ஈழம்: கொடிதுகளின் நிகழ் களம்





நால் திசையும் அளாவியெழுந்த ‘நாடாளுமன்ற’ சர்வாதிகாரங்களின் உக்கிர யுத்தபூமிகளாக பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், ஈராக், ஈழம் ஆகிய நாடுகளெல்லாமே ஆகியிருக்கின்றன என்றபோதிலும், ஈழம் எனது பிறப்பைச் சுமந்த மண் என்ற வகையில், அதை முன்னிறுத்திய உரைக்கட்டாக இது அமைவது தவிர்க்க முடியாததாகின்றது. ஆனாலும் மற்ற நாடுகளின் துயரவெளி சற்றொப்பவும் இதற்குக் குறைந்ததில்லையென்பதில் எனக்கு மாறுபாடான கருத்தில்லை. அதனால் அந்நாடுகளின் யுத்த கொடூரங்களது வெளிப்பாடுகள் இதில் தவிர்க்கமுடியாதபடி இடம்பெறவே செய்யும்.

இவ்வாறான உரைக்கட்டொன்றினை சிறிதுகாலத்துக்கு முன்னரே நான் எழுதியிருக்கவேண்டும். எண்ணமிருந்தும் நடவாது போயிருக்கிறது. சிறுவயது முதலே பொருள்மையக் கருதுகோள்களில் கொண்டிருந்த பற்று, இதற்கான ஒரு தடையாக ஆகியிருந்திருக்க முடியும். ஆனாலும் எவ்வாறோ அது தவறிப்போய்விட்டது என்பது இப்போது நினைக்கத் துக்கமாகவே இருக்கிறது.

பொருண்மியக் கருதுகோள்களையும் மேவிய கலாச்சார, தேசிய இன அடையாளங்கள் முன்னிலைப்பாடடையும் ஓர் அசாதாரண சந்தர்ப்பத்தின் பிறப்பும், பொருண்மியக் கருதுகோள்களின் ஆதாரத்தில் எழுந்த அரசியல் கட்சிகளினதும் மற்றும் அமைப்புகளினதும் சந்தர்ப்பவாத, இனவாத நிலைப்பாடுகளின் வெளிப்பாடு துலாம்பரமாகப் புரிதலடைகிற வேளையிலும், இத்தகைய பொருண்மியக் கருதுகோள்களைத் தாண்டியும் நாம் சிந்தித்தாக வேண்டியிருக்கிறது. இச் சிந்திப்பு தவிர்க்க முடியாதபடி நேர்கிற வேளையில், பார்வையினதும் நிலைப்பாடுகளினதும் மாற்றம் தவிர்கப்பட முடியாதது ஆகின்றது. கருத்துக்களை எந்தத் தயக்கமுமின்றி வெளிப்படுத்தியே ஆகவேண்டிய நிலைமை இவ்வண்ணமே எனக்கு ஏற்பட்டது.

இதற்கான உடனடிக் காரணத்தைச் சொல்லி மேலே தொடரவிருக்கிறேன். ஏப்ரல் 04, 2009 சனிக் கிழமை ‘தி ரொறன்ரோ ஸ்ரா’ரில் வெளியாகியிருந்த ஆப்கானிஸ்தானில் கனடாப் படைஞர் அநாவசியமாக யுத்த காவுகள் ஆவதுபற்றிய கட்டுரையொன்றைப் பார்க்கிற சந்தர்ப்பமொன்று நேர்ந்தது. அது ஜி-8 நாடுகளின் தலைவர்களது கூட்டத்தொடரின் சந்திப்பு பற்றியதுமாகும். ஒரு யுத்தம் எவ்வாறு கருதப்படுகிறது, அதன் அறுதியான பலன் என்ன, அதன் சூத்திரதாரிகள் யாராக இருக்கிறார்கள், அரசியல்ரீதியாக சொல்லப்படுவனவற்றிற்கும், செய்யப்படுவனவற்றிற்கும் யாதொரு தொடர்பும் இல்லாதிருந்தும், செய்தி ஊடகங்களின் மேலாதிக்கத்தால் பொய்யையே சொல்லிச்சொல்லி உலகம் ஏமாற்றப் பட்டுக்கொண்டிருப்பதும் போன்ற பல கருத்துக்களையும் வெளியிட்டிருந்தது அக் கட்டுரை. இதன் உசுப்புதலில் என் மண் அடைந்துகொண்டிருக்கும் துயரம் எனக்கு மனக்காட்சியானது. கூட, அமைதி ஊர்வலம் மேற்கொண்டிருந்த ஈழத் தமிழர்மீது அவுஸ்திரேலியாவில் சிங்களக் காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதற் சம்பவமும், அதற்கு அடுத்தடுத்த நாள் வன்னியிலுள்ள தமிழர்கள் மேலான வி~க்குண்டு வீச்சும், அதன் கொடூரமும் அழிவும் உத்வேகமளிக்க, எழுதுவது தவிர்க்க முடியாததாயிற்று.

