சிலுவையில் தொங்கும் சாத்தான் -- மதிப்புரை

 சிலுவையில் தொங்கும் சாத்தான் (ஆப்பிரிக்கநாவல்,மொழிபெயர்ப்பு)
மொழிபெயர்ப்பு: அமரந்தா,சிங்கராயர்



கடந்த ஒரு தசாப்த காலமாகத்தான் மூன்றாம்  உலக இலக்கியங்களின், குறிப்பாக ஆப்பிரிக்க இலக்கியத்தின், வருகை தமிழில் தீவிரமாகியிருக்கிறது. ஆப்பிரிக்க இலக்கியம் இருண்டகண்ட இலக்கியமாக இருந்த நிலைமை இனியில்லை. அதன் அறிமுக ஆரம்ப முயற்சிகளைச் செய்துவைத்தோரில் முதல் நினைப்புக்கு வருபவர் இந்திரன். அவரது ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ (1982) அதன் உள்ளோடியிருந்த சில குறைபாடுகளோடும்கூட முக்கியமான மொழியாக்கமாய் இருந்தது.

இந்த நிலையில் அண்மையில் மூன்று ஆப்பிரிக்க நாவல்களின் மொழியாக்கங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. முதலாவதாக என்.கே.மகாலிங்கத்தின் மொழிபெயர்ப்பிலான சின்னுவா ஆச்சிபியின் ‘சிதைவுகள்’(1998), இரண்டாவது எஸ்.பொ. மொழிபெயர்த்து வந்துள்ள செம்பென் ஒஸ்மானின் ‘ஹால’ (1999),  மூன்றாவதாக அமரந்தா-சிங்கராயர் மொழிபெயர்த்த கூகிவாதியாங்கோவின் ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’(2000).

மூன்று நாவல்களுமே வேறுவேறு ஆப்பிரிக் மொழிகளை மூலமொழிகாய்க் கொண்டவை. சிதைவுகள்  நைஜீரிய மொழியிலும்,  ஹால செனகல் மொழியிலும், சிலுவையில் தொங்கும் சாத்தான் கிக்கூயூ மொழியிலும் படைப்பாக்கம் பெற்றன.  இம் மூன்றும் அந்தந்த மொழிகளில் சமமான முக்கியத்துவம்  பெற்ற நாவல்களே. எனினும், ‘சிலுவையில் தொங்கும் சாத்தா’னில் விரியும் சமூக அரசியல் பின்புலமும், மொழிபெயர்ப்பில் காட்டப்பட்ட அக்கறையும்  இந் நாவலின் முக்கியத்துவத்தைக் கோரி நிற்கின்றன.

இதை ஒரு தீவிரவாசிக்குட்படுத்தியதோடு, நூலின் மொழிபெயர்ப்பு சார்ந்த கூறுகளைத் தனியாகவும், கலாநேர்த்தி கருத்தியல் சார்ந்த கூறுகளைத் தனியாகவும் நோக்கினேன். இந்த மதிப்புரை நாவலின் மொழிபெயர்ப்பு சார்ந்த அம்சங்களிலேயே கவனம் கொள்கிறது.

ஆப்பிரிக்க மொழியான கிக்கூயூ (Gikuyu) வில் வெளிவந்து, இதன் மூலநூல் ஆசிரியராலேயே ஆங்கிலத்தில் மொழியாக்கமாகி, அதிலிருந்து தமிழாக்கம் பெற்று வந்திருக்கிறது இந்த நாவல்.

ஒருமொழி இலக்கியத்தை அதன் இயல்பான தன்மைகள் தொனிக்க இன்னொரு மொழியில் பெயர்த்துவிட முடியாதென்பார்கள். ஒரு மொழியின் இலக்கணக் கூறுகளைவிடவும் அம்மொழிபேசும் மக்களின் பண்பாட்டுக் கூறுகள் படைப்பில் உள்ளோடி ஒரு மொழிபெயர்ப்பாளனைச் சிரமப்படுத்திக் கொண்டிருக்கும். அம்மொழிபேசும் மக்களின் மனிதவியல் கூறுகள்வேறு பெயர்ப்புமொழியில் கொண்டுவரப்பட வேண்டிய நுண்ணியஅம்சங்களை நழுவச் செய்துகொண்டிருக்கும். மூல மொழியிலிருந்து ஆங்கிலத்தில் பெயர்க்கும்போது மட்டுமில்லை, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யும்போதும்  இவ் இடர்ப்பாடுகளை ஒரு மொழிபெயர்ப்பாளன் அடைகிறான்.

