நூல் விமர்சனம் 5 ‘கானல் வரி’


தமிழ்நதியின்

‘கானல் வரி’

நாவல்,குறுநாவல்,சிறுகதைஎனஎந்தவடிவத்துள்ளும் அடங்காது தனக்கென பிறவடிவமொன்றெடுத்த படைப்பு


கானல் வரியென்றதும் ஓர் இலக்கிய வாசகனின் ஞாபகத்தில் முன்வந்து நிற்பது சிலப்பதிகாரக் காப்பியம்தான். மாதவியுடனான பதினோராண்டுக் காதல் வாழ்க்கையை உதறியெறிந்து விட்டு,‘சலம் புணர் கொள்கைச் சலதி’யென மாதவியைத் தூற்றி கோவலன் அவளை நீங்கி மறுபடி கண்ணகியைச் சென்றுசேரக் காரணமாய் அமைந்தது அவள் பாடிய கானல் வரிப் பாடல். ஒருவகையில் அக் காப்பியத்தின் மையப் பகுதியாய் அமைந்து, பிற முக்கிய நிகழ்வுகளின் விளைவுகளுக்குக் காரணமாய் அமைவதும் இந்தப் பகுதிதான்.

அகநிலை வாழ்வின் முக்கோணமாய் அமைந்து கோவலன், கண்ணகி, மாதவி ஆகியோருக்கிடையிலான காதல், கற்பு என்ற இருநிலைகளில் காப்பியம் எடுத்தோதப்பட்டுள்ளது எனக் கொள்ளமுடியும். இதை யோசிக்கிறபோதே,‘கற்பின் கொழுந்தும்,காதல் கொழுந்தும்’ என்ற தலைப்பில் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் மலேசியாவில் இரண்டு  மணி நேரத்துக்கு மேலாக ஆற்றிய உரைதான் நினைவுக்கு வருகிறது. கற்பு,காதல் ஆகியவற்றுக்கிடையிலான இந்த முக் கதாபாத்திர உறவினை எடுத்தியம்பியதாக சிலப்பதிகாரத்தைக் கொள்ள
முன்முனைப்புக் காட்டியது அந்த உரைதான் என்று தோன்றுகிறது. அதுவரை ஓர் ஆடற் கணிகையாய்க் கணிக்கப்பட்டு வந்த மாதவி கோவலனின் காதற் கிழத்தியாய்ப் போற்றப்பட ஆரம்பித்தது அன்றிலிருந்துதான்.

தமிழ்நதியின் ‘கானல் வரி’யும் ஏறக்குறைய இந்தமுக்கோண வடிவத்தில் காதல்,கற்பு என்றவிடயங்களின் ஆழமான வரிப்புடன் ராகவன், மௌலி, மாதவி ஆகியோருக்கிடையிலான உறவுநிலையைப் பேசுவதாகக் கொள்ளமுடியும். ஆயின், சிலம்பு இரண்டு பெண்களும் ஓர் ஆணும் என்று கதையை எடுத்துரைக்கையில்,‘கானல் வரி’யோ இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணுமென தன் பார்வையின் நியாயங்களை நிறுவ கதையை விரிக்கிறது.

கோவலன் பிரிந்துசென்ற பின்னால் மாதவி தீட்டி சித்திராபதி மூலம் அவனுக்கு ஒரு மடல் அனுப்புகிறாள். அதுபோல் தன்னிலை விளக்கமாய்த் தொடங்கி, அந்த உறவுநிலையின் உடைப்பாய் முடியும்படி தமிழ்நதியின் மாதவி எழுதும் கடிதம் அமைகிறவேளையில், அதையே தன் வடிவமாகவும்கொண்டு உருவெடுத்திருப்பது இந்தப் படைப்பு.

மாதவி எழுதும் கடிதம் காதலின் தோல்வியில் விளையும் அத்தனை வலியினையும் கொண்டிருக்கிறது என்பது மிகையான கூற்றல்ல. ஒருவகையில் இதை மௌலியென்ற காதலனுக்கு மாதவி எழுதும் கடிதமாகவன்றி , தன்னிலைத் தடுமாற்றத்தினால் ஒருவகை மனப்பிறழ்வு நிலையை அண்மிக்கும் மாதவிக்கு அந்த அவலத்திலிருந்தான தனது மீட்பின் முயற்சியாகவும் அது தென்படுகிறது.

