ஊர்கூடித் தேரிழுப்போம்



ஊர்கூடித் தேர் இழுப்போம்!




ஒரு கலை வடிவமானது ஒரு மக்களினத்திடையில் தோன்றுவதற்கான காரணங்கள் இருந்ததுபோல, அது புத்துயிராக்கப்படுவதற்கான முயற்சிகளின் பின்புலத்திலும் சில அக புறக் காரணிகள் இருக்கவே செய்யும். இதனடியாகப் பிறக்கிற இன்னோர் உண்மை, அந்தக் கலையடைந்திருந்த ஓர் உன்னத காலத்துக்குப் பின்னால் அதற்கொரு இறங்குமுகம் இருந்தது என்பதாகும்.

இந்த மூன்று நிலைகளின் காரணங்களையும் ஒரு பார்வையாளன் அறிந்திருக்கவேண்டும்தான் என்ற அவசியமில்லை. தோற்றக் காட்சிகளில் மனத்தை இலயிக்க விடக்கூடிய கால அவகாசமும், அது வெளிப்படுத்தும் உட்கிடை மெய்யனுபவங்களில் ஆழ்ச்சி கொள்ளக்கூடிய மன விலாசமும் இருந்துவிட்டால் ஒரு பார்வையாளனுக்கு ரசனை சாத்தியமாகிவிடும். ஆனால், ஒரு சமூக கலை இலக்கிய அக்கறையாளனுக்கோ, விமர்சகனுக்கோ இந்தக் காரணங்கள் முக்கியமானவை.

ஒரு கலைப் புத்துயிராக்கமானது எங்கேயும், எப்போதும் விரும்பப்படக்கூடியதுதான். மத்திய காலத்துக்குப் பின்னால் புதிய தரைவழிப் பாதைத் திறவுகள் வர்த்தக விரிவுகளுக்கு மட்டும் ஆதாரமாக அமையவில்லை. கலைப் பரிமாற்றங்களும், இலக்கிய விரிவாக்கங்களும் அதனூடு ஏற்பட்டு அதுவரை கண்டிராத அரசியல் சிந்தனை மாற்றமுள்ள ஒரு புதிய மறுமலர்ச்சிக் காலத்தையே மேற்குலகில் பிரசவிக்க வைத்தன. இருள்வெளிகளினூடு நடந்துகொண்டிருந்த மேற்குலகின் மனிதர்களுக்கு மத்திய ஆசியா வெளிச்சமளித்த கதையும் அதுதான். கலைப் பரிணமிப்புக்களும், புத்துயிராக்கங்களும் ஒரு வரலாற்று மாற்றத்தையே உருவாக்கிக்காட்டியது என்பதுதான் ஐரோப்பிய சரித்திரம் சொல்லுகிற செய்தி.
ஒரு சமூக கலை இலக்கிய அக்கறையாளன் இந்தளவோடு திருப்திப்பட்டுவிட முடியாதென்பதும் அந்தளவான முக்கியத்துவமானதுதான்.

புத்துயிராக்கங்களின் அக புறக் காரணிகள் எப்போதும் வெளிப்படையாகத் தம்மை இனங்காட்டிக் கொள்வன என்றும் சொல்லிவிட முடியாது. அவ்வாறான சமயங்களில் அப் புத்துயிர்ப்பின் முன்னெடுப்பாளர்களுக்கு அக் கலையின் தன்மையையும், அது புத்துயிர் பெறும் தருணத்தில் நிகழக்கூடிய விளைவுகளையும் சுட்டிக்காட்டுவது அவசியமான ஒரு செயற்பாடே.

மே 22இல் ஸ்கார்பரோவிலுள்ள அட்லான்ரா மண்டபத்தில் ‘கனேடியத் தமிழ் நாட்டார் கலைக் கழகம்’ என்ற அமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ‘ஈழத் தமிழர்களின் தேசியக் கலைவடிவம் நாட்டுக்கூத்து என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். வடமோடி, தென்மோடி அல்லது வடபாங்கு தென்பாங்கு எனவும், மன்னார்ப் பாங்கு வன்னிப் பாங்கு எனவும் பல்வேறுபட்ட தனித்துவங்களுடன் பேணப்பட்டு வந்துள்ள இக்கலை வடிவத்திற்கு கனடாவில் வாழும் தமிழர்கள் புத்துயிர் அளித்துப் பேணவேண்டும்’ என அக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர்களின் அறிக்கை கூறியிருக்கிறது.

