புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்:




 புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்:
ஓர் ஒப்புநோக்கு


(இது அக்டோபர் 06 2012இல் தேடகம் சார்பில் நடைபெற்ற மறதிக்கெதிரான நினைவின் போராட்டம் என்ற கருத்திலான இரண்டு நாள் கருத்தரங்கில் முதல் நாள் நிகழ்வின் முதல் அமர்வில் வாசிக்கப்பட்ட உரைக்கட்டு. இதன் போதாமையை. விடுபடல்களை முன்னரே நான் கண்டிருந்தேன். ஆனாலும் இத்துறையில் மேலும் விரிவான தேடல்களுக்கும். பதிவுகளுக்கும் உதவக்கூடுமென்ற வகையில் அவ்வுரைக்கட்டை இங்கே வெளிப்படுத்த விரும்பினேன்.)

பகுதி ஒன்று

புலம்பெயர் இலக்கியம் என்ற விடயத்தில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழ், சிங்கள, ஆங்கில இலக்கியம் என்ற கூறுகளும், ஈழத்து இலக்கியம் என்ற பகுப்பில் ஈழத்து தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையக இலக்கியம் என்ற கூறுகளும் இத் தலைப்பிலான ஓர் உரைக்கட்டில் தலையிடும் தவிர்க்கமுடியாமை இயல்பாகவே எழும். அவ்வாறு அது எழுந்தாக வேண்டும். அதுவே சரியான பார்வையாக இருக்க முடியும்.

         புலம்பெயர் தமிழிலக்கியம் என்ற வடிவத்திலும் ஈழத்தவரின் ஆக்கங்களை மட்டும் கருதும் போக்கு  நிச்சயமாக தவிர்க்கப்பட்டாக வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து வந்து வேற்று நாடுகளில் வதிவோரின் தமிழ்ப் படைப்புகளையும் புகலிடத் தமிழிலக்கியமாகவே கொள்ளவேண்டும் என்ற கருத்தினையும் இவ்வுரைக்கட்டு கருத்திலெடுத்திருக்கிறது. இல்லாவிட்டால் பிரான்சில் வதியும் நாகரத்தினம் கிருஸ்ணா, இங்கிலாந்தில் வதியும் யமுனா ராஜேந்திரன், கனடாவில் வதியும் சு.கி.ஜெயகரன், ஐக்கிய அமெரிக்காவில் வதியும் காஞ்சனா தாமோதரன் ஆகியோரது ஆக்கங்களை எந்தவகையான வகைமைக்குள்ளும் கொண்டுவந்துவிட முடியாதுபோய்விடும்.

             ஈழத்துத் தமிழிலக்கியத்துடனான புலம்பெயர்ந்தோர் தமிழிலக்கியத்தினது ஒப்பீட்டுக்கு, பெரும்பாலும் முன் குறிப்பிடப்பட்டவர்களின் இலக்கியப் படைப்புகளின் தேவை அதிகமாக இல்லாமலாகும் என்ற நிலைமை இருந்தாலும், அவசியமான இடங்களில் இந்த ஒப்பீட்டை இவ்வுரைக்கட்டு தவறாது செய்திருக்கிறது.

             மேலும் முழுமையான இவ்வகையிலான ஓர் ஆய்வு பல்விகாசமும், பெரும் பரப்பும் கொள்ளக்கூடிய நிலைமையினைக் கருத்தில்கொண்டு, புலம்பெயர் தமிழ் இலக்கியத்தினதும், ஈழத்து தமிழிலக்கியத்தினதும் போக்கும் நிலைமையும் குறித்தான ஓர் ஒப்பாய்வு உரைக்கட்டாக இதைத் தயாரிப்பதே  பொருத்தமான வழிமுறையாகக் கைக்கொள்ளப்பட்டிருக்கிறது.

             இலக்கியமென்ற வட்டத்தினுள்ளும் இதுவரை மரபு சாராத கூறுகளான சிலவற்றின்  சேர்த்தியையும் உள்ளடக்கி, அன்றாட நிகழ்வுகளை முதன்மைப்படுத்தாத பத்திரிகைகள், பதிப்பகங்கள், மேலும் விமர்சனங்கள், ஆய்வுகள்,  நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கலை இலக்கியத் தொகுப்புகள் என்ற வகைமைகள் யாவும் ஒப்பீட்டின்போது கருத்தில் எடுக்கப்படவேண்டும் என்பதே இவ்வுரைக்கட்டாளனின் விருப்பமாகும். ஆனால் அவையவையும் தனித்துறைசார் விஸ்தீரணம் கொண்டிருப்பதால், இலக்கியத்தின் மூலக்கூறுகளான கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் ஆகியன மட்டுமே இங்கே முதன்மைப்பட்டிருக்கின்றன. ஆயினும் நூல்கள், படைப்பாளிகளின் பட்டியலிடும் வேலை பிரக்ஞைபூர்வமாக இங்கே தவிர்க்கப்பட்டிருக்கிறது என்பதையும் சொல்லவேவேண்டும்.

