அதை அதுவாக 13

உள்ளது உணர்ந்தபடி
(தேர்ந்த குறள்கள்) 13


‘புகல் எப்போதுமே இருத்தலின் தளம் ஆவதில்லை.’


- தேவகாந்தன் -




(36)

எண்ணியார் எண்ண மிழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.
(பொருள், அரசு, இடனறிதல் 4) குறள் 494

ஒருவனது செயற் திட்டத்தை வெல்வதற்கான கருத்தெண்ணம் உடையவர்கள், அவன் தக்க இடத்தைச் சார்ந்திருந்து விரைந்து கருமமாற்றும்போது அக் கருத்தெண்ணத்தையே கைவிட்டுவிட வேண்டும்.


ஒரு செயலின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் காலத்தைப்போல், இன்னொரு முக்கியமான அம்சம் இடம். காலம் அல்லது பருவம் எனப்படுகிற அம்சம் அதிகமாகவும் காத்திருத்தலோடு தொடர்புடையதாக இருக்கிறது. இடம் அல்லது தளம் எனப்படுகிற இந்த அம்சமோ பெரும்பாலும் கற்றறிவு பட்டறிவுகள் சார்ந்த நிலைப்பாட்டில் வலிமையைப் பிரயோகித்தலின் தளமான கருத்தாகிறது.

ஆனாலும் இந்த இடம் அரணில்லை. அரண் எங்கேயும் ஒரு புகல்தான். புகல் எப்போதுமே இருத்தலின் தளம் ஆவதில்லை. அது ஒரு கால அவகாசத்துக்குக் காத்திருப்பதற்கான இடம் மட்டுமே. தன் தகுதியுடனும் வலிமையுடனும் தன் வாழ்வுக்கான பிரதேசம்தான் தளம் என்ற வகையில் வரும்.

‘துன்னி’ என்ற சொல் இங்கே முக்கியம். அது அடைதல், நெருங்குதல் என்ற பொருள்களில் பெரும்பாலும் பயில்வு பெறும். அதற்கு விரைந்து என்று இன்னொரு அர்த்தமும் உண்டு. அநேகமாக எந்த உரை, பொருள், விளக்கவுரைகாரரும் இந்த அர்த்தத்தைக் கவனித்ததாகவே தெரியவில்லை. ‘துன்னிக் கரைந்துறைப’ என்ற இலக்கிய அடிக்கு, கனவில் வரும் காதலன் விரைந்து மறைந்துபோய் எங்கோ வாழ்வான் எனப் பொருள் சொல்லப்படுகிறது. அதனால் சரியான இடத்தை அடைவது மட்டுமில்லை, விரைந்து கருமமாற்றுதலும் இங்கு வற்புறுத்தப்படுகிறது.

குறிப்பிடப்பட்டுள்ள பதமான ‘இட’த்தை அரணெனக் கொண்டதால் இத் தவறு நேர்ந்திருக்கலாம். அரண் இல்லாவிட்டால் இயக்கம் முக்கியம். தக்க இடத்தைத் தேர்ந்து சேர்ந்துவிட்டால் விரைந்து கருமமாற்றுதலே சரியானது. அந்த விரைவும்தான் அக் கருத்துக்கு மாறுகொண்ட பகைவரைச் செயலிழக்க வைக்கிறது. இடனறிதல் என்கிற இவ்வதிகாரம் சுழிகொள்கிற புள்ளி இதுதான்.

இடனறிதலின் அவசியத்தை பின்வரும் மூன்று குறள்கள் தனித்தனி உதாரணங்களில் விளக்குகின்றன.

ஆழமான நீர்நிலையுள் முதலையானது எதையும் வென்றுவிடும். யானையைக்கூடத்தான். அதுவே நீர்நிலையை விட்டு வெளியே வந்தால் எதுவும் அதனைக் கொன்றுவிடும் (குறள் 495).

அதுபோலத்தான் போர் யானையானாற்கூட சேற்றிலே கால்கள் புதையப்பெற்றுவிட்டால் அதைச் சிறுநரிகளே கொன்றுவிடக்கூடியதாய் ஆகிவிடுகிறது (குறள் 497).

வலிய சில்லுகளையுடைய நெடுந்தேரால் கடலிலே ஓடமுடியாதுபோவதும், கடலில் ஓடும் கப்பலால் தரையில் ஓடமுடியாது போவதும்கூட அதுஅது அதனதன் இடத்தில் வலிது என்பதையே வற்புறுத்துகின்;றது (குறள் 496).

இம் மூன்று குறள்களும் உச்சிக் குறளின் அர்த்தத்தை விளக்குவதைமட்டுமே செய்கின்றன. எனினும் இவ்வுதாரணங்களில் ஒரு படிமுறை வளர்ச்சி இயல்பாய் அமைந்து இன்பம் செய்கிறது.

தன் இடம் நீங்கின் பிறவுயிர் முதலையைக் கொன்றுவிடும் என்பதில் ஒரு நிச்சயத் தன்மை வெளிப்பட்டது. கால்வல் நெடுந்தேர் கடலோடாதென்றபோது அதில் ஒரு பிரமாண்டம் உண்டாக்கிக் காட்டப்பட்டது. போர் யானையைக்கூட சரியான இடத்தில் சிறுநரி கொன்றுவிடும் என்றபோது அதிலொரு துணுக்கம் வருவிக்கப்பட்டது. இலக்கிய நயங்கள் தேர்வதற்கான குறள்களே இவை.

இவற்றின் மூலம் ஒருவருக்கான இடத்தின் அல்லது தளத்தின் வலிமையை வல்லிதில் தெரிவிக்கின்றான் வள்ளுவன்.

000

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்