படைப்பு, வாசிப்புகளின் பொது இயங்குதளமும்

படைப்பு, வாசிப்புகளின் பொது இயங்குதளமும்
சமகால ஈழத்து இலக்கியத்தில் அவற்றின் தாக்கமும் அல்லது தாக்கமின்மையும்:

மொழிவெளியினூடான ஓர் அலசல்



ஒரு படைப்பு முயற்சியில் வாசகப் பரப்பு கவனத்திலெடுக்கப்பட வேண்டியதில்லையென்று நமக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. சரிதான். தீவிர படைப்பாளி ஒருவருக்கு அந்தக் கரிசனம் பெரும்பாலும் எழுவதில்லையென்பது பல்வேறு படைப்பாளிகளின் நேர்காணல்களில், நேர்ப் பேச்சுக்களில் வெளிப்பட்டிருக்கிற உண்மையும். நமது நவீன இலக்கிய வடிவங்கள் நம் தேயங்களுக்கு வெளிநாட்டு இறக்குமதியென்ற மெய்ம்மையிலிருந்து கவனமாகிறபோது, சமகால அய்ரோப்பிய, அமெரிக்க இலக்கிய உலகினைப் புறந்தள்ளிவிட்டு இலக்கியம் குறித்த விஷயத்தை நாம் அலசிவிட முடியாதென்பது வெளிப்படை. படைப்பு வாசிப்பு என்ற இந்த இரண்டு இயங்கு தளங்களுக்குமிடையே, பதிப்பு என்பது இக் கண்டங்களில் மிக்க வல்லபமான நிஜமாக இருந்துகொண்டிருக்கிறதைப் பார்க்க முடிகிறது. இதைத் தமிழ்ச் சூழலில் பொருத்திப் பார்ப்பதற்கு இன்றைக்கு வலுவான தேவையிருக்கிறது. நம் இலக்கிய முயற்சிகளை இதனோடு இனங்கண்டு நம்மைப் புரிவதன் அவசியத்தை அவசரமாக்குவதே என் முதன்முதலான பிரயாசை. நம் புரிதலின் பரப்பை விரிவுபடுத்த சில பிரமைகளையும் நாம் கடந்தாகவேண்டியிருக்கிறது என்ற உண்மையையும் நான் சொல்வேன். எல்லை கடந்துவிடா அவதானத்துடன் இவற்றை முன்வைக்க இவ் உரைக்கட்டு முயலும்.


1

‘Evrione likes conspiracy’. தத்துவ தர்க்கவியல் கனெக்ரிகட் பேராசிரியர் இயன் மார்க்கெம் குறிப்பிடும் இந்த வரிகளிலிருந்து, இன்றைய வாசிப்பின் மேலைத் தேயப் போக்கினை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள முடியும். இந்தத் தளத்திலிருந்தே டான் பிறவுணின் ‘டாவின்ஸிக் கோட்’ நூலின் மகாபெரிய விற்பனையை நாம் காணவேண்டியதிருக்கிறது. நாலரைக் கோடி பிரதிகள் விற்பனையுடன் இன்னும் பலமாக அது விற்பனைக் களத்திலிருப்பதென்பது முக்கியமான விஷயம். இதைத் தொடர்ந்து அண்மையில் வெளிவந்திருக்கும் மிஷேல் பெய்யென்ரின் The JesusPapers: Expsing the Greatest Cover-up in the History,ஜேம்ஸ் டி ராபோரின் The Jesus Dinasty: The hidden History of Jesus, his Royal Family and the Birth of நூல்கள் இரண்டும் ஆங்கில வாசகப் பரப்பை வெகுவாகப் பாதித்திருப்பவை. ஜாவியர் சியெராவின்The Secret Supper நூலையும் இவற்றோடு நாம் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த புனைவு, புனைவுசாரா நூல்களின் வாசகப் பரப்பு ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்லிக்கொண்டிருக்கிறது. கலக இலக்கிய வகையான (Rebelious kind) வாசிப்பை மக்கள் விரும்புகிறார்கள் என்பதே அது. தீவிர, பொது வாசகர்கள் இரண்டு தரப்பினருக்கும் இது பொருந்தும். இது மேலைத்தேய வாசகப் பரப்பில் திடீரென நுழைந்த அம்சமாவெனில் இல்லையென்பதே பதிலாகிறது. பின்நவீனத்துவத்தின் இலக்கியப் பிரவேசம் இதற்கான வாசலைத் சிறந்த முறையில் திறந்து வைத்தது. மொத்த தமிழ் வாசகப் பரப்பில் இந்த மனநிலை மாற்றம் ஏற்பட வெகுகாலமாயிற்று. சித்தர் இலக்கியம் தோன்றி ஆறு ஏழு நூற்றாண்டுகளுக்குப் பிறகே அவற்றை இலக்கியமாக நாம் அங்கீகரித்திருக்கிறோம். நமக்குள் இருந்த சமூகக் கட்டுகளின் ஓரிரு அறுப்பு இதற்கு அவசியமாகவும் இருந்துவிட்டது. அது சாத்தியமாகியபோது இலக்கியம் பற்றிய நம் பார்வையின் அகலிப்பு பல்கலைக் கழக மட்டங்கள்வரை சென்று அவற்றைப் பாட விதானத்தில் சேர்க்கும் முனைப்பைக் காட்டவைத்தது. ஆக, சமூக மாற்றங்களோடான இணக்கப்பாட்டுடன் இலக்கியம் இயங்குகிறதென்பது சரியான கணிப்பீடே.