ஒரு போர் ஈழத்தில் எவ்வளவு உக்கிரமாக நடத்தப்பெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை நினைக்க எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஓர் இனச் சுத்திகரிப்பை இவ்வளவு பகிரங்கமாக உலகின் கண்களுக்கு முன்னாலேயே ஒரு பேரினவாத அரசு முன்னெடுக்கிறதெனில், அதற்கான மூல பலம் யாது? உலக வல்லாதிக்க நாடுகள் பலவும் இதுமாதிரியான ஓர் அழிப்பு முயற்சியில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்டிருக்கின்றன என்பதுதானா? ஈராக் யுத்தத்தில் அமெரிக்காவுக்கு பெரும் படைபலத்தைத் துணையாகக் கொடுத்த நாடு துருக்கி. காரணமில்லாமலில்லை. அமெரிக்காவிடமிருந்து இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் அடுத்தபடியாக அதிய ஆயுத உதவிகளைப் பெறுகிற நாடு துருக்கியாகும். அதுபோல் ஜப்பானுக்கும், ர~;யாவுக்கும்கூட காரணங்கள் இருக்கின்றன. நாம் இந்நிலைமைகளை விசாரணைப்படுத்தியாகவே வேண்டும்.

ஈழத்தில் யுத்தத்தின் முடிவு ஒருவகையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது நிதர்சனமான உண்மையே. இந்தக் கட்டுரை வெளியாகிற அளவில் அது முடிந்திருக்கவும் கூடும். ஒரு பகுதியின் வெற்றியோடு, அதேவேளை இன்னொரு பகுதியின் தோல்வியற்றதாக, அல்லது அந்த இன்னொரு பகுதியான விடுதலைப் புலிகளின் தோல்வியோடானதாக அது இருக்கலாம். புதுக்குடியிருப்பின் எஞ்சிய 14 அல்லது 15 சதுர கி.மீ. அளவான நிலப்பரப்பு இன்னும் சில தினங்களில் வீழ்ந்துபட்டு, அரசபடைகள் வெற்றிபெறுகிற சமயத்திலும், யுத்தம் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பு இருக்காது என்பதை எவரும் சுலபமாகவே அனுமானிக்கலாம். ஆக, இந்த யுத்தத்தில் நடைபெறப்போவது விடுதலைப் புலிகளின் மரபுவழியான யுத்த சக்தியின் அழிவாக மட்டுமே இருக்கப்போகிறது. ஆனால் இந்த நிலைப்பாட்டிற்கு முன்னர் கொன்றொழிக்கப்படப் போகின்ற சராசரி மனிதர்களின் மீதான அக்கறை இங்கே முக்கியமான விஷயம். அடுத்ததாக அதன் பின் தமிழ்ச் சமூகத்தின்மீது திணிக்கப்படக்கூடிய நியாயமற்ற அரசியல் உரிமைபற்றிய அம்சம். இது ஏனைய சிறுபான்மை இனங்களின்மீதானதாகவும்தான் இருக்கப்போகிறது.

வன்னியில் இரண்டரை இலட்சம் தமிழ்மக்கள் எதுவித வாழ்வாதரமுமற்று தவித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் கண்ணெதிரே மரணங்கள் உதிர்கின்றன. எந்தவேளையில் தம் தலைமீதோ, தமது மனைவி பிள்ளைகள் தலைகள்மீதோ அவை உதிருமோவெனக் கலங்கிப்போயிருக்கிறார்கள். ஒரு மரணம் என்பது அதனளவில் பெரிய துன்பமோ, துக்கமோ கொண்டிருப்பதில்லை. அதை அடையும் வழிதான் அந்த துன்பத்தையோ, துக்கத்தையோ தீர்மானிக்கிறது. எதிர்பார்த்து எதிர்பார்த்து அடையும் மரணம் மகா கோரமானது. அந்த மரணம்தான் இப்போது வன்னியில் தூவிவிடப்பட்டுக்கொண்டிருக்கிறது.

புகலிடங்களில் வாழும் சற்றொப்ப பத்து லட்சம் ஈழத் தமிழரின் அபிலாசைகளைவிடவும், எனக்கென்றால், வன்னியிலுள்ள இரண்டரை லட்சம் தமிழரும் முக்கியமானவர்கள் என்றே படுகிறது. இவர்களுக்காகவே ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஒரு முழுச் சரணாகதியைச் செய்யும் முடிவை நானென்றால், ஒரு தனிமனிதனாக, அடைந்தேவிடுவேன்.