காதல், காமம் என்ற இரு நிலைகள் மிகத் துல்லியமற்றவை. இவை ஒன்றாக இருக்கும் தருணங்கள் அரிதானவையெனினும், அவையே உன்னதம் பெறத் தக்கன. இவ்வாறான எந்தக் காதலும் பெரும்பாலும் இதுவரை வரலாறானதில்லை. தோல்வியுற்ற காதல்களே, உதாரணமாக ரோமியோ-யூலியற், சலீம்-அனார்க்கலி, படைப்பாளுமையால் வரலாறான தேவதாஸ்-பார்வதி காதல்களே, நிலைபேறும் இலக்கியக் கனதியும்பெற்று நிற்கின்றன. கானல்வரி மாதவியிடத்தில் இருந்தது காதலா,காமமா என்ற வினாவை எழுப்பவைத்து காதலுக்கும் காமத்துக்குமான எல்லைக்கோட்டை மறுவிசாரணைப்படுத்தி நிற்கிறது தமிழ்நதியின் ‘கானல் வரி’.

அவரது படைப்பில் அதீதநிலை செல்லும் மாதவியின் காதல், அகநிலை சார்ந்த அல்லது அகநிலைஅதிகமும் சார்ந்த, அளவுக்குமன்றி, காமவேட்கையாகவே சுரப்புக் கொள்வதாய் அனுமானிக்க படைப்பில் நிறைய இடங்கள் வாசகனுக்குத் திறந்திருக்கின்றன.

‘உன் கைகள் முழங்கால்களைத் தொடுமளவுநீண்டிருந்தன. நீச்சல் வீரனுக்குரிய உடல்வாகு உனது.  உள்ளொடுங்கிய வயிறும் பரந்த மார்பும் நீண்ட கைகால்களுமாக படுக்கையில் நேர்த்தியாகத் தோன்றக்கூடிய அழகு உனது’ என்கிறாள் மாதவி ஓரிடத்தில் (பக்: 24).

இந்த வரிகளில்,‘படுக்கையில்’ என்ற சொல் இல்லாமல் இந்தப் பகுதி வடிவுபெற்றிருப்பின், எந்தப் பெண்ணும் ஓர் ஆணிடத்தில் சாதாரணமாக எதிர்பார்க்கக்கூடிய ஆரோக்கியமான உடலும்,அந்தஉடலின் பின்னால் இருக்கக்கூடிய உழைப்பும், கலவியின் இயங்கு வலிதும் தெரியவந்திருக்கும். மாதவிக்கு அப்படியான ஆசை இருந்திருப்பின் அது நியாயமானதுகூட.
ஆனால் மாதவி படுக்கையில் விழுத்தித்தான் அந்த அழகை ரசிக்கிறாள். இது காமத்தின் பெருஈர்ப்பு மாதவியிடத்தில் இருந்ததை அப்பட்டமாகக் காட்டிவிடுகிறது.  இது மாதவியின் ஈர்ப்பு இயல்பானதில்லையெனவோ, நியாயமானதில்லையெனவோ நான் பொருள்படுத்துவதாக அர்த்தப்பட்டுவிடாது. மாதவி காதல்…காதல் எனக் கூவும் ஒவ்வொரு கணத்திலும், அது காமத்தை நோக்கிய அறைகூவலாகவே இருந்திருக்கிறது என்பதை அடையாளப்படுத்தவே குறிப்பிட்டேன்.

ராகவனுக்கும் மாதவிக்கும் இடையில் ஏற்படும் பிரிவுகூட, ராகவனின் மாதவிக்கான உடற்தேவைகளின் நிராகரிப்பால் நிகழ்வதையும் இங்கு ஞாபகம்கொள்ளவேண்டும்.

படைப்பாளியின் குறிப்புரையின் இறுதிப் பத்தி, இக்கதை படைப்பாளியின் சுயதரிசனமோவென ஒரு வாசகனை நியாயமாகவே ஐயப்பட வைத்துவிடுகிறது. வாசகன் கண்களில் மாதவியில் தமிழ்நதியின் முகத்தையே தரிசனம்கொள்ள  இது வாய்ப்பளித்துவிடுகிறது. படைப்பின் முழுமைக்குள்ளான பிரவேசத்தை இது எந்தவகையிலோ தடுக்கிறது. இந்த மயக்கம் விலக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது எனது எண்ணம்.

