சிதைவும் கட்டமைப்பும்:9

-தேவகாந்தன்


‘மாத்ரு பூமி’ மலையாள இதழின் கோவை அலுவலகப் பொறுப்பாளர் திரு.விஜயகுமாரை ஒருமுறை ‘மாத்ரு பூமி’யின் கோவை அலுவலகத்தில் சந்திக்க நேர்ந்தது. எழுத்துபற்றி, சிறுசஞ்சிகைகள்பற்றி, இலக்கியம் - குறிப்பாக ஈழத்து இலக்கியம் - பற்றி நிறையப் பேசினோம். ஏன் ‘கனவுச் சிறை’ நாவலைப்பற்றி அவர் முன்னமே அறிந்திருந்தார். அவர் எனது அடுத்த நூல்பற்றிக் கேட்டபோது ‘காலக் கனா’ சிறுதொகுப்பைச் சொன்னேன். ‘கனவு உங்கள் எழுத்தில் முக்கியமான அம்சமாகவிருக்குமோ?’ என்று தன் வியப்பைச் சொன்னார் விஜயகுமார். ‘அப்படி நினைத்து எழுதியதில்லை’ என்றேன் நான். ‘நினையாப்பிரகாரம் அவ்வாறு அமைய வாய்ப்பிருக்கிறது. நினையாமலே அவ்வாறு சிலருக்கு அமைய முடியும்’ என்று விஜயகுமார் பதில் சொன்னார். ஒருவகையில் அவர் சொன்னது சரிதானோவென்று இன்று நினைக்கத் தோன்றுகிறது. கனவுகளே இலக்கியம், கலை என எல்லாமுமாகின்றனவெனினும், இலக்கியத்தில் கனவு மய்யப்படும் எழுத்து ஒருவசீகரத்தையும், தனி அடையாளத்தையும் பெற்றுவிடுகிறதுதான்.

‘வுpதி’ நாவல்பற்றி, அவருடனான இரண்டுமணி நேரப் பேச்சில் நான் ஒருமுறை குறிப்பிட நேர்ந்தது. ‘தலைப்பே நன்றாயிருக்கிறதே. மேலோட்டமாகக் கதையைச் சொல்லமுடியுமா?’ என்று கேட்டார். நான் சொன்னேன். வாழ்க்கையைக் கனவாய்க் கண்டு, அதை அழியக் கொடுத்தவனின் கதையாக இருக்கிறதேயென்றும், அதுபோன்ற கதைகளை மலையாளத்திலேகூட தான் வாசித்ததில்லையென்றும், அக் கதையின் சுருக்கத்தை ஆங்கிலத்தில் எழுதித் தந்தால், தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி உரிய அனுமதியைப் பெற்றுக்கொண்டு, அதைத் தான் மலையாளத்தில் மொழி பெயர்ப்பிக்க விரும்புவதாகவும் கூறினார் அவர். சரியென்று சொல்லித்தான் வந்தேன். ஆனால் எதைத் திட்டமாய்ச் செய்தேன், அதைமட்டும் ஒழுங்காகச் செய்வதற்கு? இன்றைய நடைமுறை இலக்கிய உலகில் ஒரு படைப்பாளியின் செயற்பாடு தனியே படைப்பதாக மட்டும் இருந்துவிடக்கூடாது. அதை விமர்சன, வெகுஜன உலகுநோக்கி முன்னெடுப்பதற்கான வழி அவனுக்குப் புரிந்திருத்தலும் அவசியமாகிறது. ஒரு நல்ல வாய்ப்பு அன்று நழுவிப் போய்விட்டிருக்கிறது என் கண்முன்னாலேயே. இதை இங்கே குறிப்பிட்டதற்கான ஒரே காரணம், மலையாளத்தில் ‘விதி’ நாவல் மொழிபெயர்க்கப்படாது போயினும், பிறமொழியாளர்களின் பார்வையில் என் எழுத்துக்கள்பற்றிய மதிப்பீட்டை நானே அறிய முடிந்திருந்தது என்பதைத் தெரிவிக்கத்தான்.