ஆனால் இங்கே இருக்கிற சூழ்நிலை அதுவல்ல. அன்று டி.எஸ்.சேனநாயக்கா அடைந்த எரிச்சலை பேரினவாதம் இன்று அடைந்திருக்கிறது. அன்றைய அரசியல் தோல்விக்குக் காரணமாயமைந்த மலைநாட்டுத் தமிழரின் அரசியல் உரிமையைப் பிடுங்கி அவர்களை நாடற்றவர்கள் ஆக்குவதன்மூலம் தன் எரிச்சலைத் தணித்ததோடு, தனிச் சிங்கள நாட்டுக்கான அத்திவாரத்தையும் போட்டுக்கொண்டார் டி.எஸ். இன்று சிறீலங்காவின் இனவாரியாக இரண்டாமிடத்தில் இருந்த வம்சாவளித் தமிழர்களை முற்றாக அழித்துவிட முடியாவிடினும், மூர் இனத்தவருக்கும் அடுத்தபடியான இனச் சிறுபான்மையாக ஆக்கிவிடும் மூர்க்கத்தோடிருக்கிறது பேரினவாதம். இதை தமிழின அழிப்புச் சக்தியாக உருவெடுத்திருக்கிற மகிந்த ராஜபக்~ பிறதேர்ஸின் செயற்பாட்டிலிருந்தும் மற்றும் விடுக்கும் அறிக்கைகளிலிருந்தும் புரிந்துகொள்ள முடிகிறது. இதற்காக இவர்கள் போட்டுக்கொண்டுள்ள முகமூடியே, ‘பயங்கரவாத எதிர்ப்பு’.

யுத்தமொன்று எக்காரணம்கொண்டும,; எங்கேயும் ஆரம்பிக்கப்படக்கூடாது என்பதே அதை அனுபவரீதியாக உணர்ந்தவன், அதில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவன் என்ற வகையில் எனது நிலைப்பாடாக இருக்கிறது. அரசாங்கத்தின் நடைமுறைகளை எதிர்ப்பதற்கான பொதுமக்களின் உரிமை Direct - Indirect  என்ற வழிகளில் ஜனநாயக நடைமுறையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நடவடிக்கைகளில் அவை எரிச்சலடைந்து விடுகின்றன. பிரதமருக்கு அல்லது ஜனாதிபதிக்கு கறுப்புக்கொடி காட்டினாலே தேசத்துரோகக் குற்றச்சாட்டு இங்குள்ள சில ஆசிய நாடுகளிலே சுமத்தப்பட்டுவிடும்.

ஜனநாயகம் பேசும் நாடுகளிலேயே வகைவகையான அணு ஆயுதங்களின் உற்பத்தி அளவிடற்கரியதாய் நடந்துகொண்டிருப்பது, அவற்றின் யுத்த அவாவுகையாய் இருப்பதையே காட்டுகிறது. உலகப் பந்து நாளுக்கு நாள் அரச நிறுவனங்களின் சார்புநிலை மாற்றங்களால் மாறிக்கொண்டேயிருக்கிறது என்பதுதான் அவ்வணு ஆயதங்களின் உளரீதியான தாக்குதலின் விளைச்சலாகும். வெளிப்படையான அவற்றின் வெடிப்பில் சிறுபான்மை இனங்கள் அழித்தொழிக்கப்படுவதும், அதன் காரணமாக சார்பு நிலைகள் எடுப்பதற்கான இடைவெளியை உண்டாக்குவதும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் ஒவ்வொரு பெயர்கள் சூட்டப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. ஜனநாயக உத்தாரணம், பயங்கரவாதத்திலிருந்து விடுதலை, பெண்களுக்கான கல்வி மற்றும் உடல் உள உரிமைகள் என அவை பல்வேறு.

மானிடத்தின் பெயராலும், தம் உரிமையினதும் விடுதலையினதும் நாட்டத்தினாலும் ஜனசமூகத்தின் ஒரு பகுதியோ அல்லது ஒரு சிறுபான்மைச் சமூகமோ னசைநஉவஷ iனெசைநஉவ வழிகள் மூலமான குறுக்கீடுகளைச் செய்கிறபோதுகூட அவற்றை விரும்பாத அரசாங்கங்களுடன் இறுதியில் அவை ஆயுதமுனையிலேயே போராட நிர்ப்பந்திக்கப் படுகின்றன. ஆயுதப் போராட்டம் என்பது ஓர் இறுதிக் கட்ட முயற்சியே ஆகும். வாழ்வா, சாவா என்ற இறுதி நிலையில் அது மேற்கொள்ளும் உச்சபட்ச நிவாரண மார்க்கம் அது. அதன் வளர்ச்சிக் காலகட்டத்தில் அவற்றில் மிகக் குறைந்தளவு ‘பயங்கரவாதம்’ இருக்கவே செய்கிறதுதான். அனுபவமற்ற, அரசியல் சித்தாந்தப் பின்புலமற்ற நிலைமைகள் காரணமாக இந்நிலை ஒரு போராட்ட இயக்கத்துள் இறங்குவதற்கான சாத்தியம் இருக்கவே செய்கின்றது. ஆனாலும் அதை அரச பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டுவிட முடியாது.

