எதிர்க் குரல்கள்

எதிர்க் குரல்கள்


காலகாலத்துக்குமான உண்மையென்று எதுவுமில்லையெனச் சொல்லப்படுகிறது. அதை இப்படி நான் புரிந்துகொண்டிருக்கிறேன்: சாசுவத உண்மைகள்மீது தீவிரமாக எழுப்பப்பட்ட சந்தேகத்தில், அவை தம்மை வெளியுலகின் நியாயத்துக்கு தக தம் இருத்தலை நெகிழ்வித்து/ மாற்றி வந்திருக்கின்றன என்பதுதான் அது. அதன் பரிமாணத்தின் மாற்றங்கள் ஓர் எதிர்வின் விளைவாகவே சாத்தியமாக இருந்திருக்கின்றன.

கலகக் குரல்கள் இடைனிலையில் தரிப்புக்கொண்டுவிடா. அவை தம் ஆகக்கூடிய உச்சத்தை அடைந்து நின்றே குரல் எடுக்கும். அதை அடைவதுவரை அவை ஓய்வதுமில்லை.

ஒவ்வொரு கட்ட சமூக காலத்திலும் அவை வெவ்வேறு தளங்களிலிருந்து வந்திருக்கும். ஆனாலும் தீவிரங்கள் ஒரே மாதிரியே இருந்திருக்கின்றன. அவ்வக் கால சமூகம் வேறு எந்தமாதிரியில் வந்தாலும் அக்குரல்களை கவனத்தில் எடுத்துக்கொண்டிராது. ஒரு காலகட்டத்தின் கலகக் குரல் நிச்சயமாகவே தத்துவப் பின்புலமற்றது. அது தன் கலகத்தை நியாயப்படுத்தும் தர்க்கத்தை மட்டுமே சொல்லும். பின்- நவீனத்துவம் தனக்கான அமைப்பு விதிகளைச் சொல்லாமை இங்கிருந்தே புரிந்துகொள்ளப் படவேண்டும். மாற்றை அது எப்போதும் சொல்லாது.

கலகக் குரலின் மூர்க்கத்தில்தான் சமூகங்கள் நகர்ந்திருக்கின்றன. சாசுவத உண்மைகள் காலத்துகுத் தகவாய் மாறி வந்தமைதான் மனு நாகரிகத்தின் வரலாறு. மாறி வந்தன என்று சொல்கிற சுலபத்தில் அவை மாறிவரவில்லையென்பதையும் நாம் கவனத்தில் எடுக்கவேண்டும். பெரும் போராட்டங்கள், உயிர்த் தியாகங்கள், ரத்தச் சொரிவுகள், வாழ்வு அர்ப்பணங்கள் இல்லாமல் எதுவும் நடந்ததில்லையென்பதை சரித்திரம் சொல்லி நிற்கிறது.

இலக்கிய உலகின் கலகக் குரல்களெல்லாமேகூட இந்த நியதியில் வைத்துப் பார்க்கப்படவேண்டியவைதான். தமிழ்ச் சூழலில் இலக்கியத்திலே முதல் கலகக் குரல் எழுந்த இடம் வனம். அதைச் சித்தர் குரலாய்க் காலம் பதிவுசெய்து வைத்திருக்கிறது. மேலை நாடுகளில் விசித்திரமான இடங்களிலெல்லாம் கலகக் குரல்கள் ஒலித்திருக்கின்றன. குறிப்பாக பிரான்ஸில் avant-guarde களும் surrialist களும் மலசலகூடங்களுக்கு அண்மையில் தம் படைப்பு , கருத்து பரிமாற்றங்களைச் செய்யும் மேடைகளை அமைத்து வந்திருக்கிறார்கள். மஹாராஷ்டிரத்தில் 1969 இல் தலித் இலக்கியம் என்ற சொல்லாடல் பாவனை பெறமுன்பு, பொது மலசல கூடங்களுக்கு அருகே எதிப்பிலக்கிய வெளிப்படுத்துகைகள் நடைபெற்றிருக்கின்றன. இத்தகைய பின்புலத்தில் கடந்த ஓரிரு மாதங்களுக்கிடையில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளைப் பார்க்க நினைக்கின்றேன்.