             ஈழத் தமிழரின் மேற்குலகப் பிரவேசம் கடந்த ஐந்து தசாப்தங்களாத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் இவர்களது புலப்பெயர்வுகளின்  நோக்கம் ஒரே தன்மையுடையதாக இருக்கவில்லை. எழுபதுகளில் நாட்டைவிட்டு ஓடியமையின் நோக்கம் அதிகமும் அரசியல் தஞ்சம்பெற்றவர்களினதாக இருந்தது. யுத்தத்தின் ஆரம்பகாலமாக இதைச் சொல்லலாம். பின்னால் சொந்த நாட்டின் இராணுவத்தினதும், போராட்ட இயக்கங்களினதும்  வன்முறைக்கெதிரான பெயர்தலாய் உயிரபயம் கேட்டு வருவதாக இருந்தது. பின்னால் தொண்ணூறுகளிலும் இரண்டாயிரத்திலும் குடும்ப அங்கத்தவர்களின் ஒன்றிணைவுக்கான வருகையாக புலப்பெயர்வின் நோக்கம் மாறியது. இதன் முதல் கட்டத்தில், முகர்வர்கள் மூலமான இரகசியக் குடியேறலாயும், பிந்திய கட்டத்தில் குடிபெயர்தல் ஒப்புமையாக சட்டவழிமூலமாகவும் இருந்தது.

             இந்தப் பெயர்வுகளின் வேறுபாடு கருதப்படவேண்டும். ஏனெனில் இவர்களிடமிருந்து உருவாகிய படைப்புக்கள் இவர்களின் புலப்பெயர்வின் நியாயமாக இருந்தே வந்திருக்கும். இந்த நியதிகளின் அலகுகளைக் கட்டவிழ்ப்பதற்கு நமக்கு இன்னும் வாய்ப்பு கைவந்திருக்கவில்லை. அப்படியில்லையெனில் மொழியின் கையாளுகைத்திறன்கொண்டு இவர்கள் இலக்கியத்தின் நோக்கத்தில் செய்த வன்முறையாக இத்தகைய படைப்புகளைக் கருதவேண்டும்.

             நம்மைப் பொறுத்தவரை புலம்பெயர் தமிழிலக்கியமென்பது எப்போதும் ஈழத்து இலக்கியத்தின் ஒரு பகுதியாகவே இருக்க முடியுமென்று, புலம்பெயர்ந்தோர் இலக்கியம்பற்றிப் பரவலான உரையாடல் இருந்த சமயத்திலிருந்தே இவ் உரைக்கட்டாளன் கூறிவந்திருக்கிறான். ஈழத் தமிழிலக்கியமென்பது மொத்த தமிழிலக்கியத்தின் ஒரு பகுதியாகவே இருக்க முடியுமென்பது இதன் இன்னொரு முகம்.

             இத்தகையதொரு தொடர்ப்பாடு, இலக்கியத்தின் தன்மையிலும்  உள்ள தொடர்ப்பாடாக இயங்கப் பெருவாய்ப்பிருக்கிறது. நாம் ஆய்வுக்கு எடுத்துள்ள இந்த விடயத்திலும் அவ்வாறான ஒரு தொடர்ப்பாடை எதிர்பார்ப்பது சாத்தியமே.

             ஆனாலும் நிலமும், வாழ்வும், வாழ்வு ஏற்படுத்திய மனநிலைகளும், அந்த மனநிலைகளுக்கு இயைபாக வளர்ந்துவரும் கருதுகோள்களும், நம்பிக்கைகளும், அறங்களும் இலக்கியத்தில் பிரதிபலிப்பது தவிர்க்க முடியாதது என்ற உண்மையையும் இந்த இடத்தில் பொருத்திக்கொண்டு பார்த்தால், நியாயமாகவே புலம்பெயர்ந்த இலக்கியத்தில் மிகவித்தியாசமான போக்கும், பாய்ச்சலும் நிகழ்ந்திருக்கவேண்டும். ஆனால் உண்மையில் இந்த நிலைமை உருவாகியிருக்கிறதா?

             விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியினால் மிகக் கட்டிறுக்கமாக நெருங்கிக்கொண்டிருக்கும் உலகப் பரப்பில், தாய் நிலத்தோடுள்ள ஊடகத் தொடர்புகளைத் தவிர்த்துக்கொண்டு பார்த்தால், உள்நாட்டின் நிலைமைகள் பெரிதாக மாற்றங்கள் ஏற்பட்டிருக்கவில்லையென்றே தோன்றுகிறது.

             கடிதத்தின் மூலம் தொடர்புகளைப் பேணிக்கொண்டிருந்த ஒரு காலம் மறைந்து, அஞ்சலகத்தில் மத்திய தொலைத் தொடர்பு நிலையத்தின்மூலமான பதிவுத் தொலைபேசித் தொடர்புகளைக் கொள்ளும் நிலைமை (  Trunk Call )  வந்தது. பிறகு அவரவரும் தெருவுக்குத் தெரு முளைத்த (STD Booth) தொலைபேசிக் கிளைகளின் கணினி  மூலமான செய்மதித் தொலைத் தொடர்புகளைக் கொண்டிருந்த நிலைமையும் மாறி, இன்று ஸ்கைப் மூலம் ஆளை ஆள் பார்த்துப் பேசக்கூடிய நிலைமை உருவாகியிருக்கிறது. இது தொலைத் தொடர்புச் சாதனத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமே தவிர, பரிமாறப்பட்ட விடயத்தில் இல்லையென்பதே யதார்த்தமாக இருக்கிறது. அதாவது தொலைத்தொடர்புச் சாதனங்களின் மாற்றம், அதன்மூலம் பரிமாறப்பட்ட விடயங்களின் மாற்றமாக உருவாகவில்லையென்பதே.