யுத்தம் அல்லது போராட்டம் என்பது அளப்பரிய மனித சேதாரங்களுடன் நிகழ்வது. மானிட வாழ்விடங்களின் மற்றும் இயற்கை வளங்களின் அழிவு இரண்டாவதாக இடம்பெறுகிறது. இயற்கை வளங்களை அழித்துவிட்ட பின் இந்தப் பூமியில் எந்தத் தளம் மனித இனத்துக்குரியதாக இருக்கப் போகிறது?

மொத்தத்தில் ஓர் அழிவை மட்டுமே தருவதாக யுத்தம் இருக்கின்றது என்பது நூறுசதவீதமும் உண்மை. ஆனால் அதை மேற்கொள்ளும் எந்த நாடுமே அதைப்பற்றிய சிறிய அக்கறையையும் காட்டியதாகச் சரித்திரமேயில்லை. ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய ஜப்பானிய நகரங்கள் 1945இல் அமெரிக்காவால் அணுகுண்டு வீசி அழிக்கப்பட்டபொழுது, மனிதாயதம் கவனிக்கப்படவேயில்லை. அழிவுகள் அன்றையபோதுக்கு மட்டுமாயிருக்கவில்லை. ஜப்பான் மக்களின் துயரத்தின் அடையாளங்கள் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்தன. இன்றளவும்தான் தொடர்கின்றன. ஜப்பான்மீதான வெற்றி மட்டுமே இலக்காக அன்று அமெரிக்காவிடம் இருந்தது. ஜப்பான் தன் யுத்த கால பொருளாதார அழிவிலிருந்து நாளாவட்டத்தில் தன்னை மீட்டெடுத்துக்கொண்டது. ஆனால் ஹிரோஷிமா, நாகசாகி மக்கள்…?

இரண்டாவது உலக மகா யுத்தத்தில் கொன்றொழிக்கப்பட்ட யூதர்களின் எண்ணிக்கையைவிட, அமெரிக்காவினாலும், அதன் நேச அணிகளாலும் கொன்றொழிக்கப்பட்ட மனிதத் தொகை ஆச்சரியப்படும் அளவுக்கு அதிகமானது என்பது இங்கே எவருக்கு கரிசனையாகியிருக்கிறது? அவற்றுக்குப் போதுமான பதிவுகளும் அதிகமாக பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கவில்லை. இதற்கான தகவல் சேகரிப்பு தனித்த ஆராய்ச்சிக்குரியது. தனித்த துறையமைத்து அதன்மூலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்படாதவரை இந்த முயற்சி பெருவெற்றியளிக்கவும் போவதில்லை. இன்றுவரையான இதுகுறித்த சிறிதளவான முயற்சிகளும் ஆர்வமுள்ள தனிமனிதர்களின் முயற்சி என்பதளவாகவே இருக்கின்றது. இருந்தும் இவ்வறிக்கைகள் வெளியிடும் உண்மைகளே ஒருவரை அதிர்ச்சியடையப் போதுமானவையாக இருக்கின்றன.
தேர்தலும், நாடாளுமன்றமும் மட்டுமே ஜனநாயகம் இருப்பதன் அடையாளங்களில்லை. எந்த நாட்டிலும்தான். ஆனால் அவற்றையே அடையாளங்களாக இந்த மனித சமூகம், பாமர சமூகம்போலவே படித்த சமூகமும், நம்பவைக்கப்பட்டிருக்கிறது. தேர்தலும், நாடாளுமன்றமும் மட்டுமே ஜனநாயகத்தின் அடையாளங்களெனின், ஹிட்லர் புரிந்த அனைத்து யுத்தங்களும் ஜனநாயக வழியிலல்லாமல் வேறெவ்வழியில் நடந்தன? இரண்டாம் மகாயுத்த காலத்திய அவனது கொடுமைகளையெல்லாம் இந்த அடிப்படையில் ஞாயப்படுத்திவிடலாமா?