எழுபத்தொன்பது பக்க இந்நூலில் பதிப்பக தலைப்புப் பக்கம், பிரபஞ்சனின் முன்னுரை, படைப்பாளியின் குறிப்பு, சமர்ப்பணம் என்பவற்றுக்கானவை போக கதைக்கானது அறுபத்தொரு பக்கங்களே. படைப்பு அத்தனைக்குச்சிறிதானது. முக்கியமான மூன்று பாத்திரங்களுடன் முகம் தெரியாத மேலும் மூன்று நான்கு பாத்திரங்களுடன் கதைமுடிகிறது.

‘அன்புள்ள மௌலி, இப்படியொரு சம்பிரதாயமான வார்த்தையால்தான் இந்தக் கடிதத்தைக்கூடத் தொடங்கவேண்டியிருக்கிறது. ‘அன்புள்ள’ என்று உன்னை விளிப்பது, இப்போது உன்னைக் குறித்து என் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களுக்கு முரணானது என்று தெரிந்தபோதிலும், வேறெவ்விதமும் அழைக்கத் தோன்றவில்லை’ என்று தொடங்கும் படைப்பு, ‘அலைகளற சமுத்திரம் இனி என் மனம். மௌலி, உன்னிடமிருந்து என்றென்றைக்குமாக விடைபெற்றுக்கொள்கிறேன். உனதல்லாத மாதவி’ என முடிகிறவரையில் படைப்பு முக்கியமாக இணையின் பிரிவினதும்,காமத்தின் இழப்பினதும் வலிகளையே சுமந்துசென்றிருக்கிறது.

படைப்பு அதனளவிலான நிறைவையும், அதுபோல் பலவீனங்களையும் கொண்டிருப்பினும், இந்தவிடயத்தை இவ்வளவு உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துவதற்காக படைப்பாளி கையாண்டிருக்கும் கவிதைநடையின் சிறப்பை முக்கியமானதாகச் சொல்லமுடியும். இந்த விடயத்தை, காமத்தையும் காதலையும், பெரும்பாலும் விரசமற்றும் விகற்பமற்றும் வெளிப்படுத்த இந்த நடைபடைப்பாளிக்கு மிகுதியாகக் கைகொடுத்திருக்கிறது.

ஆரம்பத்திலிருந்து முடிவுவரை தான் வெளிப்படுத்த நினைத்த உணர்வையே இழுத்துச் சென்றிருக்கிறார் படைப்பாளி. அந்தஉணர்வு நிலை எங்குமே ஏற்ற இறக்கம் பெறுவதில்லை. சமதளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு வீதிவலத்தின் பின் கோவில் முன்னிலை வரும் ஒரு தேர்போல அலுங்காமல் குலுங்காமல் தன் முடிவை வந்தடைகிறது நாவல். இதை, கட்டமைக்கப்படும் நாவல்களின் உணர்வுநிலை ஏற்ற இறக்கங்களுக்கு அமையாததாகக்  கொள்ளும் அதேவேளையில், இந்தப் பலவீனமே இப்படைப்பின் தனித்துவமானதாகவும் கொள்ளவேண்டியிருக்கிறது.

‘ஆக, ‘கானல் வரி’யானது நாவல் என்பதிலிருந்து ஒரு குறுநாவலாக உருச்சிறுத்தது’ என்கிறார் படைப்பாளி தன் குறிப்புப் பக்கத்தில்.  இது குறுநாவலா என்றும் கேட்கலாம். ஏன் சிறுகதையில்லை என்ற கேள்வியும் என்னிடத்தில் உண்டு. பின்னால் இது சிறுகதைதானா என்ற கேள்விதொடரவும் இடமுள்ளபடைப்பு இது. நாவலாகாமல், குறுநாவலாகாமல், சிறுகதையுமாகாமல் இருக்கிற இந்தப் படைப்பு எந்த வகைமையில் சேரமுடியும்? அதனால்தான் இது தனக்குத்தானே ஒரு வடிவத்தைக்கொள்ள முயன்ற படைப்பு எனச் சொல்லமுடிகிறது.

 இப்படைப்பின் முக்கியத்துவம் இங்கிருந்தே தொடங்குகிறது.
கடிதங்களில் கதையும் உணர்வுகளும் பின்னப்பட்ட நாவல்கள் உள்ளன. தன்னிலையில் கதை விரித்த நாவல்களும் உள. ஆனால் ஒற்றைக் கடிதத்தில் உணர்வையும், கதையையும் இழுத்துச்சென்று கச்சிதமாக முடித்த படைப்பு இதுவொன்று என்றே சொல்லக்கிடக்கிறது. இது ஒருமுன்மாதிரியெனில், இந்த முன்மாதிரிப் படைப்பை இதற்காகவே முக்கியப்படுத்த முடியும்.

