நிகழ்வுகளும் நீரோட்டங்களும்



நிகழ்வுகளும்
நீரோட்டங்களும்



எனது வலைப்பூவின் சுயவிபரக் குறிப்பில், வாழ்வின் சமச்சீர் குலையும் தருணங்களில் என்னைத் தொலைத்து மீளும் ஒரு தந்திரத்தை அல்லது எனக்கேயான ஒரு வழிமுறையை நான் பதிந்திருக்கிறேன்.

இந்தத் தொலைதலும் மீள்தலும் என் பதின்ம வயதுப் பிராயம் முதல் தொடர்ந்தே வந்திருக்கிறது. தன்னைத் தொலைத்தலென்பது வேகமாக இயங்கும் ஒரு பிரபஞ்சத்திலும், அதே கதிக்கு ஈடுகொடுத்துச் சுழலும் ஒரு சமூகத்திலும் மிகச் சாதாரணமாக முடிந்துவிடுவதில்லை. அதற்கு ஒரு துறவு மனப்பான்மையே வேண்டும். இல்லறத்தில் துறவறத்தையும், துறவறத்தில் இல்லறத்தையும் நான் இந்தத் தொலைப்புகளில் அடைந்தது சர்வ உண்மை. இதை வேறொரு பத்தி எழுத்திலும் குறிப்பிட்டிருக்கிறேன். தேவதைகளின் சுகங்கள் மட்டுமில்லை, அக்கால அனுபவங்களும் ஆயுள் பரியந்தம் என்னால் மறக்கப்பட முடியாதவை. அதை ஒரு ராசி என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை விளக்கும் சமயமல்ல இது. இங்கே இது சார்ந்து வேறொரு விஷயத்தையே சொல்லப்போகிறேன்.

கடந்த சில காலமாக இந்தத் தொலைப்பு வாழ்க்கையையே நான் நிகழ்த்திக்கொண்டிருப்பினும், இது முன்னவைகள் போலன்றி இந்த மண்ணுக்கும் கால தேச வர்த்தமானங்களுக்குமேற்ப வேறொரு பரிமாணத்திலேயே அமைந்திருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது. இந்த தன்னைத் தொலைத்த வாழ்க்கையில் சகல அம்சங்களும் இயைந்து போகினும், முகவரியைத் தக்கவைத்திருப்தும் திடீர்த் தொடர்புக்கான ஊடகங்களை இழக்காதிருப்பதும் நிச்சயமாக வேறுபட்டதே.

இது எனக்கு ஒத்துப் போகிறது என்பதைத் தவிர இதில் சொல்ல அதிகமில்லை.
அண்மையில் எனக்கு மிகவும் பழக்கமான ஒருவர் சொன்னார், ‘நீங்கள் இப்போது முன்புபோல் வெளியே வந்து பழகுவதில்லை தெரிந்தவர்களோடு. எழுத்தாளன் எவனுக்கும் இது ஒரு மந்தநிலையை ஏற்படுத்தி அவனது எழுத்தை வறளச் செய்துவிடுகிறது’ என்று.

அவருக்கு என் தொலைதலும் மீள்தலுமான கதையை என்னால் சொல்லியிருக்க முடியும். ஆனால் அவர் எதைப் புரிந்துகொள்வார்? என் வலிதுகளை பலஹீனங்களாக நினைத்திருப்பவர் அவர். அதனால் அப்போதைக்கு, ‘நான் வழக்கமான கூட்டத்தோடு இல்லையெண்டாலும், வேறொரு பகுதியாரோடு பழகிக்கொண்டுதானே இருக்கிறன்’ என்று மட்டும் சொல்லி விலகிக்கொண்டேன்.

அது அப்படித்தானா என்று பலவேளைகளில் நான் யோசித்ததுண்டு. இந்த ஊரோடு பழகுதல் என்பதுதான் எழுத்தின் சரஸாக உள்ளோடுகிறதா? சமகால நிகழ்வுகளை அறியாத படைப்பாளி அந்தச் சமூகத்தின் அசைவியக்கத்திலிருந்து அந்நியப்பட்டுப் போகிறானா? அது வறள்நிலையின் அம்சமாகத் தொழிற்படுகிறதா?

சிறிது யோசனையின் பின்னரே பொதுப் புத்தி கிளர்த்தியிருக்கக் கூடிய இக் கேள்விகளின் விடைகள் எனக்கு வெளித்தன.