ஹிட்லருக்கு அரசதிகாரம்பற்றி நிறைந்த தெளிவிருந்தது. அதன்மூலமே தன் எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்ள 1923இலேயே அவன் தீர்மானித்திருந்தான். HITLER: STUDY IN  TYRANNYஎன்ற நூலில் அலன் புல்லக் என்பவர், ‘அதிகாரம் என்பது சட்டரீதியாக வென்றெடுக்கப்படவேண்டும்’ என்று ஹிட்லர் 1930 செப்ரெம்பர் தேர்தல் முடிவுகள் வெளிவந்த கணத்திலிருந்தே தீர்மானித்திருந்ததாக எழுதுவார். அந்தத் தேர்தலில்;தான் அதுவரை 12ஆக இருந்த ஹிட்லர் கட்சியின் எண்ணிக்கை அவனே ஆச்சரியப்படும்படியாக 107ஆக அதிகரித்திருந்தது. ஆக, ஜனநாயகத்துக்கான வழிவகைகளைக் கையாள்வது மட்டுமே ஜனநாயகமாகாது என்பது தெளிவு. ஒருவகையில் பார்க்கிறபோது, மஹிந்த ராஜபக்ஷ வின் நடைமுறைகள் இந்த ஏதேச்சாதிகார வழிமுறைகளை அச்சொட்டாகப் பின்பற்றியவை என்பது விளங்கும்.

‘அதிகாரம் ஒருவரைக் கெடுக்கும், முழுஅதிகாரம் முற்றாகக் கெடுக்கும்’ என்று அரசியலில் ஒரு பொன்மொழி இருக்கிறது. ஹிட்லரின் முழுஅதிகாரம் ஜேர்மனியை மட்டுமல்ல, முழு உலகையுமே கெடுத்தது. அழித்தது. அதுபோல மஹிந்தவின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி அதிகாரம் இலங்கையை மட்டுமில்லை, முழு ஆசியாவையுமே கெடுத்துக்கொண்டிருக்கிறது.

ஜனநாயகம் என்பது இலங்கையில் இம்மியளவுக்கும் நடைமுறையில் இல்;லாதிருப்பது ஒன்றும் எதிர்பாராத நிகழ்வல்ல. அது திட்டமிட்டு சாத்தியமாக்கப்பட்டிருக்கிறது என்பதே நிஜம். தமிழினத்தின்மீதான மறைமுக யுத்தம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே தொடங்கிவிட்டது என்பதை வரலாற்று மாணவனும் நன்குணர்வான். அது உணரப்பட்டது 1947 இன் இலங்கை-இந்திய பிரஜாவுரிமைச் சட்டத்தினதும், 1948இன் இலங்கை-இந்தியர் வாக்குரிமைச் சட்டத்தினதும் ஆக்கங்களின்போது. 1956இன் தனிச் சிங்கள மசோதா அதன் பிற்கால நடவடிக்கைகள் எப்படி இருக்கப்போகின்றன என்பதன் முன்னறிவிப்பாகும். பின்னால் சிங்களக் குடியேற்றத் திட்டங்கள்மூலம் அது வெளிப்பார்வைக்குத் தெரியக்கூடிய நிலை வந்தது. ஆனால் அப்போதும் சர்வதேச நாடுகளின் அச்சம் காரணமாக அவை வௌ;வேறு சாட்டுதல்களின் போர்வைகளிலேயே செய்யப்பட்டன. ஆனால் 1983இல் மிகப் பகிரங்கமாகவே அந்த இனவழிப்பு யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. அது ஒரு தொடக்கமாகவே இருந்தது. இருந்தும்தான் அச்செயற்பாட்டில் இந்தியா விழித்தது. தெற்காசியா விழித்தது.
விடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக மாறியது. அதன் முன்னெடுப்பானது முந்தைய அறப்போர் நடாத்தியோரைவிட ஒரு தலைமுறையேனும் இளையதாகவிருந்தது. இது விடுதலை வரலாற்றை விளக்குகின்ற தருணமல்ல. ஆனால் இது புரியாமலும் இன்று நடைமுறைப்படுத்தப்படும் சகல ஜனநாயக அத்துமீறல்களையும், தமிழருக்கெதிரான மனிதாபிமான அத்துமீறல்களையும் புரிந்துகொள்வதும் சுலபமானதில்லை.