2



தமிழில் தலித் இலக்கியத்தின் வருகை, வளர்ச்சி போன்றவற்றை இந்தத் தளத்திலேயே நான் காண்கிறேன். ஈழத்தில் இடதுசாரி இலக்கியத்தின் வருகையானது, தமிழகத்தில் தலித் இலக்கியத்தின் வருகைக்கு முன்னதானது என்பது தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இவ் இடது சாரி இலக்கியத்தின் தொடர்ச்சி ஈழத்தில் எழுபதுக்களின் மேலேயாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறதா என்றால் இல்லையென்றே கூறவேண்டும். சமூக மாற்றத்துக்கான போராட்டம் பின்னொதுக்கப்பட்டு, அரசியல் உரிமைக்கான போராட்டம் ஆரம்பமானதை இதன் ஒரு காரணமாகக் கொள்ளலாம். மகாராஷ்டிர மாநிலத்தில் தோன்றி தெலுங்கு, கன்னட இலக்கியங்களிலேறி தமிழகத்தில் சிறுகதைகளாக, கவிதைகளாக, நாவல்களாக வளர்ச்சி காணத் துவங்கி, இன்று வலுவான ஒரு இலக்கியத் துறையாக நின்றுகொண்டிருக்கிறது தலித் இலக்கியம்.

தலித் இலக்கியத்தைத் தமிழகச் சூழலில் மட்டுமே பொருத்திக்கொள்ள முடியுமென்ற ஒரு சிந்தனையுமிருக்கிறது. ஆனாலும் அவ் இலக்கியத்தின் எடுபொருள்கள் சமூகமொன்றின் மூடப்பட்டுள்ள வலிகளை, அவலங்களை வெளிக்கொணர்ந்தது என்பதில் மாறுபாடான கருத்துக்கு இடமில்லை. இலங்கைச் சமூகங்களுக்கிடையே சாதீயம் சார்ந்த பிரிவினைகள், அடக்குமுறைகள், ஆதிக்கத்தின் வன்முறைகள் இருக்கும்வரை தலித்தியத்தை ஓர் இலக்கியமூடான வெளிப்பாட்டு அரசியலாகக் கொள்ளலாம் என்பதே சரியான அணுகுமுறையாக இருக்கமுடியும்.

அதைக் கலக இலக்கியமாகக் காண்பதில் ஒரு நேர்மையீனம் இருக்கக் கூடுமோவென்ற அய்யமெழுந்தாலும், ஒரு பார்வையில் அதைக் கலக இலக்கிய அம்சங்கள் கொண்டதாய் எடுத்துக்கொள்வதில் பாரிய பிழை இல்லையென்றே தோன்றுகிறது. இந்தக் கலகக் குரல் ஈழத்து இடதுசாரி இலக்கியத்தில் முன்னிலைக் குரலாக ஒலிக்கவில்லையென்ற நிஜத்தைப் புறந்தள்ளிவிட முடியாதுதான். யதார்த்த இலக்கியவகையாக அரசியல் மாற்றத்தை, சமூக மாற்றத்தை முன்வைத்தே அவை ஆவேசமாக இயங்கினவென்பது வரலாறு கூறும் நிஜம்.

இந் நிலையில் சமூக மாற்றத்துக்கான போராட்டம் அப் பரப்பில் புறந்தள்ளுப்பட, போரியல் இலக்கியம் முன்னெழுந்து வந்தது. போரியல் இலக்கியமென்பதை, போராட்டக் களத்தில் வெகுஜனங்களின் வாழ்வு சிதைக்கப்பட்டதினதும், மரணங்கள் மலிவாகியதினதும், புலப் பெயர்ச்சிகளினதும், சொந்த வீடுகளும் பிரதேசங்களும் இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக முகாங்களில் காலத்தைக் கழிக்கும் மனிதஜீவிகளின் சிதைந்த வாழ்வுகளின் எடுத்துரைப்பு என வரைவிலக்கணம் செய்ய விரும்புகிறேன். இனம், மதம், மொழி கடந்த பொதுமனிதாயத அவலத்தினது வெளிப்பாட்டுத் துறையாக அது இருந்துகொண்டிருக்கிறது இன்றைக்கு.

