அதை அதுவாக 5

உள்ளது உணர்ந்தபடி
(தேர்ந்த குறள்கள்)
5


தேவகாந்தன்



(15)


சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
(அறம், இல்லறம், பயனில சொல்லாமை 10) குறள் 200

சொல்ல நேர்கிற வேளையிலும் எக் காரணம்கொண்டும் பயனில்லாவற்றைப் பேசிவிடக் கூடாது.

000


பயனுடையவற்றையே பேசவேண்டுமென்கிற கருத்து முதலடியாலேயே
பெறப்பட்டுவிடுகிறது.
உனது பேச்சு அர்த்தமுள்ளதாய் இருக்கட்டும் என்கிறான் வள்ளுவன். இந்
நிலையில் பயனில்லாத சொற்களைச் சொல்லவேண்டாமென்பதை அதன்
எதிர்நிலையில் வைத்துச் சுலபமாய்ப் பெற்றுக்கொள்ள முடியும்.
அவ்வாறிருக்கையில் பயனில் சொல்பற்றிச் சொல்ல வந்த இடத்திலேயே
வள்ளுவன் அக் குற்றத்தைச் செய்திருப்பானா என்பது
யோசிக்கவேண்டியது.


கருத்தின் அழுத்தத்துக்காய் அவ்வாறு வரலாம்தான். தமிழிலக்கணம் அதை அனுமதித்திருக்கிறது. சில குறள்களிலேயே அவ்வாறு வந்துமிருக்கின்றது.

ஆனாலும் வேறிடங்களில் ஒத்துக்கொள்ளக்கூடிய இந்த இலக்கிய உத்தியை, சொல்பற்றிய இந்த அதிகாரத்திலேயே ஏற்றுக்கொள்வது சற்றுக் கடினமானது. பட்சத்தில், ‘ சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல்’ என்ற சொற்கள் வேறோர் அர்த்தத்தைக் குறிக்க வந்தவையாகவே கொள்ள வேண்டும்.

‘சொல்லில் பயனிலாச் சொல் சொல்லற்க’ என்று சொல் மாற்றிப் போட்டுக் கொண்டால், ‘சொல்லில்’ என்பது வைரமுடைக்கும் உளியாய் வருவது தெரிய வரும்.

மோனத்தின் பின்னே வருவது சப்தம் - சொல். உன் மோனத்தை உடைப்பது பயனள்ள சொல்லாயிருக்கட்டும், மற்றும்படி மோனமே சிறந்தது என்றுதான் வள்ளுவன் கொண்டிருப்பானென அர்த்தம் கொள்வதே பொருத்தமாய் இருக்குமெனத் தோன்றுகிறது.

00



(16)


தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை யென்னும் செருக்கு
( அறம், இல்லறம், தீவினையச்சம் 1) குறள் 201

தீவினையால் வரும் கர்வத்தை மேலோர் அஞ்சுவர். பாவியர் அஞ்சார்.

000


தீவினை செய்யச் செய்ய மனத்தில் ஒரு தி;டம் வரும்.
அது செருக்கைக் கொண்டுவந்துவிடும். தனக்கு ஒப்பார், மிக்கார் இல்லையென்று எண்ணவைக்கும். அதில் பெருமை கொள்கிறவர்கள் இருக்கிறார்கள்.

‘எட்டாம் கட்டைக்கு எழுதப்படுதல்’ என்று ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தண்டனைக்கிணையான ஒருவகைப் பிரகடனம், கடன்பட்டு பிறகு தீர்க்காது விட்டுவிடுகிற பேர்வழிகள்மீது யாழ்ப்பாணத்தில் விதிக்கப்பட்டு வந்ததாக அறியக் கிடக்கிறது.

மோசடிப் பேர்வழி, நம்பக்கூடாதவன் என்பதுதான் அந்தப் பிரகடனத்தின் பொருள்.