தழுவி எழுதுவதா, மொழிபெயர்த்து எழுதுவதா என்ற பிரச்னை தவிர்க்க முடியாதபடிக்கு இங்கே உருவாகிறது. அதற்குள் புகவேண்டிய அவசியமில்லை இப்போது.  அதை மொழிபெயர்ப்பவன் தன் உரிமையாகக்கொண்டு தீர்மானித்துக்கொள்ள விட்டுவிடலாம்.

ஆப்பிரிக்க மொழிகள் அனைத்தும் அதிர்பு மொழிகள் என்று சொல்லப்படுகின்றன. வடஆப்பிரிக்காவின் செமிற்றிக் கூட்ட மொழிகளுக்குக்கூட இந்தத் தன்மை ஓரளவு இருக்கிறது. அவற்றில் தொனி நளினம் குறைவு. அவை உரத்துப் பேசப்படும் மொழிகளாகும். அதற்கான கூறுகளை அம்மொழிகள் கொண்டிருக்கும். மொழிபெயர்ப்பில் அந்த அதிர்வுகளை உணரக் கூடியதாய்  இருக்கவேண்டும் உரையாடல். அதுமுக்கியமானது.

இன்னொரு ஆப்பிரிக்க மொழியான ‘புதர்’ மொழிபற்றிய தகவலொன்று ஆப்பிரிக்க மொழிகள்பற்றிய ஆழ்ந்த கவனத்தை நம்மிடம் கோருவதாய் இருக்கிறது. இம்மொழிபேசும் மக்கள் இரவிலே பேசும்போது நெருப்பு மூட்டி அதன்  வெளிச்சத்தில் நின்றுதான் பேசுவார்களாம்.  ஏனெனில் சைககள் தெரியாவிட்டால் அவர்களின் பேச்சு விளங்காது என்கிறார்கள் (Elimentary chapters in Comparative Philology by G.W.Wade).

ஆப்பிரிக்க மொழிகளின் இத்தகு குணநலன்களின் ஊடாகவே இந் நாவலின் தமிழ் மொழிபெயர்ப்புப் பற்றிய தரநிரணயத்தை நாம் மேற்கொள்ளப் போகிறோம்.

கிக்கூயூ மொழிபற்றி நமக்கு நேரடியாகத் தெரியாது. ஆனாலும் ஆப்பிரிக்க மொழிகளின் பொதுத் தன்மைபற்றி நமக்கு ஓர் அபிப்பிராயமுண்டு. அதை நாவலில் கொண்டுவருகிறவிதமான ஒரு மொழிபெயர்ப்பை நல்ல மொழிபெயர்ப்பென்று கொள்ளலாம். ஒருமொழி தன்னுள் மரபுகளாய் பழமொழிகளாய் நாட்டார் பாடல்களாய்ச் செழித்து நிற்பது. இச் செழிப்பை மூல நூல்போல் மொழியாக்கத்தில் கொண்டுவரும் மொழிபெயர்ப்பாளன் தன் சவாலில் வெற்றிபெற்றவனாகிறான் என்று துணிந்து சொல்லமுடியும்.

‘சிலுவையில் தொங்கும் சாத்தா’னில் இந்தத் தன்மைகள் எவ்வளவு தூரத்துக்குச் சாத்தியமாகியுள்ளன?