             இவ்வாறு மாறாத ஒரு நிலைமையிலுள்ள ஒரு நாட்டில் உருவாகும் இலக்கியத்துக்கும், கணம்தோறும் மாறும் நிலைமையிலுள்ளதும், அதன் மூலம் மனநிலைகளிலும் கருதுகோள்களிலும் பெரும்மாற்றம் நிகழும் நாடுகளில் குடியேறியோரால் உருவாக்கப்படும் இலக்கியத்துக்குமிடையில் பெரிய இடைவெளிகளும், வேறுபாடுகளும் தவிர்க்கமுடியாதபடி இடம்பெற்றிருக்கும். இவ்வாறான ஒரு பருவெளியை இலக்கியத்தில் எதிர்பார்க்க ஒரு தீவிர வாசகனுக்கு, ஒரு விமர்சகனுக்கு சகல விதமான உரிமைகளும் உண்டு. ஆனால், சற்றொப்ப ஐம்பது ஆண்டுக் காலத்தில் உருவாகிய இலக்கியப் படைப்புகளில் பெரிய மாற்றங்கள் இல்லையென்பது  ஆச்சரியகரமான விடயம்.

             இதை ஒப்புக்கொள்வது சற்று கடினம்தான். ஆனால் இதை ஒப்புக்கொள்வதின் மூலமாகவே இந்த வளர்சிதை நிலையை நாம் மாற்றும் முயற்சியின் முதல் தளத்திலாவது புகுந்துகொள்ள முடியுமென்பதை வற்புறுத்தவேண்டியுள்ளது.

             இன்னுமொன்று, இவ்வுரைக்கட்டாளன் கனடாவில் வசிக்கிறான்.  அவனது யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’ ,‘கதாகாலம்ஆகிய நாவல்கள் இலங்கையில் வெளிவந்தன. முதலாவது நாவலின் கதைக்களமும் முழுக்கமுழுக்க இலங்கையாகும். இது புகலிடத் தமிழ்நாவலா, அல்லது இலங்கை நாவலா?

             பிரமிள் என்றழைக்கப்படும் அரூப் சிவராம் இலங்கையின் கிழக்கு மாகாணமான திருகோணமலையில் பிறந்து வளர்ந்தவர். இலங்கையிலிருக்கும்போதே எழுத்து’  சஞ்சிகையின் காரசாரமான இலக்கியச் சர்ச்சைகளில் தீவிரமாகப் பங்கேற்றவர். அவர் இறந்தது இந்தியாவில் தமிழ்நாடு. பல ஆக்கங்களும் அங்கேதான் அச்சேறின. அவரது படைப்புக்கள் ஈழப்படைப்புகளா, அல்லது இச்சைப்படி புலம்பெயர்ந்த ஒருவரது புலம்பெயர் படைப்புக்களா? அதுவுமன்றி தமிழகப் படைப்புக்களா?

             இக் கேள்விகள் முக்கியமானவை. ஈழ, புகலிட இலக்கியம் என்ற பகுத்தல் படைப்புகள் கொண்டிருக்கும் கதைக் களத்திலும், வாழ்வியலின் வெளிப்பாட்டிலும், உணர்வுகளின் நிலைகொள்ளல்களிலும், வாழ்வியலுடான ஒட்டுதல் ஒட்டாமைகளிலுமே கொள்ளப்பட முடியுமென்றுதான் சொல்லவேண்டும்.

             அண்மைக் காலமாக ஆங்கில புகலிட எழுத்தாளர்கள் மத்தியில் உருவாகியிருக்கும் கருத்தொன்றினை இந்த இடத்தில் நாம் யோசித்துப் பார்க்கவேண்டுமென்று விரும்புகிறேன்.

             ஒரு தசாப்த காலத்துக்கு முன்பாக, ஆங்கிலத்தில் எழுதும் பல்வேறு நாடுகளிலுமிருந்து புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் தம்மை  Exile writers என்றே குறிப்பிட்டு வந்தனர். அவர்களது படைப்புக்களும் Exile Literature எனக் குறிப்பிடப்பட்டு வந்தன. ஆனால் இப்போது அவர்கள் குறிப்பாக சல்மான் ரு~;;டி, பாரதி முகர்ஜி போன்றோர், தம்மை migrate writers எனவே குறிப்பிடுகிறார்கள். அவர்களது இலக்கியமும் migrate literature எனவே அழைக்கப்படுகிறது.

             எக்ஸைல் என்ற ஆங்கிலச் சொல்லுக்கான வரைவிலக்கணம், ஒரு நிர்ப்பந்தத்தில் நாடு நீங்குதலையே குறிப்பிடுகின்றது. migrant என்பவர் விருப்பக்குடியேறியாவார். I don’t exist in this country,not as a writer, a citizen , nor human being. I don’t feel that I belong anywhere not since my roots were torn from the ground என Samir Naggash கூறுவதுபோன்ற கதறல் அவரது படைப்பில் சாத்தியமே இல்லை.