தந்தை பெயர், பாட்டன் பெயர், ஊர் முதலிய விபரங்களைச் சொல்லி தம்பட்டம் அடிப்பவன் மூலம் அரசாங்கமே பிரகடனப்படுத்திவிடும் எட்டுக் கட்டை சுற்றளவுக்குள்.

எட்டுக் கட்டை சுற்றளவுக்குள் அவனை ஊர்கள் மதிக்காது என்பது மட்டுமில்லை, அந்தப் பரப்புக்குள் கைமாற்று மோசடிக்காக மற்றுமொருமுறை அவன்மீது குற்றம் சாட்ட முடியாதது உபவிளைவாகவும் இருக்கும்.

எட்டாம் கட்டைக்கு எழுதப்படட்டவனென்றால் பெருமைப்பட ஏதாவது இருக்கிறதா? ஆனால் தீமை புரிபவன் அதையே பெருமையாகக்கொண்டு கர்வமடைந்திருப்பான்.

செருக்கில் நல்லதும் கெட்டதும் உண்டு.
நல்லது, பெருமிதம்! கெட்டது, கர்வம்!
கர்வத்தை விழுமியோர் அஞ்சுவர். அஞ்சவேண்டும்.

00


(17)


அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யா னெனின்
(அறம், இல்லறம், தீவினையச்சம் 10) குறள் 210

ஒருவர் தீவினைகளின்பாற் கவரப்பட்டு அவற்றைப் புரியாதிருப்பாராயின் கேடடைய மாட்டார்.

000



இங்கே முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய சொல் ‘மருங்கோடி’ என்பது.
மருங்கோடுதல், கவரப்படுதலின் விளைவு.

தீவினைக்கே இயல்பில் கவர்ச்சி நிரம்பவும் அதிகம்.
கவர்ந்திழுபட்டுக்கொண்டு பின்னால் ஓடுதல் அதனால் தவிர்க்க முடியாதபடிக்கு நிகழ்ந்தேவிடுகிறது பலர்க்கும்.

தன்னலமியாக இருக்கிற ஒருவன் எத்துணை சிறிய தீவினையைத்தானும் செய்யலாகாதென்கிறது இதேஅதிகாரத்தின் ஒன்பதாம் குறள்.
ஏன்?

நிழல் தவறாது அடியினை அடைவதுபோல், தீயசெயல்களைச் செய்பவன் கெட்டுப்போதல் சர்வநிச்சயமானதாகையால், தன்னைத்தான் தாதலிப்பவன் அவ்வாறு செய்துவிடக்கூடாது என்று இதற்கு விளக்கம் தருகிறது அதற்கும் முந்திய குறள்.

தீய செயல்களின்பால் , அவற்றினால் வரக்கூடிய கர்வம், சுகம் காரணமாய் ஈர்க்கப்பட்டு விடக்கூடாதென்று மூலாதாரமான தீவினையின் வி~யத்தை இந்தப் பத்தாம் குறளிலே பேசுகிறான் வள்ளுவன். பொதுவாக வேறு குறள்கள் சத்தமாயும், அடக்கமாயும் கூறுகிறபோது, ஒரு இரகசியம்போல் காதருகே வந்து கூறுகிற குறள் இது.


00


(18)


ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு
(அறம், இல்லறம், ஒப்புரவறிதல் - 5) குறள் - 215

பயன்மரம் உள்ள+ர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்
(அறம், இல்லறம், ஒப்புரவறிதல் - 6) குறள் - 216

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்
(அறம், இல்லறம், ஒப்புரவறிதல் - 7) குறள் - 217



இந்த மூன்று குறள்களும் ஏறக்குறைய ஒரே கருத்தையே சொல்வதாக நண்பர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

திரு வேறு, செல்வம் வேறு என்பதிலிருந்து இந்தப் பிரச்னையை அணுகலாம்.

திரு அமைவது. செல்வம் சேர்ககப்படுவது.

நல்வழியிலென்றாலும் அவற்றைச் செலவு செய்யும் விதம் வித்தியாசமானது. தவறாமல் அதை இந்த மூன்று குறள்களும் சுட்டிக்காட்டவே செய்கின்றன.