இந்த நிலையில், மிகப் பிந்தியதாக இரண்டாயிரங்களில் வெளிவந்த மூன்று நாவல்கள் எனக்கு முக்கியமானவையெனப்படுகிறது. ஷோபா சக்தியின் ‘கொரில்லா’, தேவகாந்தனின் ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’, விமல் குழந்தைவேலுவின் ‘வெள்ளாவி’.

போராட்ட இயக்கங்களின் முரண்பாட்டினை வலுவான கதைப்புலனாக வைத்து, பிரதேச வழக்கின் மொழிப் பிரயோகத்துடன் பெருங்கலகம் விளைத்துக்கொண்டு வந்தது கொரில்லா நாவல். அதன் பாதிப்பு தமிழ்ப் பரப்பெங்கும் கேட்டது.

சமூக மாற்றத்துக்கான போராட்டம் பின்தள்ளப்பட்டு, இனம் மொழிசார் பெறுமானங்களின்மீதான விடுதலையை உச்சரித்துக்கொண்டு அந்த இடத்தை யுத்தம் எவ்வாறு எடுத்துக்கொள்கிறது என்பதை, குடியேற்ற நிலங்களின் பங்கீட்டில் விளைந்த நியாயமின்மைகள் இன மோதலாக வெளிப்பாடடையும் நிஜ நிகழ்வுகளை சமூக சித்தாந்தப் புலத்தில் வைத்து தன் புனைவினை முன்னெடுக்கிறது ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’. பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து 1974ஆம் ஆண்டுவரையான காலக் களத்துக்கு கதைப்புலத்தை வளர்த்துச் சென்று தன் பிரசன்னத்தை முடிப்பது அந் நாவல்.

சமூக நிலைப்பட்ட சாதிப் பிரச்சினையை தனிமனித அவலமாய் முன்வைப்பது வெள்ளாவி. தன் விரித்துரைப்புக்கான மொழியை தன் கதை கூறு களத்திலிருந்து அது பெற்றுக்கொண்டிருந்தது மட்டுமே விசேஷம். ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ‘தில்லையாற்றங்கரையில்’ நாவல் தில்லையாற்றின் பகைப்புலத்தை வெளிப்படுத்திய நாவலாகக் கொண்டால், வெள்ளாவியை அதன் மக்களினம் சார்ந்த வாழ்வுப் பகைப்புலத்தை வெளிப்படுத்தும் நாவலாகக் கொள்ளமுடியும்.

இவற்றில் கொரில்லாவும், வெள்ளாவியும் புலம்பெயர் சூழலிலிருந்தும், யுத்தத்தின் முதலாம் அதிகாரம் ஈழத்திலிருந்தும் வெளிவந்தன. புலம்பெயர் இலக்கியம் இன்னும் சில காலத்துக்கு ஈழத்து இலக்கியத்தின் ஒரு பகுதியாகவேதான் இருந்துவர முடியுமென்பது தௌ;ளத்; தெளிவாகி நிற்கிறது இன்று. தனக்கான படைப்புக் களத்தைப்போல தனக்கான பதிப்புக் களத்தையும், வாசகப் பரப்பையும், விமர்சனத் துறையையும் கொள்கிறவரை இந்த அறுதியில் மாற்றமேற்படப் போவதில்லையென்பதே எனது நம்பிக்கை. அவ்வகையில் புலம்பெயர் இலக்கியத்தை ஈழ இலக்கியத்தின் ஓர் அங்கமாகப் பார்ப்பதில் எனக்குத் தயக்கமிருக்காது. ஒரு கருத்தில் ஈழ இலக்கியம், தமிழ் நாட்டு இலக்கியம், மலேஷியத் தமிழிலக்கியம், சிங்கப்பூர்த் தமிழிலக்கியம், பிரான்ஸியத் தமிழிலக்கியம், ஜேர்மானியத் தமிழிலக்கியம், கனடாத் தமிழிலக்கியம் என்பனவெல்லாம் மொத்தமான தமிழிலக்கியத்தின் கூறுகளே என்கிற புரிதல் அவசியம்தான். ஆயினும் இந்த வகைப்பாட்டினூடேயே தமிழிலக்கியம் தனக்கான வளர்ச்சியைக் கண்டடைய முடியும் என்பதுவும் உண்மையானதும், சாத்தியமானதுமாகும்.

ஆக, கொரில்லாவும், யுத்தத்தின் முதலாம் அதிகாரமும், வெள்ளாவியும் ஈழத்து இலக்கியங்கியங்களாகவே இங்கே பார்க்கப்பட்டுள்ளன. ஈழத் தமிழிலக்கியம் நாவல் துறையில் பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லையென்று பொதுவாகக் கருதப்பட்டு வந்த நிலையில் மேற்குறிப்பிட்ட நூல்களின் வருகை பெரும் நம்பிக்கைகளை உருவாக்கியுள்ளதுதென்பது சத்தியமான வார்த்தை.