             ஆக புலம்பெயர் தமிழிலக்கியம் என்பதைவிட தமிழ்க் குடியேறிகளின் தமிழ் அல்லது ஆங்கில இலக்கியம் என குறிக்கப்படுவதே வெகுவிரைவில் உருவாகக்கூடிய சூழ்நிலையென நம்பகமாகத் தோன்றுகிறது.

             இலக்கிய வகைமைகள் சூழ்நிலைமைக்கும், காலத்தின் தேவைக்கும் ஏற்ப தோன்றுபவை என்ற மார்க்சிய விதி முக்கியமானது. இலக்கியத்தின் தரத்தைப் பகுத்தறிய மார்க்சிய விதிகள் எவ்வளவுக்கு முதன்மையற்றனவோ, அவ்வளவுக்கு இலக்கியத்தில் வளர்ச்சியினதும், வகைமைகளின் தோற்றத்தையும் கண்டறிய அது அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.

             அச்சியந்திரம் தோன்றியிராவிட்டால், நவீன கவிதையும், உரைநடையும் எந்த மொழியிலும் இல்லை. இந்த மெய்மை மார்க்சீய விதிகளின் மூலம் கண்டடையப்பட்டதுதான். சமூக மாற்றத்தினது விளைவு அதன் இலக்கியத்திலும் தோன்றுகிறது என்பதும் பலரது கருத்துநிலைமைக்கும் இயைபான முடிவாகவே கண்டடையப்பட்டிருக்கிறது. தமிழ்ச் சூழலில் நிலமான்ய சமுதாயத்தின் வளர்ச்சியின் அம்சமாகவே காவிய காலம் தோன்றியது என்பதும், இக்காலகட்டத்தில் போரற்றதும், அது காரணமான பொருளாதார வளர்ச்சியினதும் சூழ்நிலைமைத் தகவமைப்பே, சோழர்காலமென இலக்கிய வரலாற்றில் பெயர்பெற்றிருக்கும் அக் காலகட்டம்  கம்ப ராமாயணம் போன்ற பெரும் காவியங்கள் தோன்றக் காரணமாயிற்று என்ற பேராசிரியர் க.கைலாசபதியின் முடிவிலும் மாறுபாடில்லை.

             முதலாளித்துவம் முதிர்ந்த நிலைமையிலும், ஏகாதிபத்தியத்தின் கூறுகள் வௌ;வேறு வடிவங்களில் தோன்றியுமிருக்கும் இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டின் முதலிரு தசாப்தக் காலகட்டங்களிலும், அக்காலகட்டத்துக்கு அமைவான ஆக்கங்களே ஆங்கில மொழியிலான இலக்கியங்களில் தோன்றின என்பது கவனிக்கப்பட வேண்டும். முதாலாளித்துவ தொழிலாளித்துவ எதிர்நிலைகளின் மோதல், உணர்வு வெளிப்பாடுகள், சமூக மாற்றம் என்பன இங்கே குறிப்பிடப்படவில்லை. குற்றவியலாளர், ஒருபாலினர், பெண்கள் என்ற பிரிவுகளில் மிகமுன்னேற்றமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இவையெதுவுமே தமிழ் பிரக்ஞையை பெரிதாக அசைக்கவில்லை. அசைத்ததற்கான எந்தத் தடயமும் ஈழத்து தமிழ் இலக்கியத்தில் சரி, புலம்பெயர்ந்தோர் தமிழிலக்கியத்தில் சரி இல்லை. மாற்றுக் குரல்களாக சில அடையாளங்கள் காணப்படுவது மட்டுமே உண்டு.

             இந்த முன்னிலைமைகளை மனங்கொண்டுதான் நாம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தலைப்பிலான விடயத்தை அணுகவேண்டும்.

பகுதி இரண்டு

 இந்நிலையில், நாம் ஆய்வுக்குட்படுத்தியிருக்கும் இவ்விரு புலங்களிலும் மிகக் கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்படும் கவிதைத் துறைக்கு முதலில் நகரலாம்.

             புலம்பெயர்ந்த நாடுகளில் தோன்றிய முக்கியமான கவிஞர்களாக (இரண்டாம் தலைமுறையினரில் சேரக்கூடிய சேரன், சண்முகம் சிவலிங்கம், வ.ஐ.ச.ஜெயபாலன், கி.பி.அரவிந்தன் போன்றோரைத் தவிர்த்துப் பார்த்தால்) செழியன் (கடலைவிட்டுப்போன மீன் குஞ்சுகள்), திருமாவளவன் (பனிவயல் உழவு, அஃதே இரவு அஃதே பகல்), றஞ்சினி (றஞ்சினி கவிதைகள்), இளங்கோ (நாடற்றவனின் குறிப்புகள்), பானுபாரதி (பிறத்தியாள்), அருந்ததி (இரண்டாவது பிறப்பு), பிரதீபா தில்லைநாதன் (தனிக் கவிதைகள்), தான்யா (தனிக் கவிதைகள்), மு.பு~;பராஜன் (மீண்டும் வரும் நாட்கள்), மாதுமை (ஒற்றைச் சிலம்பு), பெண்ணியா (என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை), ஆழியாள் (துவிதம்), தமிழ்நதி (சூரியன் தனித்தலையும் பகல்) போன்றவர்களைக் குறிப்பிட முடியும்.