தொண்ணூறுகளை தமிழக இலக்கியப் பரப்பில் குழுநிலை வாதங்கள் மேலோங்கியிருந்த காலமெனச் சொல்லலாம். சு.ரா. குழு, ஜெயமோகன் குழு, எஸ்.ராமகிரு~;ணன் குழு, சாரு நிவேதிதா குழு, அப்பாலும் சி.மோகன் குழு, லட்சுமி மணிவண்ணன் குழு, அ.மார்க்ஸ் குழு, ரவிக்குமார் குழு என அவை. இந்தக் குழுக்கள் அத்தனையுடனுமே எனக்கு நேரடித் தொடர்பு இருந்தது. தொடர்பு மட்டும்தான் இருந்தது. குழு நிலைமைகளுள் அகப்பட்டுக்கொண்டிருந்ததில்;லை. ஒரு பொதுநலன் கருதிய நோக்கில் ஏதாவது குழுவில் நான் செயற்பாட்டு இணக்கம் கண்டிருந்தாலும்கூட, எதைத் தேர்வதென்பது கேள்வியாகவே வந்து நின்றிருந்திருக்கும். ஏனெனில் ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு சரியான காரணத்தைப் பேசிக்கொண்டிருந்தன. இதை இன்னொரு விதமாகச்சொன்னால் ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு சரியான காரணத்தோடு இருந்துகொண்டிருந்தன. இதில் எந்த நல்லதைத் தேர்வதென்பது எனக்கு மிகுந்த சிரமமான காரியம். அதனால்தான் ஊட்டியில் நடந்த மு.தளையசிங்கம் குறித்த இலக்கியவாய்வரங்கில் கலந்துகொண்டபோது இப்படியான ஒரு நிலைமையே என்னிடத்தில் ஏற்பட்டது. ஒருபோது மௌனியானேன் பேசவேண்டியவர்களுக்காய்ப் பேசாமல். பிறகு உண்மையைப் பேசி நான் யாரோடுமில்லை என்பதை வெளிப்படுத்தினேன். அதனால் பல நல்ல நண்பர்களை நான் இழக்கநேரிட்டது.

இப்படியான தர்மசங்கடங்களின் மூலமாக நான் ஒரு முடிவை எடுத்தாகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். மற்றதுகளில் நல்லதுகளைத் தேர்வதைவிட ஏன் அத் தேர்வு என்னுடைய நல்லதாக இருக்கக்கூடாதென எண்ணினேன். இப்போது என்னைப் பற்றியும், என்னுடைய இலக்கியப் போக்குகள் பற்றியும் நான் தீவிர சிந்தனை செய்யவேண்டியவனாயிருந்தேன்.

நிலைப்பாடொன்றைக் கண்டடைவதென்பது எப்போதும் கடினமான வி~யமே. ஆனால் எனக்கு நிலைப்பாட்டினை அடையவேண்டியதாக மட்டுமே இருந்தது. என் இதுவரைகால வாசிப்பும் எழுத்தும் நான் அடையவேண்டிய முடிவுக்கு என்னைச் சுலபமாகவே இட்டுச் சென்றன.

என் இருபதுகளுக்குள் மார்க்ஸீயம் குறித்து நான் பூர்வாங்க அறிவைப் பெற்றிருந்ததனால், என் சுய வாசிப்பில் மேலும் அவ்வறிவை வளர்ப்பது எனக்குச் இலகுவாகவே கைகூடியிருந்தது. மார்க்ஸீய கட்சிகளை நான் நம்ப மறுக்கிறேன். எவ்வளவோ வெறுக்;கிறேன். குறிப்பாக இலங்கை இடதுசாரிக் கட்சிகளை. ஆனால் மார்க்ஸீயத்தை என்னால் வெறுத்துவிடவே முடியாது. எந்த ஒரு அரசியல், தனிமனித நிகழ்வுகளையும்கூட, நான் அதனூடாகவே இன்றும் விளங்கிக்கொள்கிறேன். அதன் போதாமைகள், சிற்சில தவறுகள், பிழைகள் பற்றியெல்லாம் மேற்குலக தத்துவவாதிகள், சமூகவியலாளர், அரசியலாளர் போன்றோரிடமிருந்து நூல்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றைறெல்லாம் இங்கே பட்டியலிட வேண்டாமென நினைக்கிறேன்.