உலகளாவிய அளவில் ஒரு செயற்பாட்டுக்கு எவ்விதம் வேறு காரணம் சொல்லப்படுகிறதோ, அதுபோல் இலங்கையிலும் நிஜம் மறைக்கப்பட்ட ஒரு காரணத்தின் மேலாக யுத்தம் நடந்துகொண்டிருந்தது. பொதுவாக இந்தச் சமயத்தில் தமிழினம் ஒன்றை உணர மறந்திருந்தது என்பதை நினைவுகூர்வது நல்லது. அதுதான் அது அதுவரை காலமும் நினைத்திருந்ததுபோல சிங்களவன் ‘மோட்டுச் சிங்களவனாக’ இனிமேலும் இல்லையென்பது. சிங்கள இனம் சுயமாகவோ அல்லது இரவலாகவோ சிந்தித்துக்கொண்டிருந்தது. ஒரு பென்னாம்பெரிய நாடான இந்தியாவே ஒரு சுண்டைக்காய் அளவு நாடான சிறீலங்கா விரும்புவதையெல்லாம் செய்கிற நாடாகிற அளவுக்கு ஓர் அரசியல் சாணக்கியத்தைப் புரியும் வலுப் பெற்றிருந்தது சிறீலங்கா.

இந்தநேரத்தில் 11ஷ9 நிகழ்வு நடந்தது. அமெரிக்காவின் இரட்டை மாடி வர்த்தகக் கட்டிடம் தகர்ந்தது. தன் கர்வம் களங்கப்பட்டதாய் நினைத்தது அமெரிக்க அரசதிகாரம். அதன் விளைவானதே ஆப்கானிஸ்தான்மீதான அதன் யுத்தம். அதைப் பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தமென்று சொல்லிக்கொண்டது அது. கூட்டுகளும் சில சேர்ந்தன. கனடாவில் அப்போது ஆட்சியதிகாரத்திலிருந்த லிபரல் கட்சி அந்தக் கூட்டினை தன் நியாயத்தின்மீது நின்று நிராகரித்தது. ஆப்கானிஸ்தானை ஒரு ‘வகை’ பண்ணியபின், ஈராக் யுத்தம் தொடரப்பட்டது. இத்தனையும் ஒரு தனிமனிதனின் பழிவாங்குதல் என்ற ஒற்றைக் காரணத்தில்.

இதை சுயமாகவோ, இரவலாகவோ சிந்திக்கவாரம்பித்திருந்த சிங்கள அதிகார வர்க்கம் சிக்கெனப் பிடித்துக்கொண்டது. விடுதலைப் போராட்டம் பயங்கரவாதமானதாக்கப்பட்டது. அதை முன்மொழிய முன்னாள் தமிழ்ப் போராளிகள் சிலர் விலைக்கு வாங்கப்பட்டனர். நீட்டும் அரசியல் சாசனத்துக்கு கையெழுத்துப்போட பயிற்சியளிக்கப்பட்டனர். இடைக்காலத்தில் முதலமைச்சர், நாடாளுமன்ற அமைச்சர் என்ற இன்னபிற பதவிகள் எலும்புத் துண்டுகள்போல் தூக்கி வீசப்பட்டன. ஆயிற்று, எல்லாப் பூர்வாங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டாயிற்று. மேலே என்ன? நடைமுறையிலிருந்த சமாதான ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டு ‘பயங்கரவாத’த்துக்கெதிரான யுத்தம் தொடங்கப்பட்டது.

எல்லா எதிர்நிலைமைகளும் முன்னனுமானிக்கப்பட்டு சாந்தி செய்யப்பட்டிருந்தன. அதனால்தான் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மட்டுமில்லை, ஜனநாயகத்துக்கெதிராகவுமே யுத்தம்செய்ய ராஜபக்ஷ  சகோதரர்களால் இன்று முடிந்திருக்கிறது.

இதன்மூலமே இன்று இலங்கையில் தமிழினம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இனவழிப்புக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தோழர்களாக களமிறங்கியவர்களே ஜாதீக விமுக்தி பெரமுனவும், பிக்குகள் கட்சியான ஹெல உருமயவும். ஜே.ஆர்.ஜெயவர்த்தன உருவாக்கி வைத்த இனவெறிப் பிசாசு, மஹிந்த காலத்தில் விஸ்வரூபம்பெற்றது. அழிச்சாட்டியத்தில் அழிவது சிங்கள இளைஞர்களும்தான் என்பது அதன் இன்னொரு பக்க துக்ககரம். ஓர் இனவழிப்பின் திட்டமிட்ட நடைமுறைகளில் தன்னின இளைஞர்கள் அழிக்கப்படுவதையே பேரினவாதம் தவிர்த்துக்கொள்ளாது என்பது எவ்வளவு உண்மை! தன் முழு அதிகாரத்தின்மூலம் இந்தப் பேரினவாதத்தின் இயங்குசக்தியாக இருக்கும் மஹிந்தவும், அவரோடு இணைந்துள்ள பிற இனவாத சக்திகளும் தங்களுக்காகவும், தங்கள் வர்க்க நலன்களுக்காகவும் தேசத்தைக்கூட விற்க பின்னிற்கப்போவதில்லை. அது ஓரளவு நடந்தேறியும்கொண்டுதான் இருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் மிக அழகான ஒரு தவறு இருக்கிறது. இதை எண்ணுகிற பொழுதெல்லாம் நான் வியக்கத் தவறுவதில்லை. அதுதான், அது சிறுபான்மை ஹிந்துக்களுக்கான வாழுரிமைப் போராட்டமாக தன்னை அடையாளப்படுத்தாதது. அண்மையில் ‘தி டெய்லி டெலிகிராப்’பில் அருந்ததி ராயின் கட்டுரை ஒன்று வெளிவந்திருந்தது. அதில் ஈழத்தில் தமிழின அழிப்புக்கான இந்த முனைப்புச் செய்தி இந்தியாவின் பிறபாகங்களில் பரவவில்லையென்றும், தனக்குமே அது தெரியக்கூடியவகையில் செய்தித் தாபனங்களினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். அது உண்மையே.