             இந்த அத்தனை கவிஞர்களது படைப்புக்களிலும் உள்ள ஒட்டுமொத்தமான உணர்வு நாட்டைப் பிரிந்தமையும் உறவுகளினதும் இளம்பருவத்து நண்பர்களைப் பிரிந்து வந்தமையுமாகவே இருந்திருக்கிறது. பல கவிஞர்களது கவிதைகளில் பெருந்தேசியவாதத்துக்கு இரையான தமிழ்ச்; சமுதாயத்தின் அவலம் எடுத்துச் சொல்லப்படுவதாக இருக்கிறது. நடந்த உள்நாட்டு யுத்தத்தின் நியாய அநியாயங்களைப் பல கவிஞர்களும்தான் பேசியிருந்தனர். தமயந்தி மற்றும் பானுபாரதி போன்றோரின் குரலிலுள்ள முரண் எதிர்ப்பு தமிழ்க் கவிதையில் புதிதாகத் தொடங்கியிருக்கும் அரசியல் எதிர்க்குரலின் தொடர்ச்சி.

             இதேபோல, ஈழத்தில் அஸ்வகோஸ் (வனத்தின் அழைப்பு), பா.அகிலன (மண்பட்டினம்), ஆத்மா (மிக அதிகாலை நீல இருளில்), கருணாகரன் (பலிஆடு), காப்டன் மாலதி (தனிக் கவிதைகள்), றஸ்மி (காவு கொள்ளப்பட்ட வாழ்வு முதலாய கவிதைகள்), நவாஸ் சௌபி (எனது நிலத்தின் பயங்கரம்), இளைய அப்துல்லா (பிணம்தின்னும் தேசம்), செல்வி-சிவரமணி (செல்வி-சிவரமணி கவிதைகள், நிழல் வெளியீடு), ஊர்வசி (புதுசுவில் வெளியானவையுட்பட்ட பல தனிக் கவிதைகள்), ஹம்சத்வனி (அக்கரைக்குப்  போன அம்மாவுக்கு), தீபச்செல்வன் (ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்), பஹீமா ஜகான் (ஆதித்துயர்), அனார் (ஓவியம் வரையாத தூரிகை), சோலைக்கிளி (காகம் கலைத்த கனவு) போன்றோர் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். இவர்களது பாடுபொருள்கள் யுத்த அநர்த்தங்களும், மரணங்களும், நியாயமற்ற இனப்படுகொலைகளும், தனிமனித சுதந்திர மறுப்புக்களும் என்றவையாக இருந்தன. மரணம் பெருவிரல் முனையிலிருந்து ஒவ்வொரு பயணத்தையும் வாழ்வுக்கான ஒவ்வொரு எத்தனிப்பையும் அச்சுறுத்திக்கொண்டிருந்தமை ஈழத் தமிழ்க் கவிதைகளின் பொதுப்; பாடுபொருள் எனல் தகும்.

             ஈழத் தமிழ்க் கவிதைப் புலத்தில் போர்ச்சூழல் காரணமாக படைப்பாக்க முயற்சிகள் பாதிப்புப் பெற்றிருப்பினும், புலம்பெயர் சூழலில் வாழ்வதற்கான ஆதாரத் தேடலில், உறவுகளுக்கான உழைப்பு என்ற நெருக்கடிகளில், படைப்பாற்றல் வீச்சுப் பெறாதிருந்தமையைக் குறிப்பிடலாம். ஆயினும் புலம்பெயர் தமிழிலக்கியத்தில் மாற்றுக் கருத்துக்கான கள விரிவு காணக்கிடைப்பினும், கவிதை வீச்சளவில் ஈழத்துக் கவிதைகள் நிமிர்ந்து நிற்கின்றன என்பது மிகையான கூற்றல்ல.

             சிறுகதைகளைப் பொறுத்தவரை பல்வேறு படைப்புக்கள் புலம்பெயர் களத்தில் தோன்றியிருப்பினும், சில தொகுப்புகளையே சிறுகதையின் அலகுகளைக் கொண்டிருக்கும் சிறந்த தொகுப்புகளாக அடையாளம்காண முடிகிறது. N~hபாசக்தியின் தேசத்துரோகிமற்றும் எம்.ஜி.ஆர் கொலைவழக்கு’, அ.முத்துலிங்கத்தின் அ.முத்துலிங்கம் சிறுகதைகள்’, சக்கரவர்த்தியின் யுத்தத்தின் இரண்டாம் பாகம்’, மெலிஞ்சிமுத்தனின் பிரண்டையாறுபோன்றவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

             இவை புலம்பெயர் சமூகத்தின் வாழ்வியலைக் காட்டக்கூடியதான கதைக்களத்தைக் கொண்டிருக்கவில்லையென்பது இவற்றின்மேல் பொதுவாகச் சொல்லக்கூடிய விமர்சனமாக என்றும் இருந்துவந்திருக்கிறது.