ஈழத் தமிழருக்கான ஒரு தேசிய கலை வடிவமாக நாட்டுக்கூத்தைக் கொள்வதற்கான சகல அருகதைகளையும் கொண்டுள்ளதுதான் அக் கலை. அவ்வாறான ஒரு தேவையையும் நாம் புறம்தள்ளிவிட முடியாது. ஆனாலும் அக்கலைபற்றிய புரிதலுடன் புத்துயிராக்கத்துக்கான முயற்சியின் முன்னெடுப்புக்களைச் செய்யவேண்டியதும் அவசியமாகும்.

உழைப்பின் பொழுதுகளில் பிறந்த கலைகளாகவே இசையையும், ஆட்டத்தையும் இனங்கண்டிருக்கிறார்கள் கலை ஆய்வாளர்கள். இவற்றிலும் இசையே முந்தியதென்றும் அவர்கள் கூறுவார்கள். ஆட்டம் அல்லது கூத்து அந்த இசையின் வெளிப்பாடு. இவையும் நாட்டுப் பாடல், நாட்டுக் கூத்து ஆகிய கலைகளாகவே அவற்றின் வளர்நிலைக் காலங்களில் செழிப்புற்றிருக்கின்றன. உழைப்பின் கனதி குறைந்து அறுவடை முடிந்த வெகிர் காலங்களில் ஊர்ப் பொது முன்றிலில் அவை சுகிப்பட்டிருக்கின்றன. இவற்றைப் பார்க்கும்போது நாட்டுப் பாடலும், நாட்டுக்கூத்தும் பொதுமக்கள் கலையாக வளர்ந்துவந்த வரலாறு புரியும்.

பின்னால் நவமயமாக்கல் நிகழ்ந்த காலங்களிலும், அக்கலைகளைப் பேணிப் பாதுகாத்து வந்தவர்கள் கிராம மக்களே. அந்நியர் ஆதிக்க காலங்களில் அடிமைத்தனத்தாலும், நாகரிக மோகத்தாலும் இவை மொத்தமுமாய் அழிநிலை அடையாமல் காப்பாற்றப்பட்டதெனின் அதன் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவை கிராம மக்கள்வசத்தில் இருந்தன.

இது பரவலாக்கத்தை அடையாமல் தேங்கிற்று பிற்காலத்தில். நாகரிக மோகம் ஏறுமுகமடைய இக் கலைகள் கவனிப்பாரற்றுப் போயின. ஈழத்தைப் பொறுத்தவரை இந்நிலையிலிருந்து நாட்டுக்கூத்துக் கலையைக் காப்பாற்றும் மிகமுக்கியமான பணியைச் சாதித்தன இலங்கைப் பல்கலைக் கழகங்கள்.

இவ்வாறு அறுபதுகளில் காப்பாற்றப்பட்ட இக் கலைகள் எண்பதுகளிலிருந்து இன்னொரு தளத்துக்கு நகருகின்றன. அரசியல் சமூக பிரசாரத்தின் மையக் கலைகளாக இவை வலம் வந்த சுமார் மூன்று தசாப்தங்களில் மீண்டும் நலிவைநோக்கி நடந்தன என்பதே உண்மை.

இந்த உண்மை நிலையிலிருந்து புத்துயிராக்கம் தொடரப்படவேண்டும் என்பது ஒரு சரியான வாதம்தான். கலைகள் ஆதி உண்மைகளைப் பேசுவன. அவ்வாறான ஆதியுண்மைகளைப் பேசியே அவை வளர்ந்தும் வந்தன. இந்த புராதன கலைகளை ஆதியுண்மை பேசுவதினின்றும் விலக்கி, சமகால அரசியல் சமூக நிலைமைகளை வெளிப்படுத்தும் வாகனங்களாக மாற்றிய வேளையில் இக் கலைகளின் நலிவு தொடங்கியது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கலை தோன்றுவதற்கான காரணம் எதுவோ, அதுதான் அது தொடர்வதற்கான நியாயமும். ‘கலை கலைக்காகவே’ என்ற கலைவாதியல்ல நான். கலையில் சமகாலக் கருத்துக்கள் இருக்க முடியும். கருத்துக்களின் இழையோட்டம் இருக்கக்கூடிய அதே வேளையில், கலையை கருத்தின் வாகனமாகப் பாவித்துவிடக்கூடாது என்பதும் என் தெளிவாக இருக்கிறது.