3


ஈழத்தில் நாவல் இலக்கியம் சுமார் 120 ஆண்டுக்கால வரலாற்றைக் கொண்டது. ஆயினும் அது பெருவளர்ச்சி காணாமைக்கான அம்சம் என்ன என்றொரு கேள்வி இயல்பாகவே எவரிடத்திலும் எழல் கூடும். தமிழ் நாடு ஒரு பாரிய வளர்ச்சியை அடைந்திருக்கிற வேளையில், ஈழத்து நாவல் மட்டும் தேக்க நிலையில் கிடப்பதற்கு ஒரு தக்க காரணம் இல்லாது போக முடியாது.

ஈழத்தின் முதல் வட்ட நாவலாசிரியர்களைத் தொடர்ந்து அறுபதுகளில் மண்வாசைன கொண்டதான முற்போக்கு கருதுகோளிலக்கியம் முகிழ்க்கிறது. அணிசார்ந்தும் அணிசாராமலும் படைப்பாளிகள் உருவாகினர். முதல் கட்டமாக இளங்கீரன், டானியல், செ.கணேசலிங்கன், யோ. பெனடிக்ட் பாலன், செ. யோகநாதன் போன்றோர் முகாம் சார்ந்து உருவாகினர். எஸ். பொன்னுத்துரை, செங்கைஆழியான், தெளிவத்தை ஜோசப், அ. பாலமனோகரன், மு.தளையசிங்கம், தி.ஜானசேகரன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் போன்றோரை முகாம் சாரா படைப்பாளிகளாகக் குறிப்பிட முடியும். பின்னால் இம் முகாம் முறை மாறிய பின்னர் உருவானவர்களாக மு.பொன்னம்பலம், மலரவன், கோவிந்தன், தமிழ்ச்செல்வி போன்றோரைக் குறிப்பிடலாம்.

இவர்களுக்குப் பின்னால் தோன்றிய படைப்பு வட்டம் ஒரு பாய்ச்சலில்போல்தான் தன் படைப்பாளுமைகளை வெளிப்படுத்தியது. தலித் இலக்கியத்தின் கலக, பெண்ணியலக்கியத்தின் போர்க் குரல்கள் ஓங்கியெழும் காலமாக இருந்ததையும், பின் நவீனத்துவத்தின் இலக்கியப் பிரவேசத்தையும் இதற்குக் காரணமாகக் கூறவேண்டும். ஆயினும் பெருமளவிலான வளர்ச்சியையோ, பாதிப்பையோ ஈழத்து நாவல் துறை அடைந்ததென்று சொல்லமுடியாதே இருக்கின்றது. ‘ஈழத்து நாவல் மட்டும் தேக்கநிலையில் கிடப்பதற்கு ஒரு தக்க காரணம் இல்லாது போகமுடியாது’ என்று நான் மேலே கூறியதன் விசாரணையை இப்போது ஆரம்பிப்பது சரியான தருணமெனக் கருதுகிறேன்.

‘படைப்பின் சமூக நோக்கினை வற்புறுத்திய அதேவேளையில் படைப்பின் ஆக்கக்;கூறுகளை – கலைத்துவ அம்சங்களை – வற்புறுத்த முற்போக்கு விமர்சகர்கள் தவறிவிட்டனர். அத்தகைய விடயங்களின் முக்கியத்துவத்தினை அம் முற்போக்கு விமர்சகர்களுள் சிலர் அண்மைக்காலமாக வற்புறுத்தத் தொடங்கினாலும், அது காலங்கடந்த ஞானோதயமாகவே படுகின்றது. ஏனெனில், அதற்கிடையில் ஈழத்து எழுத்தாளரில் ஒரு சாரார் தீராத நோயாளிகள் ஆகிவிட்டனர் என்பதில் தவறில்லை.’ கிழக்கு பல்கலைக் கழக தமிழ்த் துறைப் பேராசிரியர் செ.யோகராசா ‘ஈழத்து நவீன இலக்கியம்’ என்ற தமது நூலில் கூறியிருக்கும் வாசகங்கள் இவை.

யதார்த்தப் பண்போடானாலும் நீலபத்மநாபனின் பள்ளிகொண்டபுரம், தி.ஜானகிராமனின் மோகமுள், சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல், பொன்னீலனின் கரிசல் போன்ற படைப்பின் உந்நதம்கொண்ட நாவல்கள் தமிழில் உள்ளன. ஆனாலும் சட்டகங்களுள் தம்மை அடைத்துக்கொண்டு, ஒற்றைப்படையான நாவல்களை எழுதிய ஈழத்துப் எழுத்தாளர்களின் நூல்கள் கதைப் புத்தகங்களாகவே நின்றுபோயின.