             அந்த வகையில் அதன் தன்மைகளைக் கொண்டிருக்கக்கூடியதான சில தொகுப்புக்களையே எம்மால் இனங்காண முடிகிறது. இவை பரவலாகப் பேசப்படாதவையாகவும், பரவலாகச் சென்று சேராதவையாகவும் இருந்தபோதிலும், புலம்பெயர் களமென்று பார்க்கிற வேளையில் இவற்றுக்கான இடம் அளிக்கப்பட்டாக வேண்டும் என்பதே சரியான முடிவாகும். இவற்றுக்கு உதாரணமாக கலாமோகனின் சில சிறுகதைகள், பொ.கருணாகரமூர்த்தியின் சில சிறுகதைகள் என்றும், கனடாவைப் பொறுத்தவரை சுமதிரூபனின் யாதுமாகி நின்றாள்’, வி.கந்தவனத்தின் காதலினால் அல்ல’, மனுவல் யேசுதாசனின் வயது பதினாறுபோன்ற தொகுப்புகளையும் சுட்ட முடியும்.

             வயது பதினாறு தொகுப்பில் வரும் முன்னாள் கணவன்-மனைவிசிறுகதை விரிந்த உரையாடலையும், வாழ்நிலத்தைக் காட்டும் தன்மையையும் கொண்டிருக்கும் அதேவேளையில், ஒரு நல்ல கதையாகவும் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது.

             'யாதுமாகிநின்றாள்' தொகுப்புபற்றி நிறையவே சொல்ல முடியும். ஆனாலும் அது குறித்தான விபரத்தை இங்கே ஒதுக்கிவிட்டு, அது சொல்ல வந்த செய்திகளின் முக்கியத்துவத்தைப் பார்ப்பது அவசியம். பெண்ணியம் சார்ந்த பல வி~யங்கள் அந்நூலில் கதைகளாக்கப்பட்டிருக்கின்றன. மீறல் என்கிற குறி எல்லாக் கதைகளினதும் பொது அம்சமாகவிருக்கிறது. அவற்றில் கலைத்தரம் வாய்ந்த சில கதைகளையேனும் நம்மால் காணமுடியும்.

             சிறுகதைத் துறையில் ஈழப் பரப்பு கொண்டிருக்கும் இடமும் பெரிய விஸ்தாரமானதில்லை. தாட்சாயணி, த.அகிலன், யோ.கர்ணன், ஒட்டமாவடி அறபாத், மு.பொன்னம்பலம்க, நந்தினி சேவியர் என குறிப்பிடக்கூடியவர்களின் சில படைப்புக்களையே இந்தத் தளத்தில் நம்மால் சந்திக்க முடிகிறது. இவர்களின் கதைக்கருக்களும் பெரும்பாலும் போரின் கொடுமையும், மக்களின் அவலமும், அநியாயங்களின் நெருக்குதல்களில் அழிந்துபோகும் தனிமனிதர்களின் நிர்க்கதியாகவுமே இருந்திருக்கின்றன. நந்தினி சேவியரின் கதைகள் கட்டமைப்புக் கொண்டவையெனினும், கடந்த கால நினைவுகளின் மீட்சியாகவே இருப்பதைச் சொல்லவேண்டும். ஒருவகையில் தாய்நிலத்திலிருந்து வெளிவந்த புலம்பெயர்ந்த ஒருவரின் மனவோட்டங்களாகவே அவை தென்பட்டன.

             மு.பொ.வை இங்கு குறிப்பாகச் சொல்லவேண்டும். மார்க்சியம் அல்லாத ஈழத்துக்கே தனித்துவமான இன்னொரு சிந்தனை முறைமைக்குள் நின்று தனது சிறுகதைகளைப் படைத்துள்ளவர் இவர். பரிசோதனைகளாக பல கதைகள் முடிந்துபோயிருப்பினும் கலைத்தரம் வாய்ந்தவையாக சில கதைகள் இவரது முடிந்துபோன தசையாடல்பற்றிய கதைதொகுப்பில் உள்ளன.

             இவ்வாறு இவ்விரண்டு தளங்களிலும் குறிப்பிடக்கூடிய சிறுகதைத் தொகுப்புக்கள் தோன்றியிருப்பினும், உச்சம்பெறக் கூடிய சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பாக, உதாரணமாகச் சொல்வதெனில் முனிசா ~ம்சியின் யுனெ வாந றுழசடன ஊhயபெநனஇ ரக்~ந்தா ஜலீலின் And the World Changed, Neither Night Nor Day போன்ற பாகிஸ்தானிய புலம்பெயர்ந்த பெண்களின் சிறுகதைத் தொகுப்புகள்போல நாம் பெருமைப்பட எதுவுமேதான் இல்லாதிருக்கிறது.

             நாவல்களில் Nrhபாசக்தியின் கொரில்லா’, ‘ம்’,  இவ்வுரைக்கட்டாளனின் கனவுச்சிறை’, மற்றும் கதாகாலம்’, விமல் குழந்தைவேலுவின் கசகறணம்போன்றவை பேசப்பட்ட படைப்புக்கள்.

             கொரில்லாவில் கதைக்களம் இலங்கையாகவும், கதாபாத்திரம் புகலிடம்கொண்டிருந்த இடம் பிரான்சாகவும் இருக்கும். கனவுச்சிறையில் இலங்கை, இந்தியா, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா என அகதிகளாய் அந்நாவலின் கதாபாத்திரங்கள் அலைப்புண்ட நாடுகளெல்லாம்  வந்திருக்கும். ஆனால் கசகறணம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தினைக் கதைக்களமாகக் கொண்டது.