கடந்த 04. 12. 2002இல் ஒரு காலை நேர சென்னை கடற்கரை-மயிலை பறக்கும் ரயில் தடத்தில் இயங்கிய ரயிலில் 'மூன்றாவது அறை நண்பனின் காதல் கதை' என்ற அஜயன் பாலாவின் சிறிய சிறுகதைத் தொகுப்பொன்று வெளியிடப்பட்டிருக்கிறது. ரயில் இப்போதெல்லாம் இலக்கியவாதிகளின் கவனத்தைக் கவர்ந்த அம்சமாகியிருப்பது ஏனென்று தெரியவில்லை. ரயிலின் நீட்சியும், ஒரே தாள கதியில் இயங்கும் அதன் இயக்கத்தை இடையிடை ஊடறுத்துச் சிதைக்கும் லய பேதமும் ஒரு சுவையை எற்படுத்தியிருக்கலமோ? சில மாதங்களின் முன் ஓடும் ரயிலில் பயணிகளூக்கு மத்தியில் ஒரு கவிஞர் கூட்டம் கவியரங்கொன்றை நடத்தியிருக்கிறது. அதற்கு முன்னால் கோணங்கி போன்றவர்கள் இலக்கியச் சந்திப்புக்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆகவே இது பெரிய அதிசயமில்லை. அங்கு நூல் வெளியீடு செய்யப்பட்ட விதம்தான் புதுமையானது-அதீதமானது. புத்தக வெளியீடு, ஓடும் ரயிலில் இருந்து வெளியிடுபவரால் வெளியே வீசி எறிவதன் மூலம் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் கலந்துகொண்டவர்களும் தமிழ் இலக்கியப் பரப்பில் முகம் தெரிந்த இலக்கியவாதிகளே. குறிப்பாக 'புதுப் புனல்' ஆசிரியர் சி.மோகன், 'வெளி' ரங்கரஜன் போன்றோர்.

இன்னொரு நிகழ்வு , பிரமிளின் கவிதைகள்பற்றிய கருத்தரங்கு. இது மதுக் கடை ஒன்றின் bar இல் நடந்திருக்கிறது. குடிப்பதற்கு வந்த பலரில் ஆச்சரியங்களை விளைவித்துக்கொண்டு இந்த அரங்கு நடந்து முடிந்த பின்னால் சண்டையும் நடந்திருக்கிறது. 'பல்லோடு உதடு பறந்து சிதறுண்டு/ சில்லென்று செந்நீர் தெறித்து/ நிலம் சிவந்து / மல்லொன்று நேர்ந்து...'என்று நம்மூர் மஹாகவி பாடியது அப்போது எனக்கு ஞாபகம் வந்தது. இதில் கலந்துகொண்டவர்களும் சாரு நிவேதிதா, விக்ரமாதித்யன் போன்ற இலக்கியவாதிகளே.

இவையெல்லாம் உள் கொதித்து எழும் உணர்வு உச்சமடைகிற வேளைகளிலேயே நடக்கின்றன என்பதுதான் நிஜம். இவை ஒரு சமூகத்தின் கலகக் குரல்கள். இவையே நியாயமில்லைத்தான். ஆனால் இவை சமூகத்தை மாற்றும் அவசியத்தை வற்புறுத்துவன. இன்னும் இவை மாற்றவும் செய்யும். ஓரளவேனும்.

'தலித் அழகியல் என்ற சொற்றொடரும், தலித் கலகப் பண்பாடு என்ற சொற்றொடரும் ஒரே அர்த்தம் பெறும் சொற்றொடர்கள் என்ற அதிரடிக் கருத்தும் இக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது' என்று வேறு ஒரு கருத்தரங்கு பற்றி எஸ். சுவாமிநாதன் என்பவர் இம்மாத (பெப்.2003) கணையாழியில் எழுதியிருக்கிறார்.

இது ஆரம்பம்தான். இனிவரும் காலங்கள் மிக்க கடுமையானதாக இருக்கப்போகின்றன. தலித் குரல்களோ, அமைப்பாகிவிட்ட குடும்பம், பெண்ணடிமை, மரபு போன்றவற்றுக்கு எதிரான குரல்களோ விழிக்கிறவர்களுடையதாய் இருப்பதால் மிகக் கடூரமாகத்தான் இருக்கும். சுகனும், ஷோபாசக்தியும் தொகுத்த 'கறுப்பு' நூல் வெளியீடு அ.மார்க்ஸ் தலைமையில் 30. 01. 2003 இல் நடந்தது. தொகுப்புப்பற்றி ராஜேந்திரன் என்ற இளைஞர் சாரத்துடன் மேடை வந்து பேசினார். இந்த நண்பர் போன ஆண்டு நிறப்பிரிகை நடத்திய ஷோபாசக்தியின் 'கொரில்லா' நாவல் விமர்சனக் கூட்டத்திலும் இம்மாதிரியே வந்து உரை நிகழ்த்தினார். செய்யட்டுமேன். எவ்வளவு காலம்தான் சொல்லிக்கொண்டே இருப்பது? இந்த அதீத நடைமுறைகளெல்லாம் உள்ளெழும் நெருப்பின் ஓசைகள்.சமூகம் மாறியாகவேண்டும். வேறுவழி இல்லை.

000
(பதிவுகள்.கொம் இணையதளத்தில் வெளியான தேவகாந்தன் பக்கம்
என்ற பகுதியில் 2000-2004 இல் நான் சென்னையிலும், கொழும்பிலும் இருந்த காலங்களில்
எழுதப்பட்ட கட்டுரை இது.)


Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்