பெரும்பெரும் இலக்கியத் தத்துவவாதிகளெல்லாம் மார்க்ஸீயத்திலிருந்து கற்றுக்கொண்டு வந்தவர்களே என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். பூக்கோ, போத்திரியா, சாத்தர், நோம் சாம்ஸ்கி உட்பட இந்தப் பட்டியல் பெரிதாக இருக்கிறது. இந்த உண்மை இன்னும் அதிகமாகவே என்னை மார்க்ஸீயத்தில் ஆழ்த்தத்தான் கூடியதாயிருந்திருக்கிறது. ஒரு நிகழ்வை எதனூடாக என்னால் விளங்கிக்கொள்ள முடிகிறதோ, அது எனக்கு வேதமென்பதுதான் சரி. ஆனால் கட்சிப் பொதுவுடைமையாளர்போல் மாற்றை அல்லது மற்றதை கருதாமல் என்னால் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. இப்படியொரு தெளிவு என்னுள் எழ, நவீனயதார்த்தம் என்ற பதத்துள் என் சிந்தனை வந்து வீழ்ந்தது.

தொண்ணூற்றாறில் என்று ஞாபகம், ‘மார்க்சீயம்: கிழக்கும் மேற்கும்’ என்ற எஸ்.என்.நாகராஜனின் நூல் வெளிவந்தது. அது ஒரு அலையை மார்க்ஸீய இலக்கியர் அல்லது இலக்கிய மார்க்ஸீயர் மத்தியிலே தமிழகச் சூழலில் ஏற்படுத்தியிருக்கவேண்டும். ஆனால் மார்க்ஸீயர்கள் காண மறுத்த உண்மைகளோடு அந்நூல் உறங்கிப்போயிற்று. அந் நூல் வெளிவந்த காலத்துக்குச் சற்று முன்பின்னாக கோவை ஞானியால் பிரயோகிக்கப்பட்ட ஒரு வார்த்தைதான் நவீனயதார்த்தம் என்பது. ‘மார்க்சீயம்: கிழக்கும் மேற்கும்’ நூல் குறித்து நான் இங்கே பிரஸ்தாபிக்கக் காரணமுண்டு. இந் நூல் மார்க்ஸீயத்தை கீழ்த் திசை நாகரீகத்தோடும் வரலாற்றோடும் மக்களின் வாழ்வியலோடும் ஒப்புநோக்கிப் பார்த்து தன் கருத்துரைத்தது. நவீன யதார்த்தம் ஏறக்குறைய யதார்த்தவகை இலக்கியத்துள் பின் நவீனத்துவத்தைப் பொருத்திவைத்துப் பார்த்த உத்தி.

மார்க்ஸீயவாதியாய், தமிழறிஞராய், நவீன இலக்கிய விமர்சகராய் ஞானியின் புலமை வெகுவானது. மார்க்ஸீயராய் ஜெயமோகனையும், எஸ்.ராமகிரு~;ணனையும், சுந்தர ராமசாமியையும், எஸ்.பொன்னுத்துரையையும் படைப்புக் குறித்துப் பாராட்ட அவரால் மட்டுமே முடிந்திருந்தது. இவருக்கு அடுத்தபடியாக இன்னொருவர் தி.க.சி. தி.க.சி.கூட முகாம் சாராத படைப்பாளிகளின் படைப்பை சந்தேகத்தோடேயே அணுகுவார். இடதுசாரி விமர்சகர்களெல்லாம் வி~;ணுபுரத்தை வாங்குவாங்கென்று விமர்சித்தார்கள். ஆனாலும் அதை ஒரு படைப்பாக முன்னிறுத்தி அதன் தரத்தை விமர்சித்தது ஞானி மட்டும்தானென நினைக்கிறேன். நவீன யதார்த்தம் பற்றிய அவரது பிரஸ்தாபம் வி~;ணுபுரத்துக்கும் முந்தியதுதான். ஆனாலும் நவீன யதார்த்தம் என்ற இலக்கியத் தளத்திலிருந்தே ஞானி அதை விமர்சித்தாரென நம்ப முடியும்.

இந்தப் பார்வை, இந்தப் போக்கு எனக்குச் சரியாகப் பட்டது. இதையே இன்றுவரை என் இலக்கியக்கொள்கையாகக் கொண்டு நடந்துகொண்டிருக்கிறேன்.

ஞானியோடு எனக்கு நிறைந்த பழக்கமுண்டு. அவர் ஒரு நல்ல மனிதரும். பார்வையிழந்த நிலையிலும் இன்றும் நல்ல வாசகர். இவையெல்லாவற்றிலும் அவரை எனக்கு விமர்சகராகவே பிடிக்கும்.