37ஆவது மல்லிகை ஆண்டு மலரில் ஈழத்து விமர்சனம் பற்றிய எனது கட்டுரையொன்றில் அதன் அசைவிறுக்கத்துக்கான காரணமாக, தமிழ்நாட்டில்போல், மலையாள கன்னட தெலுங்கு இலக்கிய உலகுகள்போல், மற்றும் வேறுவேறு தேயங்களில்போல் அல்லாமல் விமர்சனத்துறை ஒட்டுமொத்தமாகவும் தன்னைப் பல்கலைக் கழகங்களில் புகுத்திக்கொண்டிருப்பதை ஆரோக்கியமின்மையின் அம்சமாகக் குறிப்பிட்டிருந்தேன். மேலைத் தேயங்களில் பல்கலைக் கழக மட்டங்களிலேயே நவீன இலக்கியத்துறையின் அலகுகள், பின்நவீனத்துவத்தின் சித்தாந்த வகைமைகள் அங்குள்ள மொழியியலார், தத்துவவியலார் மத்தியில் ஊற்றெடுத்தன என்ற உண்மையை நான்; மறந்துவிடவில்லை. சிந்தனைப் போக்குகளின் மய்யங்களாகவே பல்கலைக் கழகங்கள் விளங்கினதும் வரலாறு. ஆனாலும் அதற்கு நிகரான வெளியொன்று அங்கு அதேயளவான வீறுடன் வெளிவட்டத்தில் செயலாற்றியதென்பதும் உண்மையானதே. அதன் நிஜத்தின் வலு நான் குறிப்பிட்டபடி போலல்லாதுவிடினும், அதை ஒரு காரணமாக படைப்பாளிகளும் விமர்சகர்கள் சிலரும் ஈழத்தில் நிகழ்ந்த எமது நேர்ச் சந்திப்புக்களில் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.



4


இத்தகு கண்ணிகளிலிருந்து விடுபடுதல் எங்ஙனம் நம் படைப்பாளிகளுக்குக் கைகூட முடியும்? தெணியானின் ‘மரக்கொக்கு’ நூல் முன்னுரையில் பேராசிரியர் கா.சிவத்தம்பி இவ்வாறு கூறுவார்: ’முற்போக்கு எழுத்தாளர்கள் தமது சமூகக் கட்டுபாடுகளுக்கிடையே முற்றிலும் விசாலமான இலக்கியப் பரிச்சயத்துடன் பிரதேச மண்ணிலேயே காலூன்றி நிற்கின்றனர். இந்த மண்வாசனையைச் சர்வதேசியப்படுத்தும் விசாலமான இலக்கியப் பரிச்சயத்துடன் இவ்வெழுத்தாளர்கள் தொழிற்படும்போதுதான் எமது எழுத்தாளர்களின் சித்திரிப்புகள் பொதுப்படையான புனைகதை ஆய்வில் இடம்பெறும்.’

இது ஒரு சத்தியமான கூற்று. ‘மண்வாசனையைச் சர்வதேசியப்படுத்தும் விசாலமான இலக்கியப் பரிச்சயம்’ என்பதை, இலக்கியப் போக்குகள் குறித்தான விவரணப் புரிதல் என்று பார்க்கலாமெனத் தோன்றுகிறது எனக்கு. ஈழத்தில் பின்நவீனத்துவம்பற்றிய தேடல் தீவிர வாசகரிடையேஇருந்திருக்கிறது. ‘அலை’, ‘பூரணி’, ‘நந்தலாலா’, ‘சரிநிகர்’, ‘மூன்றாவது மனிதன்’ போன்ற சிற்றிதழ்களுடன், பத்மநாபஅய்யர், சி.புஷ்பராசா போன்ற தனிநபர்களின் தொகுப்பு நூல்களின் வெளியீட்டினையும் இவ்வுந்துதலுக்கான ஒரு காரணமாக இந்த இடத்தில் நினைக்கத் தோன்றுகிறது. இந்த வீச்சு படைப்பாளிகளிடத்தில் இருந்ததாவென்பது கேள்விக்குரிய விஷயம். அமைப்பியல், பின்அமைப்பியல், பின்நவீனத்துவ ஆக்கங்கள் நம் படைப்பாளிகள் மத்தியில் பரிச்சயமே ஆகவில்லை. தென்னமெரிக்க பின்நவீனத்துவ எழுத்துக்கள் அறிமுகமே கொள்ளவில்லை. பின்நவீனத்துவ அலை அவை தோன்றிய நாடுகளிலேயே ஓய்ந்துபோய்விட்டதாகக்கூட அங்கே ஓர் எழுத்தாளர் சொன்னார். இந்த நிலையில் நவீன நாவல்களின் படைப்பாக்கத்தின் முன்னெடுப்பு ஈழத்தில் எப்படிச் சாத்தியமாகியிருக்கக்கூடும்?