தன்னைத் தொலைத்தலென்பது உள்ளொடுங்குதலாகும். ஆமையின் உள்ளொடுங்குதலுக்கு இது நிகரானது. ஆமையின் உள்ளொடுங்குதலை ஐம்பொறிகளின் உள்ளொடுங்குதலுக்கு விளக்கமாக பல்வேறு சமய நூல்களும் தெரிவித்திருக்கின்றன. ‘ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கம்’ என்று கூறும் உமாபதி சிவாச்சாரியாரின் ‘உண்மைநெறி விளக்கம்’.

இது அதுவல்ல. ஆனாலும் ஒருவகையில் அதுவும்தான்.

நகர்வு என்பது விழிப்பு நிலையில் சாத்தியமாவது. ஒடுக்கம் உறக்கத்திலும் நிகழமுடியும். ஜாக்கிரத நிலையிலும் நிகழலாம்.

ஒரு படைப்பாளி தன் அனுபவங்களை நிகழ்வுகளின் மூலமாக அடைந்துகொள்வதில்லை. மாறாக, நீரோட்டத்தின் மூலமே அடைந்துகொள்கிறான். நீரோட்டத்தைப் புரிந்துகொள்ளக் கூடிய ஒரு வரலாற்றாசிரியன் நிகழ்வுகளை ஊகிக்கிறான். நாளைய நீரோட்டத்தைப் புரியக் கூடிய படைப்பாளி நிகழ்வுகளைப் புனைகிறான். மகாநாகன் என்ற மகாவம்ச வரலாற்றாசிரியன் சிறந்த புனைவாளன். கூட, சிறந்த வரலாற்றாசிரியனும். பழைய அனுமானங்களின்படி.

ஒரு சமகால சமூகத்தின் நிகழ்வுகள், சிந்தனைகள் என்பன அச் சமூகத்தின் செய்திகள் மட்டுமே. நீரோட்டம் மட்டுமே வரலாற்றாவணமாகிறது. இந்த நீரோட்டம் தெரிந்தால் நிகழ்வுகள் தேவையே அற்றன. ஒரு புனைகதை ஆசிரியனுக்கு நீரோட்டம் மட்டுமே போதும். வரலாற்றாசிரியனுக்கே இவை போதுமானதாக இருந்தன என்பதுதான் வரலாறு.

மாபெரும் வரலாற்றுப் புனைகதையாளர்களின் வீர்யம் இந்த நீரோட்டத்தினைப் புரிந்துகொண்டதன் விளைவே. சேர் வால்டர் ஸ்கொட், அலெக்ஸாண்டர் புஸ்கின், ஜேம்ஸ் எ. மிச்சினர், அலெக்ஸாண்டர் டூமாஸ், மார்கரட் மிச்செல், அனிதா கனெகர், உம்பர்டோ இகோ, சராதிந்து பந்தோபாத்யாய், மார்கரெட் அட்வுட் போன்றோரது மட்டுமல்ல, சிறந்த தமிழ் வரலாற்று நாவலாசிரியர்களான கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஜெகசிற்பியன், நா.பார்த்தசாரதி, அகிலன் அரு.ராமநாதன் போன்றோரது திறமைகளெல்லாம் இந்தப் பின்னணியிலிருந்தே ஊற்றெடுத்திருக்கின்றன.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’, நா.பா.வின் ‘மணிபல்லவம்’, ‘கபாடபுரம்’, ‘பாண்டிமாதேவி’ போன்றவை சொல்லப்படத் தக்க நாவல்கள். ஆனாலும் அவற்றின் தரம் அவற்றின் சொல்லாட்சியினால் வெகுஜன மயப்பட்டு இலக்கிய உலகில் கேள்விக் குறியாயின என்பதுதான் உண்மை.

நிகழ்வுகளல்ல, நீரோட்டமே ஒரு படைப்பாளிக்கு போதும் என்பதுதான் மெய்யாலுமே நிலையாக இருந்துவந்திருக்கிறது.

என் ஒடுக்கம் அல்லது தன்னைத் தொலைத்தல் இந்த நீரோட்டத்தின் நிலையை அனுமானிப்பதற்கான உறங்குநிலைக் காலமாகவே இதுவரை இருந்துவந்திருக்கிறது. இல்லாவிட்டால் எனக்கு ‘கனவுச் சிறை’யும், ‘லங்காபுர’மும் ஆகிய நாவல்கள் சாத்தியமாக ஆகியிருக்கவே முடியாது.

வரலாற்றுப் புனைவென்பது நிகழ்வுகளை அறிந்ததின் விளைவல்ல. ஓரிரு நிகழ்வுகளின் மூலமே நீரோட்டத்தைப் புரிந்துகொண்டதன் விளைவுதான்.

0

தாய்வீடு , பெப்.2011

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்