‘ஊருணி’ என்ற குறளை எடுத்துக்கொண்டால் அது இவ்வாறு சொல்வதாய்க் கொள்ளலாம்: ‘உலகத்தை ஆளவிரும்பும் பேரறிவாளனுடைய திரு ஊருணியிலே நீர் நிறைந்தாற்போன்று ஊராருக்கும் வழிப்போக்கருக்கும் இவர்களில் வலது குறைந்தவர்களுக்கும்கூட ஒருங்கே பயன்படவேண்டும்.’

உலகத்தை ஆள விரும்பும் பேரறிவாளனென்று ‘உலகவாம் ;(உலகு+ அவாம்) பேரறிவாளன்’ என்ற பதங்களுக்கு நான் விரிபொருள் கண்டிருக்கிறேன்.

தன்மேல் மக்களெல்லாரும் பேரன்பு கொள்ளவேண்டுமென நினைக்கிறவனது செல்வமானது ஊருண் கேணியானது நீரினால் நிறைந்தாற்போல் இருக்கவேண்டும்.
இது நிறைந்த அர்த்தத்தோடுதான் சொல்லப்பட்டிருக்கிறது. ஊருணியானது தக்கார் தகவிலார் , முயற்சியுடையார் முயற்சியில்லாதவர் , அயலூரார் வழிப்போக்கர் என்று எதுவும் பார்க்காது. விறுவிறுவென இறங்கி முகந்து குடித்துவிடலாம். மக்கள் விருப்புத் தன்மேல் இருக்கவேண்டுமென விரும்புகிறவனது செல்வமானது இவ்வாறு இருக்கவேண்டுமென்பதே வள்ளுவனின் அறிவுரை.

பயன்மரம், ஊருணிபோன்றதல்ல. அது பெரும்பாலும் ஊரிலுள்ளவர்களுக்கே பயன்படக்கூடியதெனினும், முயற்சியுடையவர்க்குமட்டுமே கைகூடக் கூடியது. மரத்தில் ஏறிப்பறிக்கிற முயற்சி வேண்டும் இதில்.

நன்மையை விரும்புகிறவன் மக்களிடையே மடி - முயற்சியின்மை - தோன்ற இடங்கொடுக்க மாட்டான். மரமோ பயன்மரம். பழமும் பழுத்திருக்கிறது. ஆனாலும் ஊருணிபோல் இலகுவில் கிடைத்துவிடாது. ’பயன்மரம்’ குறள் இதையே சொல்கிறது.

பெரும்பெரும் தகைமைகள் உடையவனிடம் சேரும் செல்வமானது மருத்துவ குணமுள்ள மரம் போன்றதாயிருக்கும். மருத்துவ மரம் எல்லாருக்கும் தேவையாக இருந்துவிடாது. நோயாளியே அதை நாடி வருவான். நோய் வந்துவிட்டால் நோயைத் தீர்த்துவிடும் தப்பா மரம்தான் அது. அபரிமிதமாகக் கிடைத்துவிடாத அபூர்வ மரம்கூட.
அளவறிந்து பயன்படுத்தப்பட வேண்டியதுமாகும்.

ஊருணியும், புயன்மரமும், மருந்தாகித் தப்பா மரமும் ஒன்றல்ல.

தன்மேலான நன்மை கருதி உலகு புரக்க விரும்புகிறவனது திருவானது சகலருக்கும் பயன்படுவது. உலகத்தின் நன்மை தின்மை நோக்குகிறவன் செல்வம் முயற்சியுடையவரகளுக்கு மட்டுமே பயனாகும். தேவையென்று தவிர்க்க முடியாமல் தேடிவருவோர்க்குமட்டுமே வேண்டியது வேண்டிய அளவு கொடுத்துப் புரப்பான் பெருந்தகையாளன்.

பாத்திமறிந்து பிச்சையிடு என்கிறது தமிழில் ஓரு பழமொழி.

00

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்