             சயந்தனின் ஆறாவடுநாவல் பலஹீனமான சில அம்சங்களைக் கொண்டிருப்பினும், அது பேசிய பொருள் தமிழ் நாவலிலக்கியத்தில் புதியது. ஒரு கடற்பயணக் கதையூடாக யுத்தகால வாழ்வின் பெரும்பகுதி அதில் சொல்லப்பட்டது.

             ஈழத்தைப் பொறுத்தவரை நாவலிலக்கியம் பெரும்பேசுபொருளாக எப்போதுமே இருக்கவில்லை. முக்கியமான படைப்புகள் எனப்படக்கூடியவை வெகு[ ஊடகங்கள் வழியாக வெளிவந்தவையே. அண்மைக் காலத்தில் வெளிவந்த லோமியாநாவல் குறிப்பிடக்கூடிய முயற்சி. ரொமான்ரிச பாணியில் மிகை உணர்ச்சிகளுக்கும், திடீர்த் திருப்பங்களுக்கும் எழுதப்பட்டதில் அது அடைந்திருக்கவேண்டிய இடம் தவறிப்போனதாகச் சொல்லலாம்.
        அங்கு பிரசுர, அச்சாக்க வசதிகளின்மை நாவலிலக்கியத்தின் வளர்ச்சிக்கு ஒரு முட்டுக்கட்டையாகவே காலகாலமாகவும் இருந்துவருவதைக் குறிப்பிடவேண்டும். யுத்தகாலத்தில் சில படைப்புக்கள் கையச்சு இயந்திரத்தில்  கொப்பித் தாளில் அச்சேற்றப்பட்டமையை இப்போது நினைக்க முடிகிறது.    

                கருதப்பட்டிருக்கும் பொருளளவில் இவ்வுரைக்கட்டுக்குப் பொருத்தமற்றதாயினும், புகலிட நாவல் என வருகையில் காஞ்சனா தாமோதரனின் மரகதத் தீவுநாவலைக் குறிப்பிடாமலிருக்க முடியாது. அதற்கு அதனளவிலான முக்கியத்துவமும் உண்டு. 2009இல் வெளிவந்த நூல் அது. ஸியர்ரா நெவாடா, உறவுச் சங்கிலிகள், ஓர் அமெரிக்க நெடுஞ்சாலைப் பயணம், கூபாவுக்குப் போன க்யூப அமெரிக்கர்கள், மரகதத் தீவு ஆகிய ஐந்து நெடிய கதைகளைக் கொண்ட சிறிய நூல் அது.

                வேறுவேறு பண்பாட்டுப் பின்னணிகளில் சொந்த நாடு, காதல் போன்ற அதிஉன்னத வி~யங்களை வாழ்வின் எழிலும், மனத்தின் நொய்மைகளும் செறிய, நாவலின் வீறுகள் அடங்க எழுதப்பட்ட குறுநாவல்கள் அவை. அந்த ஐந்து கதைகளையும் தனித்தனியான ஐந்து நாவல்களாகவே என்னால் காணமுடிந்தது. புலம்பெயர்ந்த ஒருவரின் அல்லது குடியேறி ஒருவரின் பார்வை கலாச்சார விடயங்களில் எவ்வாறு புனர்நிர்மாணம் பெற்று விகசித்தெழுகிறது என்பதற்கு உதாரணமாகக்கூடியவை காஞ்சனா தாமோதரனது அந்த எழுத்துக்கள்.

     இதற்கு மாறாக ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் இன்னமும் ஈழம், பயணப் பாதை இடர்கள் என தொடர்ந்துகொண்டிருப்பது இலக்கிய விடயத்தில் மொத்தத் தமிழ்ப் பரப்பில் பின்தங்கியிருப்பதாகவே இந்த உரைக்கட்டாளனால் கருத முடிகிறது.


 பகுதி மூன்று

               

 இவ்வாறு இரண்டு புலங்களிகலுமே ஆகச் சிறந்த படைப்புகள் தோன்றாமைக்குரிய காரணங்களை ஓரளவுக்கேனும் அலசுவது இவ்வுரைக்கட்டின் முடிவாக அமைவது நன்மை பயக்கும்.

                பார்த்தல், வாசிப்பு, மற்றும் படிப்பு என்ற இந்த மூன்று சொற்கள் குறித்தும் அச்சுலகை அறிவார்த்தத்துக்குரிய ஊடகமாகக் கொண்டோரிடையே செயற்படும் தன்மையை ஒருமுறை பார்த்தல் நன்றென நினைக்கிறேன்.

                புழங்கு மொழியில் பத்திரிகையை நாம் பார்க்கவே செய்கிறோம். இந்த பார்த்தல் என்பது ஆங்கிலத்தில் Browsing என்ற சொல்லுக்கு இணையானதாகக் கொள்ளமுடியும். Readfitfully என்பதும் இதுதான். மேம்புல் மேய்தல் என்பதுபோன்ற வாசிப்புப் பணியை இது செய்கிறது. வாசிப்பு என்பதை புனைகதைகளின் வாசிப்புப் பணியையும், படித்தல் என்பது கல்விசார்ந்த நூல்களின் அறிதல் பணியையும் புரிவதாகத்தான் அறிவுலகம் இதுவரை ஒப்புக்கொண்டு வந்திருக்கிறது.