நூல் வேறு, பிரதி வேறு என்ற ஒரு மகா நிஜம் இருக்கிறது. நூல் கையால் தாங்கப்படுவதென்றும், பிரதி மொழியால் தாங்கப்படுவதென்றும் ரோலன் பார்த் கூறுவார் ( From Text to book). மிஷேல் பூக்கோ முன்வைத்த சொல்லாடல் என்ற சிந்தனைபற்றியும் நாம் கவனம் அதிகம் செலுத்தவில்லையென்றே கருதுகிறேன். மொழிக் கிடங்கு பற்றியும் அக்கறையற்றிருந்ததே நடந்திருக்கிறது. மொழிபற்றிய சிந்தனை எழுந்திருக்காததோடு, அதுபற்றிய கரிசனம்கூட எழுந்திருக்கவில்லையென்பது வியப்பு.

‘பின்நவீனத்துவம் என்பது மேற்குத் தேசத்தினர் நமக்களித்த தேசம் என்ற கட்டமைப்பை அய்யத்துடன் பார்ப்பதேயாகும் என்ற கருத்தே இந்தியச் சூழலில் நிலவியது’ என ஆஷிஷ் நந்தி கூறுவதுபோலும், ‘பின்நவீனத்துவமென்பது முதலாளிய சிந்தனை வடிவமே’ என்று பரவலாக இடதுசாரிகள் மத்தியில் உணரப்பட்டிருந்ததும் பின்நவீனச் சிந்தனைகள் ஈழத் தமிழ்ப் படைப்பாளிகள் மத்தியில் ஊற்றெடுப்பதைத் தடுத்ததா என்பது தெரியவில்லை. இவை வெல்லப்படவேண்டிய எண்ண அறுதிகளாய் இருக்கின்றன.

5


ஈழத்து இலக்கியத்தில் நவீனத்துவக் கூறுகள் செழுமைப்படத் தொடங்கிய காலமாக எழுபதுகளைச் சொல்ல முடியும். நமது சிறுகதைப் பரப்பில் முன்னோடிகள், மண்வாசனை எழுத்துருவாக்கிகளைத் தொடர்ந்து இக் காலம் முகிழ்த்ததாய்ச் சொல்லலாம். க.சட்டநாதன், எஸ்.ரஞ்சகுமார், உமா வரதராஜன் போன்றோர் இக் காலத்துக்குரியவர்களே. நாம் சிறுகதைத் துறையில் சிலவற்றையேனும், உன்னதமெனச் சொல்லக்கூடிய படைப்புக்களைத் தந்தவர்களாய் இன்னும் சிலர் நம்மிடையே இருக்கவே செய்கிறார்கள். தாமரைச் செல்வி, நந்தினி சேவியர், அறபாத், லஹினா ஏ. ஹக் போன்றோர் சில சிறந்த கதைகளை ஈழத்து இலக்கிய உலகுக்கு முத்திரைகளாய் அளித்துள்ளனர்;. ச.இராகவன், திசேரா போன்றோர் தடம் விலகி புதிது படைக்கும் முயற்சியில் ஈடுபாடு காட்டிக்கொண்டிருக்கிறார்கள். புலம்பெயர் சூழலிலும் க.கலாமோகன், ஷோபாசக்தி, கி.பி.அரவிந்தன், சக்கரவர்த்தி, அ.முத்துலிங்கம் போன்றோரின் பங்களிப்பு நிறையவே இருக்கிறது.

ஓட்டுமொத்தமான கணிப்பீடொன்றில் நாவலைவிட, சிறுகதையில் ஈழம் மேம்பாடடைந்தே இருந்திருக்கிறது. ஆனாலும் ஈழம் இலக்கியத்தில் பெருமைப்பட ஒன்று இருக்கிறதென்றால் அது கவிதைத் துறைதான்.



6



சொந்தப் பிரதேசத்திலும், புலம் பெயர் பிரதேசங்களிலும் கவிதை தன் முத்திரையை வலுவாகவேதான் பதித்திருக்கிறது. சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், சண்முகம் சிவலிங்கம், மு.புஷ்பராஜன், அ.யேசுராசா, எம்.ஏ.நுஃமான், சி;.சிவசேகரம், சு.வில்வரத்தினம் போன்ற நவீன காலக் கவிஞர்களின் கவிதைகள் இந்த உந்நதத்தைத் துவக்கிவைக்கின்றன என்றால் மிகையில்;லை.

