எஞ்சிய நாட்குறிப்பின் பக்கங்கள்



கழிந்துபோன ஆண்டும்
எஞ்சிய நாட்குறிப்பின் பக்கங்களும்



நாட்குறிப்பு எழுதுவது ஒரு கலை என எப்போதோ எவரோ சொன்ன ஒரு வாசகம், கடந்த ஆண்டு (2010) எனது நாட்குறிப்பினைப் பார்த்தபோது ஓர் அதிர்வோடு என் ஞாபகத்தில் பட்டு எதிரொலிக்க நின்றது. முந்நூற்று அறுபத்தைந்து நாட்களைக்கொண்ட நாட்குறிப்பில் பதினெட்டுப் பக்கங்களைத் தவிர மீதி எழுதப்படவேயில்லை.

இந்த பதினெட்டுப் பக்க நிகழ்வுகள் மட்டும்தானா கடந்துபோன ஆண்டில் நான் குறிப்பிடக்கூடியதாக என் வாழ்வில் சம்பவித்தவை?
நினைத்துப் பார்க்கையில் ஒவ்வோராண்டும்கூட நாட்குறிப்பின் எஞ்சும் பக்கங்கள் என்னை அதிரவைத்தே சென்றிருப்பது ஞாபகமானது. பின் எதற்காகத்தான் ஒவ்வோராண்டின் முடிவிலும் ஏதோ தவறவிட்டுவிடக்கூடாத கைங்கரியம்போல் நாட்குறிப்பினை தேடி, ஓடி வாங்கி எழுத ஆரம்பிக்கின்றேன்?

எப்போதும்போல் இந்த ஆண்டும் பக்கங்கள் எஞ்சுவதுபற்றிய விஷயத்தை விட்டுவிட முடியாது. இதுபற்றி தீர்க்கமாக நான் யோசித்தே ஆகவேண்டும்.
கி.பி.2 ஆம் நூற்றாண்டில் மார்க் அரேலியஸ் எழுத ஆரம்பித்ததிலிருந்து இந்த நாட்குறிப்புப் பழக்கம் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. கிரேக்கச் சொல்லின் மூலத்திலிருந்து இந்த டயறி (நாட்குறிப்பு) என்ற ஆங்கிலப் பதம் தோன்றியிருப்பினும், இதை எழுதும் பழக்கம் மத்திய ஆசியாவிலும், கிழக்கு ஆசியாவிலும்தான் தொடர்ச்சியிலிருந்து இன்றைய வடிவமும், கருத்துருவமும் பெறக் காரணமாகியிருந்திருக்கிறது.

மிகப்பெரும் பூகோள, வரலாற்று நிகழ்வுகள் இவ்வகை நாட்குறிப்புகளில் பதிந்து வைக்கப்பட்டு, பின்னர் நூல் வடிவம் பெற்றபோது மிகப்பெரும் கவனங்களை ஈர்த்து அதுவரை நிலவியிருந்த நிச்சயங்களை அடியோடு மாற்றியிருக்கின்றன.

அறியப்படும் முதல் நாட்குறிப்பாளரான சாமுவேல் பெப்பிஸ் (1633-1703)இன் தினவரைவுகள் அதுவரை கேம்பிரிட்ஜ் மெக்டலின் கல்;லூரியில் பாதுகாப்பாயிருந்து 1825இல்தான் வெளியுலகை அடைந்தன. ஆங்கில வரலாற்றைக் கட்டமைப்புச் செய்வதில் இது முக்கியமான பங்கை ஆற்றியிருப்பதாகக் கூறுகிறார்கள் ஆங்கிலேய வரலாற்று அறிஞர்கள்.
இதுபோலவே சாமுவெல் பெப்பிஸ_க்கு சமகாலத்தவரான ஜோன் ஈவ்லின் எழுதி வைத்த நாட்குறிப்பும், அக்காலத்தில் நிகழ்ந்த ஆங்கிலேய அரசின் மீளமைவினதும் (பதினேழாம் நூற்றாண்டின் ஆறாம் தசாப்தம்), மாபெரும் பிளேக் நோய்ப் பரவலினதும், லண்டனின் மிகப்பெரிய தீவிபத்தினதும் கண்கண்ட சாட்சியங்களின் பதிவுடனான ஆவணமாகக் கருதப்படுகிறது.

எல்லாவற்றையும்விட, தன்வரலாறு என்ற பகுதி இலக்கிய வகையினமாக அங்கீகாரம் பெற்றிருப்பதற்கான காரணம்தான் என்னைப் பொறுத்தவரை முக்கியமான விஷயமாகத் தென்படுகிறது.