                ஆனால் வாசிப்பு, மற்றும் படிப்புப் பணிகளை நாம் பார்த்தல் என்ற மேம்போக்கான பத்திரிகைச் செய்திக் கிரகிப்பானதாக மேற்கொள்ளும்போது பிரதியுள் நுழைதல் என்பது சாத்தியமின்மையாகி ஒரு வெளி உருவாகிவிடுகிறது. இதற்கே நாம் புகுந்துள்ள உலகில் பலபேருக்கு நேரமற்று இருந்துவிடுகிறதென்பது துக்ககரமான விடயம்.

                அடுத்ததாக, நமக்குள் இருக்கும் சித்தாந்த வறுமையைக் குறிப்பிடவேண்டும். மிக ஆரோக்கியமான தமிழ்ச் சிந்தனை மரபொன்று சங்ககாலம் முதல் இருந்து வந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் அது இடைக்காலத்தில் பல்வேறு வேற்று நிலக் கருத்தாக்கங்களால் பேதமாகி, பின்னால் அழிவுற்றது என்றும் தெரிகிறது. ஆனாலும் மேலைநாட்டு எந்தத் தத்துவமும் பின்னால்கூட ஒரு அசைவியக்கத்தை அதில் ஏற்படுத்தவில்லை. அறிவுஜீவிகளாக தம்மைக் காட்டிக்கொள்பவரிடையேகூட மார்க்சியம் இறந்துபட்ட கொள்கையென்ற சிந்தனைதான் இன்று இருக்கிறது.

                நவீனத்துவத்திற்கு மேலாக எந்தச் சிந்தனைப் போக்கும் தமிழ்ச் சமுதாயத்தை அணுகவேயில்லை. பின்நவீனத்துவத்தை தமிழுலகம் அறிகின்றவேளையில் அது மேற்குலகில் ஆதர்சம் குன்றத் தொடங்கியிருந்தது. அது ஓரளவு பின்னமைப்பியல் மற்றும் பின்நவீனத்துவத்தை உள்வாங்கும் நேரத்தில் மேற்குலகில் அது பெரும்பாலும் வழக்கிறந்த சிந்தனைகளாக மாறியிருந்தன. அதனால், அமைப்பியல், பின்அமைப்பியல், பின்நவீனத்துவம் எதுவும் மறந்துபட்ட காலத்துக்கு ஒவ்வாத சிந்தனைகளாகிவிட்டதாக தமிழ்ப் படைப்பாளிகள் கருதிக்கொண்டார்கள். பின்காலனிய இலக்கியச் சிந்தனைகூட புலம்பெயர்ந்த இலக்கியவாதிகள் மத்தியில் இல்லை.

                இந்த சிந்தனைப் போக்குகளின் வறுமை இலக்கியத்தைப் பாதிக்காது விட்டுவிடாது. ஈழத்து படைப்பாளிகளினதும், மேலைநாட்டுத் தமிழ்ப் படைப்பாளிகளதும் இலக்கிய நடையும், அர்த்த வெளிப்படுத்துகையும் இன்னும் 19ஆம் நூற்றாண்டுத் தனமாகவே இருப்பதன் காரணம் இதுதான்.

                ஒரு சிந்தனைப் போக்கு என்பது ஒருவர் மனத்தில் வாய்க்கால் போன்றது. வாய்க்கால் இல்லாமல் நீரிறைப்பு சாத்தியப்படாததைப்போல, சிந்தனைப் போக்கு இன்றி, புதிய சிந்தனைகளின் தோற்றம் இல்லை. இதை உணர்தல் அவசியம்.

                இறுதியாக, அறம் என்ற தமிழ்ச் சொல் மிக வலுமையும், நீண்ட வரலாறும் கொண்டதாக தமிழ்ப் பரப்பில் நிலவுகின்றது. அறம் என்பது தர்மம் மட்டுமில்லை, நீதி என்ற சமஸ்கிருதச் சொல்லின் தமிழ் அடையாளம். எங்கே அது தோற்றாலும், பெரும் பூகம்பம், சூறாவளி, பிரளயம் நேரும். அறம் பிழைத்தது, மதுரை எரிந்தது. இது சிலப்பதிகாரக் கதை மட்டுமில்லை, தமிழர் வாழ்வின் அர்த்தமும். இலக்கிய முகிழ்ப்பின்மையின், கூர்மையின்மையின் ஒரு காரணமாக தமிழ்ச் சமூகத்தின் வாழ்வில் அறம் அற்றுப்போனமையை ஒரு காரணமாகக் கூற எவருக்கும் தயக்கம் இருக்காது. ஆத் தேடலில் ஆத்மார்த்தமாக ஈடுபடும் ஒரு படைப்பாளி என்றோ ஒருநாள்  தோன்றக்கூடும். அதுவரை நம் காத்திருப்பு தொடரத்தான் போகிறது. 

                ஈழத்தினதும், மேற்குலக தமிழ்க் குடியேறிகளினதும் படைப்பாற்றல் இந்த அச்சிலிருந்து சுழன்ழெற வேண்டும். சிறந்த, உன்னதமான படைப்புகள் தோன்றுவதற்கான வழி இங்கிருந்து தொடங்குகிறது.

(முற்றும்)






               



Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்