மு.பொன்னம்பலத்தின் ‘விலங்கிடப்பட்ட தேசம்’, அஷ்வகோஸின் ‘வனத்தின் அழைப்பு’ போன்றவை நவீனகாலத்தில் நெடுங்கவிதைத் துறையில் நம் மிடுக்கைச் சொல்பவை. இன்னும் கி.பி.அரவிந்தனின் ‘முகங்கொள்’, திருமாவளவனின் ‘அஃதே இரவு அஃதே பகல்’ ஆகிய நூல்கள் புலம்பெயர் சூழலில் தோன்றி பல நல்ல கவிதைகளின் களனாய் இருப்பவை. இன்னும் பல நல்ல படைப்புக்களைத் தந்தவர்களின் கவிதைகள் தொகுப்பாகாமலேயுள்ளன. உடனடியாகக் குறிப்பிடக்கூடியவர்கள் கனடாச் சூழலில் தான்யா, கற்சுறா. இவ்வாறான கவிஞர்களின் படைப்புக்கள் நூலுருப் பெறுகிறபோது ஈழத்துக் கவிதையின் இன்னுமொரு பரிமாணத்தை நம்மால் காணமுடியும்.

இங்கே பதிப்புத் துறையின் போதாமைபற்றிக் குறிப்பிட்டேயாகவேண்டியிருக்கிறது. இது முக்கியமான அம்சமும்.

1998இல் ‘கனவுச் சிறை’ என்ற அய்ந்து பாகங்கள் கொண்ட என் மகா நாவலின் முதல் பாகம் வெளிவந்தது. 2001இல் அதன் நான்காம், அய்ந்தாம் பாகங்கள் வெளிவந்தன. மொத்தம் 1204 பக்கங்கள்கொண்டது அந் நாவல். சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’ மூன்று பாகங்களைக் கொண்டது. ஒரே தருணத்தில் பிரசுரமானது. ஜோதிர்லதா கிரிஜாவின் ‘மணிக்கொடி’ என்ற நாவல் இரண்டு பாகங்களைக் கொண்டது. அதுவும் ஒரே தடவையில் பிரசுரமானது. பொன்னீலனின் ‘புதிய தரிசனங்கள்’ என்ற 1500 பக்கங்களுக்கு மேல்கொண்ட மூன்று பாக நாவல் நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தினால் ஒரே தடவையில் வெளியிடப்பட்டதே. ஆனால் கனவுச் சிறை நான்கு தடவைகளில் பிரசுரமாக நேர்ந்தது. இடையே நான்கு வருஷ இடைவெளி. அது விமர்சன முகத்தையும், வாசகப் பரப்பையும் வெகுவாகச் சென்றடைந்ததென்றும் சொல்லமாட்டேன். அந் நூல் இன்றும் சிறைப்பட்டுக் கிடக்கிறதாகவே நான் உணர்ந்துகொண்டிருக்கிறேன்.

மிக்கேல் ஷோலகாவின் ‘கன்னி நில’த்தின் முதல் பாகம் வெளிவந்து இருபத்தேழு ஆண்டுகள் கழித்தே இரண்டாம் பாகம் வெளிவந்தமை இலக்கிய வரலாற்றில் நாம் காணக்கூடிய செய்தி. ஆனால் அது நூலுருவாவதன் முன் ஒரு பத்திரிகையில் தொடராக வெளிவந்த கதை. இதைப் புறநடையாகவே பார்க்கவேண்டும்.

ஈழ நூல்களின் பதிப்புத் துறையின் போதாமையே ‘கனவுச் சிறை’ தனிப் பாகங்களாய் வெளிவரவேண்டிய துர்ப்பாக்கியம் நேர்ந்தது. ஈழத்தில் புனைவிலக்கியத்துக்கு மல்லிகைப் பந்தல் வெளியீடு தவிர சொல்லும்படியான பதிப்பகம் அறவேயில்லை. குமரன் புத்தக இல்லம் ஆய்வு, மற்றும் கட்டுரை நூல்களுக்கான களமாக மட்டுமே இறுகிநிற்கிறது. மூன்றாவது மனிதனின் சில நூல்களின் வெளியீட்டை கவனத்திலெடுக்கவேண்டுமெனினும் அதை ஒரு சிறிய முயற்சியாகவே கொள்ளமுடியும். சென்னையைத் தளமாகக்கொண்டு இயங்குகிற பதிப்பகம் மித்ர. ஈழத்து எழுத்தாளர்களின் சில மறுபதிப்புக்களையும், புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் சில மொழிபெயர்ப்புக்கள், ஆக்கங்களையும் அது வெளியிட்டிருப்பினும் கனதியான ஆக்கங்கள் காலச்சுவடு, உயிர்மை, தமிழினி, அடையாளம் போன்றவை மூலமாகவே வெளிவந்தன என்பது குறித்து நாம் யோசிக்க நிறைய உண்டு. பூபாலசிங்கம் பதிப்பகத்தையும் குறிப்பிடலாம். ஏல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக நோக்குகிறபோது, அறுபது எழுபதுகளில் அரசு வெளியீட்டின் பங்களிப்பினளவுகூட இலங்கைப் பதிப்பகங்களால் படைப்பாளிகள் பயனடையவில்லை என்பது கண்கூடு. படைப்பாளிகளே தமக்கான பதிப்பகங்களை உருவாக்கி ஒன்றிரண்டு நூல்களை வெளியிட்டுள்ள, வெளியிடும் சூழலே அங்கு இன்னும் நிலவுகின்றமையே நிதர்சனம்.

