிகட்டி ஏறியது.

‘ரஞ்சி, கனவு நிமிர்ந்துவிட்டது’ என்று கத்தவேண்டும் போலிருந்தது.

இருந்தாலும் அடக்கிக்கொண்டு, ‘நிச்சம்தானா, நிக்கோ’ என்றான்.

‘நிச்சயம்தான். கப்ரினிடம் சிங்கப்பூரில் வைத்தே சொல்லிவிட்டேனே, இந்தளவு பழைய கப்பலில் உன்னைப்போலொரு வேலை தெரிந்தவன் இல்லாவிட்டால் நானும் இறங்கிவிடுவேனேன்று. ஒன்றும் யோசியாதே, கீழே இறங்கு’ என்றுவிட்டு நிக்கோ அப்பால் நகர்ந்தான்.

உடனேயே கபினுக்குப் போய் ஓவரோல் எனப்படுகிற வேலை உடுப்பை அணிந்துகொண்டு கீழே இறங்கினான் கலாபன்.

அன்றைக்கு அவன் கடிதமெழுதவேண்டி இருக்கவில்லை. தன் கனவு நிமிர்ந்த விதத்தை அவன் நேரடியாகவே தன் மனைவியிடம் சொல்வான்.

000

தாய்வீடு மே 2015

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்