இனம் இனத்தைச் சேரும் என்பார்கள். அரச இனம், அரச இனத்தைச் சேரும்தான். இந்திய மேலாதிக்க உறவுகள், இலங்கையின் மேலாதிக்க உறவுகளுக்கு கைகொடுக்க என்றுமே பின்னிற்கப் போவதில்லைத்தான். இதில் தேசம், மக்கள், மனிதவுரிமை என்ற எதுவுமேதான் கரிசனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்காது. ஜவகர்லால் நேரு காலத்திலிருந்த இந்தியாவல்ல இன்றிருப்பது. இந்திரா காந்தி காலத்ததும் அல்ல. ‘சத்யமேவ ஜயதே’ என்பது எலும்பும் தோலுமான அந்த அரைநிர்வாண மனிதரின் ஆசை மட்டும்தான். அந்த ஆசை பெரும்பாலான பிறருக்கில்லை. சத்தியத்தை விற்றேனும் வர்க்க நலன்கள் காப்பாற்றப்படும். அதையே இன்று இந்திய இறையாண்மை செய்துகொண்டிருக்கிறது. அதனால் சத்தியமே வெல்லும் என்ற வார்த்தை, சொல்லப்போனால் இன்றைய அரசியலாரின் முகமூடியாக இருந்துகொண்டிருக்கிறது என்பதே உண்மை. அதனால்தான் இந்திய அரசாங்கத்தின் தொழில்நுட்ப, பொருளாதார, மனிதசக்தி உதவிகளை சிறீலங்கா அரசாங்கம் பெற்றுக்கொண்டிருக்கிறது. அதனால்தான் ஈழத் தமிழ் இனவழிப்பின் செய்திகள் தமிழ்நாடு தவிர்ந்த பிற மாநிலங்களளவில் சென்றுசேராதிருக்கின்றன. ஆனால் இது ஹிந்துக்களின் அழிப்புக்கான யுத்தமாக முகங்காட்டப்பட்டிருப்பின், இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறாக இருக்க வற்புறுத்தப்பட்டிருக்கும் என ஒரு கணம் யோசித்துப் பார்த்தாலுமே, இந்த அழகான தவறை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

இந்த யுத்தத்தில் இந்தியாவின் பங்கு குறித்து இந்தியாவின் புத்திஜீவிகளிடை கூட மாறான அபிப்பிராயங்கள் நிலவுகிற நிலையிலும், இந்திய அரசு தன் நடைமுறைப்பாட்டிலிருந்து விலகாமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஏகாதிபத்தியக் கனவு கண்டுகொண்டிருக்கும் இந்திய அதிகாரபீடம், ஒருவேளை இந்த தமிழினத்தின்மீதான சிங்களப் பேரினவாதிகளின் யுத்தம் ஜெயிக்கப்பட்டு, புலிகளும் அழிக்கப்படுகிற நிலைமையொன்று நேர்கிற சந்தர்ப்பத்தில் நிச்சயமாக இந்த வெற்றிக்காக பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது. அது தன் துரோகத்தனத்தில் வென்றது என்ற அவப்பெயர் மட்டுமே அப்போது நிலைத்துநிற்கப்போகிறது.