மேலும், ஒரு களவு அல்லது ஒரு கொலைப்பாட்டில் நேரடியான சமூக நியாயங்கள் தலையிட்டிருக்காததுபோல, இப்படைப்பு தனி மூவரின் காதலும் காமமுமான நிகழ்வாகமட்டும் ஆகியிருக்கவில்லை.

 இந்த அத்தனை நிகழ்வுகளையும் சமூகம் தன் விரிந்த கண்களால் பார்த்துக்கொண்டிருப்பதை உணரும் வண்ணமாகவே படைப்பு நடத்தப்பட்டிருப்பது இதிலுள்ள இன்னொரு சாதனை.

இன்னுமொன்றாக, படைப்பு தொடங்கும்பொழுதே மாதவியின் வலிகளது மூல உணர்வுடன் தொடங்கி, அவ்வுணர்வின் தொடர்ச்சிக்கான நிகழ்வுகளைக் குறிப்பதுடன் சென்று முடிவதைக் குறிப்பிட முடியும். கடித வடிவில் இதற்கு மேலான பாத்திரச் செறிவைக் காட்டிவிடமுடியுமென்றும் தோன்றவில்லை. இது இப் படைப்பின் வெற்றிநிலை என்பதைத் தயங்காமல் கூறமுடியும்

பார்க்கும்போது எனது வாழ்க்கையை முட்படுக்கையாக்கியதில், சிதைத்ததில் நீங்கள் இருவரும் சராசரி ஆண்களாகவே நடந்துகொண்டிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது’ என மாதவி ஓரிடத்தில் ( பக்:73) எழுதுகிறபோது, அவள்மேல் ஓர் அனுதாபம் தோன்றுகிறது வாசகனிடத்தில். அந்த அனுதாபமே அவளெடுக்கும் மௌலியைத் துறந்துவிடும் இறுதித் தீர்மானத்தை மிகநியாயமானதாக வரவேற்க வைக்கிறது. இந்த மாதவியின் திடம் கடைசிப் பக்கத்தின் கடைசிப் பகுதியில், ‘அலைகளற்ற சமுத்திரம் இனி என் மனம். மௌலி, உன்னிடமிருந்து என்றென்ளைக்குமாக விடைபெற்றுக்கொள்கிறேன்’ என்பதுவரை நீடித்துச் செல்கிறது. ஆனால்,‘உன் குட்டிதேவதை அபிதாவின் பட்டுக் கன்னங்களில் அன்பு முத்தங்கள்’ என தொடர்ந்து வருகையில், மாதவியின் அந்த முடிவிலுள்ள திடத்தின் மேலாக வாசகனைஅவநம்பிக்கை கொள்ள வைத்துவிடுகிறது.

ஏதிர்பாராத முடிவுகளை வாசகன் சூசகமாய்க் கொள்ள இடம்வைத்துவிடுகிறது இந்த வரி. வாசகனை ஏமாற்றும் இந்த வரியே படைப்பின் அர்த்த வெளிப்பாட்டில் தொடர்ந்துகொண்டிருந்த ஏமாற்றத்தையும் தூக்கியெறிந்துவிடுவதாக மாறிவிடுகிறது.

ஒரு பெண் படைப்பாளியினால் இத்தனை வெளிப்படையாக காம உணர்வுகள் வரிப்படுத்தப்பட்ட படைப்பு என்ற வகையிலும் இந்தப் படைப்பு முக்கியமானது. 2009இல் வெளிவந்திருக்கும் இப்படைப்பு, அடங்கிய வரிகளில் சொல்லியிருக்கும் அர்த்தங்கள் ஏராளம். பெண்ணிலைப் பார்வைக்கும்கூட சார்பாகவும், மாறாகவும் பலவிடயங்கள் இப்படைப்பில் உண்டு. இது வெளியான இந்த ஐந்து ஆண்டுகளில் இதுபற்றி பெரிதான பிரஸ்தாபம் இல்லையென்பது தமிழிலக்கிய வாசகப் பரப்பினது பிரக்ஞையின் ஆரோக்கியமின்மையையே எடுத்துக்காட்டுகிறது.

நூல்: கானல் வரி
படைப்பாளி: தமிழ்நதி

0


தாய்வீடு, 2014


Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்