ஒரு நாட்குறிப்பென்பது வரலாற்று, சமூக நிகழ்வுகளினது மட்டுமேயில்லை, மாறாக தனிமனித இச்சைகளதும் ஏமாற்றங்களதும் தோல்விகளதும் பதிவாகவும் அது இருக்கமுடியும். தனிமனிதனின் அந்தரங்கமாய் இருக்கும் ஒரு நாட்குறிப்பு, அச்சு எந்திரம் ஏறவேண்டிய பிரதானம் அடைவது இரண்டு காரணங்களிலெனத் தெரிகிறது. ஒன்று, அது சகமனிதர்களின் வாழ்வனுபவங்களுக்கு நேர்நேர் எதிரானதாக இருந்திருக்கவேண்டும். அல்லது அது அம்மனிதர்களின் வாழ்வனுபவங்களுக்கு மிகமிக நெருக்கமானதான உணர்வுகள், நிகழ்வுகளைக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

இந்த இரண்டில் எந்த ஒன்றாலுமே ஒரு படைப்பாக்கம் ஒரு இலக்கியப் பிரதியாக வடிவமெடுக்க முடியும். சுயவரலாற்றுப் பிரதிகள் இலக்கிய வகையினமாக ஆன சூட்சுமம் இங்கிருந்துதான் விடுபாடடையத் தொடங்கியது. எனது எஞ்சும் நாட்குறிப்பின் பக்கங்களுக்கான விடையையும் நான் இங்கிருந்து சென்றே அடைதல் முடியும்.

வரலாறா இலக்கியமா என்று கணிக்கமுடியாத அளவுக்கு ஒரு பிரதி அதன் செய்நேர்த்தியால் மகத்தான கவனிப்பைப் பெறமுடியும் என்பதற்கு Viladimir Nobokov எழுதிய Speak, Memory என்ற நூல் உடனடியாக ஞாபகத்துக்கு வரும் ஓர் உதாரணம். Lolita வுக்கும், The Defence க்குமுள்ள அதேயளவு முக்கியத்துவம் அவரது Speak,Memory க்கும் இலக்கிய உலகில் உண்டு. ஆயினும் அது பேசியது தன்னை மட்டுமில்லை, தன் கால வரலாற்றினையும் பற்றித்தான்.
ஒரு நாட்குறிப்பு ஒருவரின் அந்தரங்கத்தின் பதிவாக இருக்கிறதெனில், எனது நாட்குறிப்புகளில் எஞ்சிய பக்கங்கள் என் அந்தரங்கமின்மையின் ஓரம்சமாகக் கருதப்பட முடியுமோ?

நாட்குறிப்புகளாக விரியும் பன்னூற்றுக்கணக்கான இணைய தளங்களும், வலைப்பூக்களும் உலகின் பல்வேறு மொழிகளில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. முதன்முதலில் உலக வலைத்தளத்தில் ஏறியது ‘Open Diary’ என்ற Claudio Pinhanez இன் நாட்குறிப்பாகும்.
இன்றைக்கு நாட்குறிப்பானது தன் வடிவங்களைப்போலவே தனது உபயோக நோக்கங்களையும் மாற்றிக்கொண்டிருக்கிறது. தன்னை, தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒருவகையான காட்சிப்படுத்தும் மனநிலையின் தனிமனிதம் சார்ந்த விடுதலை, இந்த நாட்குறிப்பின் நோக்க விரிவுகளை தாராளமாகப் பயன்படுத்துவதாக தயங்காமல் சொல்லமுடியும்.

இந்தவகையில் பார்க்கும்போது, என் நாட்குறிப்புகளின் எஞ்சிய பக்கங்கள், என் ஏக்கங்களும் தோல்விகளும் அபிலாசைகளும் எழுத்தினால் நிரப்பப்படாதவையென்றே கருதத் தோன்றுகிறது. அவை எனக்கு மட்டுமானவை. என் மீள்பார்வைக்கு மட்டுமேயானவை. ஒரு குறிப்பிட்ட ஆண்டின் எந்த என் நாட்குறிப்பை எடுத்தாலும், அதன் எழுதப்படாப் பக்கங்களில் எனது ஏமாற்றங்களின் தோல்விகளின் அவமானங்களின் அவலங்களின் இழைக்கப்பட்ட துரோகங்களின் பதிவுகளை என்னால் வாசிக்க முடிகிறது.

இவையே ஒருபோது சிறுகதையாக, கட்டுரையாக, நாவலாக வடிவமாகிவிடுகிறது என்பது இப்போது நினைத்துப் பார்க்கையில் புரிகிறது. என் நாட்குறிப்பின் எழுதப்படாப் பக்கங்களை நிரப்பவேண்டிய வரிகளையே படைப்பாக எழுதிக்கொண்டு இருக்கிறேனெனில், அவற்றுக்காக நான் ஏன்தான் கவலைப்பட வேண்டும்? அதுமட்டுமில்லை, இனிமேலும் என் புதிய புதிய நாட்குறிப்புகளின் பல பக்கங்களும் எழுதப்படாமலேதான் இருக்கப்போவதாய்ப் படுகிறது. அதற்காக இனிமேல் நான் சந்தோஷப்படலாம், இல்லையா?

0

தாய்வீடு, ஜன.2011

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்