நாட்டுக் கூத்திலுள்ள ‘நாட்டு’ என்ற அடையை எடுத்துவிட வேண்டுமென்றும், அதுதான் தற்போதைய இளம் சமுதாயத்தைக் கவரக்கூடியதாக இருக்குமென்று கூட ஒரு வாதம் சிறிதுகாலத்துக்கு முன்பு வைக்கப்பட்டது. கனேடியத் தமிழ் நாட்டார் கழகத்திற்கும் இதுபோல ஒரு யோசனை தோன்றியிருக்கிறது. ‘பரதக்கலை ஆசிரியர்களையும் அவர்களது மாணவர்களையும் இக்கலை முயற்சிகளில் ஈடுபடுத்தும்போது மேலும் இக்கலை ஏற்றம்பெறும் என்பது எமது நம்பிக்கை’ என்கிறார்கள் அவர்கள்.

ஒரே நாட்டில் இருக்கும் கூத்தில்கூட பாங்குகள் கலந்துவிடுகின்றன. பாங்குகள் மட்டுமல்ல, கலைகளுக்குள்கூட ஓரிரு அம்சங்கள் ஒன்றோடு ஒன்று கலப்பதும் இயல்பான விஷயம்தான். ஆனால் கலப்பது அல்ல, அந்த இயல்பான கலப்பு என்பதே முக்கியமான விஷயம். இவற்றுக்கெல்லாம் வேலி போட்டுவிட முடியாது. போட்டுவிடவும் கூடாது.
தமிழை ஒருகாலத்தில் நீச்ச மொழியென எண்ணி அதனோடு சமஸ்கிருதத்தைக் கலந்து அதைப் புனிதப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்றன. மணிப்பிரவாள நடையொன்று உருவாகி தமிழே அழிந்துவிடுகிற நிலை ஏற்பட்டது. அந்த அழிநிலையிலிருந்து தமிழ் எவ்வாறோ காப்பாற்றப்பட்டது. இருந்தும்தான் ஒரு பரிதிமாற் கலைஞர் ஒரு மறைமலையடிகளது தோற்றங்களும், ஒரு திராவிட இயக்கத்தின் வருகையும் பின்னால்கூட அவசியமாகிற அளவுக்கு அதன் பாதிப்புக்கள் ஆழமாகிவிட்டிருந்தன.

அத்தகைய ஆபத்து நாட்டுக்கூத்துக்கு ஏற்படாதிருந்தால் சரிதான். அது சாதாரண மக்களின் கலையென்பதும், அது ஆதியுண்மைகளைப் பேசி வளர்ந்துவந்தது என்பதும் புத்துயிர் கொடுக்க முனையும் சகலரது கவனத்திலும் இருந்தாகவேண்டும்.

புலத்திலிருந்து ஒரு கலை மரபைக் கொண்டுவந்து இங்கே புலம்பெயர்ந்த இடத்தில் வைத்துப் பேண நாம் முயற்சிக்கிறோம். இதற்கான சாதக, பாதக அம்சங்கள் துல்லியமானவை. ஆனாலும் அடிப்படையில் ஈழத் தமிழருக்கு தம் கலை அடையாளம் என்கிற ஒரு தேவையிருக்கிறது என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. அந்தத் தகுதி நாட்டுக்கூத்தைவிட வேறு எந்தக் கலைக்குமே இல்லையென்பதையும் ஒருவர் அறுதியிட்டுக் கூறமுடியும்.

இந்த நிஜங்களின் புரிதலோடு கனேடிய தமிழ் நாட்டார் கலைக் கழகம் இயங்கவேண்டுமென்பது என் விருப்பம். அவர்களுக்கு அக புற காரணங்கள் வேறு இருக்கின்றன என நான் சொல்லவரவில்லை. அவர்களில் பலர் எனக்குப் பரிச்சயமானவர்கள். சிலரோடு நெருங்கிய தொடர்பும் உள்ளது. அவர்களது மாசறு நோக்கத்தை நான் புரிந்திருக்கிறேன். மதிக்கிறேன். என்றாலும், சில எச்சரிக்கைகள் அவசியமானவை. இந்த எச்சரிக்கைகளை உணர்ந்து அவர்களது இயக்கம் இருக்கவேண்டும் என்பது மட்டுமே எனது விருப்பம். ‘வாருங்கள், ஊர்கூடித் தேர் இழுப்போம்!’

0

தாய்வீடு, அக்.2011

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்