இலக்கியமும் அதன் பயனும்



இலக்கியமும் அதன் பயனும்


ஒரு சமூகத்தினது நாகரிகத்தின் அடையாளம்தான் அந்த மொழியிலுள்ள இலக்கியம். கல்வெட்டுக்கள், பாண்டங்கள், ஆயுதங்கள்போன்ற அகச் சான்றுகளால் நிரப்பப்பட முடியாதுபோகிற சரித்திரத்தின் இடைவெளிகளை இலக்கியமே நிரப்புகிறது.

ஆயினும் இலக்கியத்தின் பயன் இதுமட்டுமேயில்லை. உணர்வுகளுக்கான பயிற்சி அளிப்பதும் அதன் நோக்கம்தான். தீட்டித் தீட்டி தன் மொழியின் தத்துவம், விஞ்ஞானம், மருத்துவம் ஆகிய துறைகளுக்குச் சொற்களைப் பாவனைக்காய் வழங்குவதும் இலக்கியத்தின் பயனே. எனினும் அதன் உணர்வுப் பயிற்சியையே முதன்மையானதாகக் கூறமுடியும். ஏறக்குறைய முப்பத்தைந்து வருடங்களாக இந்த நம்பிக்கையே என் எழுத்தின் ஆதாரமாக இருந்துவருகிறது.

அக் கருத்து என் மனத்தில் முளைவிட்ட தருணத்தை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

1965ஆம் ஆண்டு அமரர் திரு. அ.ச.ஞானசம்பந்தன் இலக்கிய யாத்திரையாக இலங்கை வந்திருந்தார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும், பின் எனது ஊரான சாவகச்சேரிக்கும்கூட அந்த யாத்திரை நீண்டது. சந்திரபுர ஸ்கந்தவரோதய மகாவித்தியாலயத்தில் கம்பராமாயணம் குறித்து ஏதோ ஒரு தலைப்பில் அன்று அவர் உரை நிகழ்த்தினார்.

அப் பேச்சில் அவர் சொன்னது இது: ‘இலக்கியம் மனித உணர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கிறது. ஒரு முதியவள் வீதியில் நடந்து வந்துகொடிருக்கிறபொழுது தடுக்கி விழுந்துவிடுகிறாளென்று வைத்துக்கொள்ளுங்கள். யாராவது ஓடிப்போய்த் தூக்கிவிட்டு உதவுகிறார்கள். அதுதான் மனித மனத்தின் இயல்பாகும். ஆனால் எத்தனை பேருக்கு ஓடிப்போய் உதவ மனம் உந்துகிறது? வெகுபேருக்கு இல்லை. ஆனாலும் அந்த இரக்க உணர்வு கூடியோ குறைந்தோ எல்லாரிடமும் இருக்கத்தான் செய்கிறது. அந்த இரக்க உணர்வைப் பயிற்சியால் சிறிது சிறிதாக அதிகரிக்க முடியும்.

‘அப்படியானால் அதற்குப் பயிற்சி கொடுப்பது எப்படி? எப்போதும் கிழமாகிப்போனவர்கள் வந்து நமது உணர்வின் பயிற்சிக்காக வீதியிலே தடுக்கி விழுந்துகொண்டிருக்க முடியுமா?

‘முடியாது. அதனைத்தான் இலக்கியம் செய்கிறது.’

அன்று இதயத்தில் விழுந்த இந்தக் கருத்தை அடைகாத்தபடிதான் என் எழுத்துலகப் பிரவேசம் பின்னால் நிகழ்ந்தது.

இலக்கியம் இரக்கத்தை மட்டுடமல்ல, ஒவ்வொரு மனித உணர்வுகளையுமே பதப்படுத்துகிறது. சாந்தம் கொள்ளவும், அவசியங்களில் ரௌத்திரம் கொள்ளவும்கூட அது பயிற்றுகிறது.

கடந்த நூற்றாண்;டின் ஒரு கட்டம்வரை நம் வாசிப்பும் ரசனைத் திறனும் அகலம் சார்ந்தவையாகவே இருந்து வந்தன. இப்போது வாசக ரசனை ஆழம்…ஆழமென்று உணர்வுச் சுழியாட்டத்துக்கு அதிக கொள்ளளவு கேட்கிறது.
இலக்கியத்தில் இந்தச் சுழியோட்டம் முக்கியம். அதுதான் ஒருவகை அதிர்வுகளோடு வந்து மனித மனத்தில் பாதிப்பைச் செய்கிறது. பாதிப்பு இல்லாமல் பதிவு இல்லை. இதைச் செய்யும் எழுத்தெல்லாம் நல்லன.

என் எழுத்துக்கள் இந்த ஆதாரத் தளத்திலேயே எப்போதும் கட்டியெழுப்பப்பட்டு வந்துகொண்டிருப்பதாய் இப்போதும் நான் நம்புகிறேன். இலக்கிய மேன்மைக்காக, உணர்வின் உச்சத்துக்காக கருத்தின் விசாலத்தை நான் சில படைப்புக்களில் காவு கொடுத்தது இதற்காகத்தான்.

இலக்கிய வாசிப்பை நான் சற்று அதிகமாக அழுத்துவது அது கரும் உணர்வுப் பயிற்சி காரணமாகவே. அது மனிதனை மனிதனாக வாழவைக்கிறது, மனிதத்துவத்துக்காகப் போராடச் செய்கிறது.

என் குழந்கைகளுக்குப்போலவே சகல இளைஞர்களுக்கும்…அதனால்… நான் கூறுவது… இலக்கியம் பயில்க … என்பதே.

0


(விருந்தினர் பக்கமென்று ஏதோ பத்திரிகையோ, சஞ்சிகையோ, இணையமோ வெளியிட்ட பகுதியில் இந்த ‘இலக்கியமும் அதன் பயனும்’ என்பது வெளியாகியிருக்கிறது சுமார் 1998அளவில். ஒரு பதிவுக்காக இதன் பதிவேற்றம் இங்கே.)

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்