ஒரு வீட்டின் விறாந்தையில் கிடந்த குழந்தையை பசியை அடக்கமுடியாமல் ஊருக்குள் புகுந்துவிட்ட நரியொன்று கவ்விக்கொண்டு ஓடிவிடுகிறது. இந்நிகழ்வினைப் புரிவது எப்படி? குழந்தையினது தாயின் அல்லது மனித இனத்தின் பார்வையிலும், நரியின் மிருக வர்க்கப் பார்வையிலும் என இரண்டு விதமாக நவீன தர்க்கவியல் இதைப் பார்க்குமென்பார்கள். மிருக வர்க்கத்தின் பார்வையில் அச்செயல் நியாயப்படுத்தப்படுவதுதான்  நவீன சிந்தனையின் புதுமையான அம்சம். இதற்கு ஏறக்குறையச் சமமான சொல்லாடலொன்று கிக்கூயூ மொழியில் இருக்கிறது.  ‘சிறுத்தைக்கு சொந்தமாகப் பிறாண்டத் தெரியாது. அது அதற்குச் சொல்லித் தரப்பட்டது’ என்று நாவலில் கிக்கூயூ மொழிச் சிந்தனையாக ஒரு தொடர் வருகிறது.  இந்த இடத்தில் மொழிபெயர்ப்பு தளர்ச்சியடைந்திருந்தால், ஜென் கதைபோல் அச்சொட்டாய் இருக்கும் அந்தச் சொல்லாடல் அவ்வாறு அமையாது போகவே வாய்ப்புண்டு.

நாவலின் பத்தாம் அத்தியாயத்தின் தொடக்கத்தில் கதைசொல்லியின் வார்த்தைகளில் இவ்வாறு வரும்: ‘முன்புபோலஅதேவேகத்தில் என்னால் தொடர முடியாது. குடுவைகளிலுள்ள விதைகளெல்லாம் ஒரேமாதிரியானவை அல்ல. எனவே கதையின் வேகத்தையும் தன்மையையும்  நான் மாற்றப்போகிறேன்.’

அதன்படி பத்தாம் அத்தியாயத்திலிருந்து நாவலின் வேகமும் தன்மையும் மாறவே செய்கின்றன. மூல ஆசிரியனின் இந்தப் பிரகடனத்தில் மொழிபெயர்ப்பாளன் தீர்க்கமாய்க் கவனம் செலுத்தாவிட்டால் பெயர்ப்புமொழியிலே இந்த வேகமும் தன்மையும் மாற்றமடைந்துவிடாது. சொல்லுக்குச் சொல்லான வெறும் மொழிபெயர்ப்பில் இவ்வகைத் தளம் அடைந்துவிடமுடியாதது. படைப்பு நிலைக்கு மொழிபெயர்ப்பாளன் உயரும் அவசியம் இந்த இடத்தில் உண்டு.

நாவலின் வீச்சுமிக்க மொழிபெயர்ப்புக்கு உதாரணமாய் ஒரு சிறுபத்தியைப் பார்கலாம்: ‘சாத்தான் உண்டா  இல்லையா?  நான் குறிப்பிட்ட அந்த முடிச்சின் சூட்சுமமே அதில்தான் இருக்கிறது. அங்கே போய் என் எல்லாவித சந்தேகங்களுக்கும் முடிவுகட்ட விரும்புகிறேன். பிறகுதான் என் இசையமைப்பு வேலையைத் தொடரமுடியும். ஏனெனில் முடிவில்லாத சந்தேகங்கள் வாட்டும் மனதுடன் என்னால் செயல்பட முடிவதில்லை. அமைதி! ஒரு இசையமைப்பாளனுக்கு மனதில் அமைதி தேவைப்படுகிறது’ (பக்கம் 140).

ஒரு மொழிபெயர்ப்பு நூலின் ஆக்கத் திறனை மூல மொழியினை வாசிப்பதின் மூலமாகத்தான் துல்லியமாக அறியமுடியும். ஆனாலும் வாசிப்பின் வேகத்தைத் தடுக்காத மொழியாட்சியும், கருத்து இடறுதல் வராத நடைநேர்த்தியும் ஒரு தேர்ந்தவாசகனை நூல்பற்றி அறியவைத்துவிடும். ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ வாசக சுகத்தை எங்கேயும் தடுப்பதில்லை. மொழி அவ்வளவு சுளுவாக ஓடுவதை மொழிபெயர்ப்பின் விசேடமென்றே கூறவேண்டும். இலக்கியச் சுவைஞன் இந்நாவல் மொழிபெயர்ப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அம்பலம்.காம், 02 ஆடி 2000

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்