ஒரு தோல்வியை மிக ஆழமாக தமிழினத்தின் மீது சுமத்திவிட சிங்களம் தன் ஆகக்கூடுதலான படை பலத்தை பிரயோகித்துக்கொண்டிருக்கிறது. இதில் பெருமளவான தன் படையையும் இழந்துகொண்டிருக்கிறது. சுய இழப்பின் பழிவாங்கலுக்காக ஒரு பெரும் தேசத்தின் அறத்தைக் குழிதோண்டிப் புதைக்கிற வேலை இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது. தோல்வியை ஆழமாகச் சுமத்திய முன்னைய போர்களின் முடிவுகள் நமக்கு எதைப் பாடமாகப் புகட்டுகின்றன என்பதை நினைத்துப் பார்க்கவும் மறந்தவர்களாய் இருக்கிறார்கள் அவர்கள். வரலாற்றைக் கொஞ்சம் எண்ணிப்பார்த்தாலே மலைக்கவைக்கிற அளவு, தோல்வியை ஆழச் சுமத்தலால் ஏற்பட்ட வெறியின் முடிவுகள் மறுதலை ரூபமெடுத்துள்ளதையே அறிய முடிகிறது.

நினைவில் வருகிற அளவுக்கு உள்ள ஒரு புராதனப் போர் த்ரோய். த்ரோய் நகர் கிரேக்கர்களால் முற்றாக அழிக்கப்பட்டது. அதன் வரலாறும் முற்றுப்புள்ளி இடப்பட்டதுபோல் முடிவுக்கு வந்தது. ஆனால் ஏனியாஸு ம் அவனது குடும்பத்தாரும் ஒரு பெரும் துன்ப யாத்திரையின் பின் இத்தாலியை அடைகின்றனர். அங்கு ரோமப் பேரரசை உருவாக்கும் ஆதிகர்த்தாக்களுக்கு முன்னோர்கள் ஆகின்றார்கள். வரலாற்றில் பெரும் விளைவுகளை, மாற்றங்களை ஏற்படுத்தியது த்ரோயின் தோல்வி. த்ரோய் மக்களின் வழித்தோன்றல்களான பிரான்சியோவினால் பிரான்சு தேசம் கட்டமைக்கப்படுவதும், ஏனியாஸின் ஒரு பேரன் புரூடஸின் வம்சமான ஆர்தர் அரசன்மூலமாக இங்கிலாந்து தேசம் உருவாவதுமான நிகழ்வுகளை நோக்குகிறபோது, துடைத்தழித்தலின் மறுதலையான விளைவுகளையே வரலாறு தன் பெரும் தேகமெங்கும் பதிவாக்கி வைத்திருப்பமை புலனாகும்.

கிரேக்கத்தின் தேசிய காவியத்தை இயற்றிய வேர்ஜில் மட்டுமில்லை, பல்வேறு தொல்கதைகளும்கூட இதைத் தெரிவித்து நிற்கின்றன. வெற்றியின் மீதான வெறியும், அதன்மேற்கொள்ளும் மமதையும் இந்த உண்மைகளை ஆட்சியாளர்கள் உணர விடுவதில்லை. ஆனால் அவர்களே அதன் பலன்களையும் அனுபவிக்க விதிக்கப்பட்டிருக்கிறது. ஹீன்றிச் மேன் என்ற ஜேர்மன் அறிஞன் இதை அழகாகச் சொல்லியிருப்பான். ‘The vanquished are the first to learn  what history holds in store’ என்பது அவனது புகழ்பெற்ற வாசகம். கருவறுத்தலில் மூர்க்கம் கொண்டிருக்கும் சிங்களதேசம் இந்த உண்மையை உணர்வது எப்போது?

மண்ணபகரிப்பையும், இனவழிப்பையும் ஒத்த கதியில் நிறைவேற்றிக்கொண்டிருக்கும் சிறீலங்கா அரசு, நாளொன்றுக்கு சராசரியாக நூற்றுக்கும் குறையாத தமிழர்களை வன்னியில் கொன்று குவித்துக்கொண்டிருக்கிறது. உயிர் தப்பி ஓடியவர்கள் வவுனியாவில் தடுப்பு முகாங்களில். 1983க் கலவரம் தமிழர்களின் வளங்களை அழித்தொழிப்பதற்கானது என ஒரு புத்தகுருவே அப்போது பத்திரிகைகளில் பேட்டி கொடுத்திருந்தார். அப்படியெனில் 2008இல் அரசு முன்னெடுத்துள்ள போர் தமிழர்களையே அழித்தொழிப்பதற்கானது என்பதில் எவருக்கும் சந்தேகம் வேண்டாம். இந்த யுத்தத்தை எவ்வாறு நாம் முகங்கொள்ளப் போகிறோம்? இன்னும் மிச்சசொச்சமான ஜனநாயக விழைச்சல் இருக்கும் உலகநாடுகள் என்ன செய்யப்போகின்றன?

யோசிப்போம்.
000

பதிவுகள்.காம், மே 2009


May 2009

000

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்