தமிழ் நாட்டில் நூலகத்துக்கான ஏற்பு தனியான படைப்பாளிகளை மட்டுமல்ல, பதிப்பகங்கள் உருவாகவும் உந்துதலாக இருக்கிற நிலைமையில், ஈழத்தில் அம்மாதிரியான முன்முயற்சியின்மை நூல்கள் வெளிவருவதற்கான வாய்ப்பினை அருகச் செய்வதோடு, நூலகப் பழக்கத்தினையும் நசிக்கச் செய்வதையே நாம் காணக்கூடியதாயிருக்கிறது. இந்து கலாச்சார அமைச்சினதும், வட-கிழக்கு மாகாண சபையினதும் நூல்கொள்வனவுத் திட்டம் சரிவரவும், தொடர்ச்சியாகவும் செயற்படுத்தப்படவில்லை.

‘எழுதப்படாத எனது கவிதை வரிகளை யாராவது எழுதுவீர்களா’ என்ற மாலதியின் கவிதை வரிகளை இப்போது நினைக்க முடிகிறது. கவிதையின் பெருவீறொடு வந்திருக்கும் இந்தக் குரல்தான் பதிப்புச் சார்ந்து நம் கவிஞர்களின் சிறுகதையாசிரியர்களின் நாவலாசிரியர்களின் குரலாகவும் இருக்கிறது என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.



7


இப்போது ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டிருந்த ஆங்கில நூல்கள் பற்றிய விஷயத்துக்கு வருவோம். ‘டாவின்ஸி கோட்’ன் அசுர விற்பனை, யேசு குறித்த மறுவாசிப்புகளின் மேலுள்ள வாசக ஆர்வம் தீவிர இலக்கிய வாசிப்போடு நேரடித் தொடர்பில்லாதனதான். இந்த நூல் களேபரங்களுக்கு அப்பால், சந்தைப்படுத்தும் புறநிலை உத்திகளுக்குப் பின்னால், லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து திறம்வாய்ந்த இலக்கிய ஆக்கங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன என்ற உண்மையை நாம் மறந்துவிட முடியாது. இன்னுமொன்று, வாசகன், தீவிர வாசகன் என்ற பிரிநிலைக் கோட்டை நாம் சுலபமாக வரைந்துவிட முடியாதென்பதையும் மனத்திலிருத்தியாக வேண்டியுள்ளது. அப்படி அது ஒரு பகுப்பு நிலைக்கான உள்ளகத் திட்டம் எனக் கொள்ளின், தீவிர வாசிப்புக்கான தளத்தை நாம் அந்த பொது வாசகப் பரப்பிலிருந்தே விசாலித்துக்கொண்டு செல்கிறோம் என்ற உண்மையை உரத்துச் சொல்லியே ஆகவேண்டும்.

‘பனுவலின்மீது ஓரளவேனும் விருப்பின்றி எந்தவொரு வாசிப்பும் சாத்தியமில்லை. ஒவ்வொரு வாசிப்பிலும் பனுவலுக்கும் வாசகனுக்குமிடையே கையோடு கைசேர்ந்த உறவுண்டு. பனுவலின் ஆசைக்கும் வாசகனின் ஆசைக்கும் இடையே ஓர் ஒருங்கிசைவுண்டு. அதுதான் வாசக இன்பம்’ என்றார் தெரிதா. இந்த இன்பத்துக்கானதே வாசிப்பு. கேளிக்கை நூல் வாசிப்புத் தவிர்ந்த அனைத்து வாசிப்புப் பரப்பையும் கவனமாக்கியே தீவிர இலக்கியப் படைப்பு தன் நிலைப்பாட்டை எடுக்கவேண்டுமென்பது சூழலின் தர்க்கம். இவை இன்னும் விரிவான யோசனைக்கும் ஆலோசனைக்கும் உரியவையே. இணையம், சிற்றிதழ்கள் முதலான ஊடகங்கள் தீவிர வாசகர்கள், படைப்பாளிகளுக்கான இயங்கு தளமாக இருக்கிற வகையில் இந்த உண்மையையும் மனத்தில்கொண்டு அந்த யோசனையும் ஆலோசனையும் இருக்கவேண்டுமென வழிமொழிகிறேன்.

The Article was Read at the Toronto University Tamil Studies Conferance on 2007







000000

Comments

தமிழ்நாட்டில் கனவுச்சிறை எங்கே கிடைக்கும்? haranprasanna@gmail.com என்ற முகவரிக்கு நேரம் கிடைக்கும்போது பதில் அனுப்புங்கள். ஒரு வாச்கர் இப்புத்தகத்தைக் கேட்டிருக்கிறார். நன்றி.

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்