மார்க்ஸீயம் அரசியற் கட்சிகளிடையே தோற்றுப்போயிற்று. குறிப்பாக, இலங்கையில். ரு~;ய சார்பு, சீன சார்பு பொதுவுடைமைக் கட்சிகள் மட்டுமில்லை, மார்க்ஸீயத்தைப் பேசிக்கொண்டிருந்த ஜே.வி.பி. அதைச் சுவாஹாவே பண்ணிவிட்டது. வாசுதேவ நானயக்கார கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்ட திருக்கூத்து சின்னதா என்ன? ஆனாலும் இன்றும், அத்தனை குட்டிக்கரணங்களுக்குப் பிறகும், நான் மதிக்கிற அளவுக்கு தன்னை மறுசீர் அமைத்திருந்த ஒருவர் முன்னாள் சீனச் சார்பு கம்யூனிஸ்டுக் கட்சியின் பொதுச் செயலாளர் நா.சண்முகதாசன்தான். அன்று இடதுசாரிகள் தமிழர் பிரச்னையில் நடந்துகொண்ட முறை, அந்த நிமி~ம்வரை விளங்கிக்கொண்டிருந்த விதம் யாவும் தவறு என்பதைத் தெளிவுபட தன் இறுதிக்காலத்துக்கு முன்னர் எழுதிவைத்துவிட்டு, ஒரு மார்க்ஸீயராய்தான் அவர் மரித்தார். அந்தவகையில் இன்று மதிப்புக்குரிய ஒரு மார்க்ஸீயராய் அவரைப் போற்ற என்னால் முடிகிறது. தேசிய இனப் பிரச்னையில் இடதுசாரிகளின் நிலைப்பாடு எப்படியானதாய் இருக்கவேண்டுமென்று இவர் எழுதியவற்றைப் போலி இடதுசாரிகள் பாடமாய்க் கற்கவேண்டும் என்பது எனது ஆசை.

இந்த இடத்தில் இன்னொரு அம்சத்தை நான் தெளிவாக்கிவிட வேண்டும். இன்று என்னளவில் மார்க்ஸீயம் என்பது ஒரு அரசியல் விஞ்ஞானம் என்பது மட்டும்தான்.

எனினும் இலக்கியம் சார்ந்த தெளிவுகள் எனக்குத் தமிழகத்திலிருக்கும்போதுதான் ஏற்பட்டன. இத் தெளிவின் பிறகே ‘யுத்தத்தின்; முதலாம் அதிகார’மும், ‘கதா கால’மும் வெளிவந்தன. அவற்றின் நடை, போக்கு, சொல்லாட்சிகள் என் முந்திய எழுத்துக்களில் இல்லாத அளவு மாற்றம்கொண்டிருப்பதற்கான காரணம் என் இப் புரிதல் தவிர வேறிருப்பதாய் நான் நினைக்கவில்லை. மார்க்ஸீயத்தினூடாக நிகழ்வுகளைப் புரிந்து, படைப்பு மொழியில் பின்நவீனத்துவம் சார்ந்து எழுதுதலென்பது ஒரு வகையில் சிரமமானதுதான். ஆனால் என்ன செய்ய? அதுவே என் அடையாளமாக இருக்கிறது. அல்லது முயற்சியாக இருக்கிறது.


என் அடியோடியிருந்த யதார்த்தவகையென்ற இலக்கியவகையைச் சிதைத்து, நவீனயதார்த்தத்தைக் கட்டமைத்த பூமியாக தமிழகத்தை நான் எப்போதும் நினைத்துக்கொள்வேன்.

(இத் தொடர் உரைக்கட்டின் இறுதிப்பகுதியான இது ஒன்பதாவது பகுதி. எட்டாம் பகுதி எப்படியோ தவறிப்போய் விட்டிருக்கிறது. அதைக் கண்டடைந்தால் விரைவில், எழுதியே சேர்க்க நேர்ந்தால் தாமதமாக இது இவ்வலைப்பூவில் வாசகர்களால் வாசிக்கப்பட முடியலாம். ஒருவேளை எப்போதுமே எழுத முடியாதுபோனால் இது வெற்றிடமாகவேதான் இருக்க வாய்ப்பிருக்கிறது.)

(முடிந்தது)

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்